'Called To Serve' என்ற புதிய நூல்  வெளியீடு 'Called To Serve' என்ற புதிய நூல் வெளியீடு  

புதிய ஆசிய கர்தினால்களுக்குப் பாராட்டு

கர்தினால் நிலைக்கு உயர்த்தப்பட்ட ஆறு புதிய ஆசிய கர்தினால்கள் குறித்தும், சிறப்பாக அவர்களில் இரண்டு இந்தியக் கர்தினால்கள் குறித்தும் நாம் பெருமிதம் கொள்கின்றோம் : கர்தினால் கிரேசியஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என்ற முறையில் நம் அனைவருக்கும் ஒத்துழைப்பும் உற்சாகப்படுத்துதலும் தேவைப்படுகின்றன என்று இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 30, இச்செவ்வாய் மாலையில், ஆசியாவின் புதிய கர்தினால்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும்வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் ஒன்றில் இவ்வாறு தெரிவித்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், நம்பிக்கையைப் பற்றி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால்கள் அவையில் வலியுறுத்தியதாகவும், தூய ஆவியானவரே இதனைக் குறித்து பேச அவரைத் தூண்டி எழுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.  

அருள்பணித்துவத்திற்கான அவர்களின் அழைப்புக்குப் பதிலளிப்பதில் ஒட்டுமொத்த ஆசியத் திருஅவையும் ஒருபடி முன்னேறிச் செல்லும் என்று தான் நம்புவதாகக் கூறியுள்ள கர்தினால் கிரேசியஸ் அவர்கள், திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் திருஅவைக்குப் பணியாற்ற அழைக்கப்படுகிறார்கள் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

தனது அருள்பணித்துவ வாழ்வின் 50-ஆம் ஆண்டையும், ஆயர் திருநிலைபாட்டின் 25-ஆம் ஆண்டையும் கொண்டாடி மகிழும் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்களின் வாழ்வு பற்றி கூறும் Called To Serve என்ற புதிய நூல் ஒன்றும் இவ்விழாவில் வெளியிடப்பட்டது. இப்பொன்விழா மற்றும் வெள்ளிவிழா குறித்து கர்தினால்கள் பலரும் அவருக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

கர்தினால் கிரேசியஸ் அவர்கள், ஓர் அற்புதமான மனிதர் என்றும், கிறிஸ்துவில் தனது வாழ்க்கையை நங்கூரமிடக் கற்றுக்கொண்ட ஒரு கிறிஸ்தவர் என்றும்  புகழாரம் சூட்டிய கோவாவின் புதிய கர்தினால் பிலிப் நேரி அவர்கள், 'கிறிஸ்துவில் எல்லாவற்றையும் ஒப்புரவாக்க' என்ற தனது விருதுவாக்கின்படி கிறிஸ்துவில் தனது நம்பிக்கையை உற்சாகமாக அறிவிக்கும் ஒரு சிறந்த ஆயர் என்றும் கூறியுள்ளார்.

இந்த மாலை நிகழ்வில் மிகச் சிறந்த மனிதரும்,அருள்பணியாளரும், பண்பாளரும், மற்றும் அறிஞருமான கர்தினால் கிரேசியஸ் அவர்களைப் பாராட்டுவதில் மகிழ்கின்றேன் என்று தெரிவித்துள்ளார், புதிய கர்தினால் நிலைக்கு உயர்த்தப்பட்ட இறைவழிப்பாட்டுப் பேராயத்தின் தலைவர் Arthur Roche. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 August 2022, 14:29