திருத்தந்தை 5ம் நிக்கலஸ் திருத்தந்தை 5ம் நிக்கலஸ் 

திருத்தந்தையர் வரலாறு – திருத்தந்தை 5ம் நிக்கலஸ்

கிரேக்க இலக்கியங்களை மொழிபெயர்ப்பதற்கென ஒரு துறையையும், வத்திக்கான் நூலகத்தையும் உருவாக்கியவர் திருத்தந்தை 5ம் நிக்கலஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தந்தை 4ம் யூஜினுக்குப்பின் திருஅவையை வழிநடத்த தேர்ந்தெடுக்கப்பட்டவர் திருத்தந்தை 5ம் நிக்கலஸ். இவர் ஒரு புத்தகப் பிரியர், சிறந்த அறிவாளி. தொம்மாஸோ பரெந்துச்செல்லி (Tommaso Parentucelli) என்ற இயற்பெயர் கொண்ட இவர், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது 5ம் நிக்கலஸ் என்ற பெயரை எடுத்துக்கொண்டார். நிக்கலஸ் என்ற பெயரைத் தேர்ந்தெடுக்க ஒரு முக்கிய காரணமும் இருந்தது. பொலோஞ்ஞா ஆயராக இருந்த Niccolò Albergati என்பவர்தான் இவரை திருஅவைக்குள் பல ஆண்டுகள் (20 ஆண்டுகளுக்கு மேலாக) ஆதரவளித்து வளர்த்து விட்டவர்.

1397ஆம் ஆண்டு நவம்பர் 15ல் இத்தாலியின் Sarzana எனுமிடத்தில் பிறந்த பரெந்துச்செல்லி நல்ல அறிவாளியாக இருந்தும், ஏழ்மையின் காரணமாக பொலோஞ்ஞாவில் தன் கல்வியைப் பாதியிலேயே நிறுத்தவேண்டியிருந்தது. பொலோஞ்ஞா ஆயர் Niccolò Albergatiன் அன்பைப் பெற்ற இவர், தன் ஆழ்ந்த அறிவின் திறமை கொண்டு திருஅவைக்குள் பலரைக் கவர்ந்தார். நிறைய நூல்களைச் சேகரித்து வைத்திருந்தார் இவர். ஆயர் Albergati இறைபதம் அடைந்தபோது, பொலோஞ்ஞாவின் ஆயராக இவரே நியமிக்கப்பட்டார். ஆனால், அந்நகரில் இடம்பெற்றுவந்த குழப்பங்களால், இவரால் அந்த பொறுப்பை ஏற்க முடியவில்லை. இதனால் திருத்தந்தை 4ம் யூஜின் இவரை இத்தாலிக்கும் ஜெர்மனிக்குமான அரசியல் தூதுவராக நியமித்து, அதில் பரெந்துச்செல்லி சிறப்பாக பணியாற்றியதைத் தொடர்ந்து, அவரை 1446ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி கர்தினாலாகவும் உயர்த்தினார். அடுத்த ஆண்டே, அதாவது 1447ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி திருத்தந்தை 4ம் யூஜின் உயிரிழந்தபோது, இவர் திருத்தந்தையாக கர்தினால்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1447ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவர் பதவியேற்ற காலத்தில், திருஅவைக்குள் ஓரளவு ஒன்றிப்பு ஏற்கனவே இடம்பெற்றிருந்ததால், எதிர்ப்புகள் இன்றி இவரால் தன் பணியை எடுத்து நடத்த முடிந்தது. எதிர்திருத்தந்தை 5ம் பெலிக்ஸ் இவர் தலைமையை ஏற்றுக்கொண்டதுடன்(1449), Basle பொதுப் பேரவையும் இவரால் கலைக்கப்பட்டது.  கிறிஸ்தவ உலகின் தலைமை இடமாக உரோம் நகரை மேலும் அழகுபடுத்த விரும்பிய இத்திருத்தந்தை, கலைக்கும் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். உரோம் நகரின் சாலைகளைச் சீரமைத்தல், குடிநீர் வசதியைப் பெருக்குதல், புனித பேதுரு பேராலயத்தை சீரமைத்தல், திருத்தந்தையர்களின் உறைவிடத்தை சீர்செய்தல் ஆகியவைகளில் கவனம் செலுத்தி வெற்றியும் கண்டார் இத்திருத்தந்தை 5ம் நிக்கலஸ். கலைகளில் அதிக ஆர்வம் காட்டிய இத்திருத்தந்தை, நூல்களை அதிகம் விரும்பினார் என்று கூறலாம். கிரேக்க இலக்கியங்களை மொழிபெயர்ப்பதற்கெனவே வத்திக்கானில் ஒரு துறையை ஆரம்பித்தார் என்றால் இதனைப் புரிந்துகொள்ளலாம்.

இத்திருத்தந்தை, கலைஞர்களுக்குப் பெரும் உதவிகள் செய்தார். இன்று பெருமையாகப் பேசப்படும் வத்திக்கான் நூலகத்தைத் துவக்கியவர் இத்திருத்தந்தையே. உலகம் முழுவதும் துறவு இல்லங்களிலும், மறைமாவட்ட தலைமையகங்களிலும் கவனிப்பாரின்றி கிடந்த திருஅவை ஏடுகளைக் கவனமாகத் திரட்டி அதனை வத்திக்கானுக்கு கொண்டுவர வைத்து போற்றிப் பாதுகாக்க வழிவகுத்தவர் இத்திருத்தந்தை 5ம் நிக்கலஸே. ஏறக்குறைய ஐந்தாயிரம் பிரதிகளை இவ்வாறு சேகரித்தார். அதுமட்டுமல்ல. இவரே அடிக்கடி நூலகத்திற்குள் சென்று நூல்களை அடுக்கி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதேவேளை திருத்தந்தைக்குரிய நிர்வாகப் பொறுப்புகளையும் அவர் கைவிடவில்லை.

   இத்திருத்தந்தை 1455ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதிக்கும் 25க்கும் இடைப்பட்ட இரவில் காலமானார். எவ்வித பாரபட்சமுமின்றி சேவையாற்றி, உரோம் நகர், மற்றும் வத்திக்கானின் சீரமைப்பிலும், கலை மற்றும் கல்வி வளர்ச்சியிலும் பெரும்பங்காற்றிய இத்திருத்தந்தை, வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறார் எனக் கூறலாம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 August 2022, 13:52