அசிசி நகரின் Porziuncola  சிற்றாலயம் அசிசி நகரின் Porziuncola சிற்றாலயம்  

நிறைபேறு பலன்கள் தரும் Porziuncola சிற்றாலயம்

நான்காம் நூற்றாண்டில் அசிசி நகரில் கட்டி எழுப்பப்பட்டு வானதூதர்களின் புனித மரியாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட Porziuncola சிற்றாலயம், அசிசி நகர் புனித பிரான்சிசுக்கு மிகவும் விருப்பமான இடமாகும்

மெரினா ராஜ் - வத்திக்கான்

எனது கோவிலை மீண்டும் கட்டி எழுப்பு என்ற கிறிஸ்துவின் கட்டளைக்கு இணங்க புனித பிரான்சிஸ் அசிசியாரால் கட்டி எழுப்பப்பட்ட Porziuncola சிற்றாலயம், பிரான்சிஸ்கன் துறவறத்தாரின் இதயம் போன்றது எனவும், அவ்விடம் நிறைபேறுபலன்களைப் பெற்றுத்தரும் சிறந்த இடம் எனவும், அருள்பணி David Convertino அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 2ம் தேதி, நிறைபேறு பலன்களைப் பெற்றுத்தரும் சிறப்பான நாள் எனவும் இந்நாளில் தங்களது பாவங்களுக்காக மனம் வருந்தி, ஒப்புரவு அருளடையாளத்தைப்  பெற்று திருப்பலியில் பங்கெடுத்து திருநற்கருணை உட்கொள்பவர்கள், மற்றும் திருத்தந்தையின் கருத்துக்களுக்காகச் செபிப்பவர்கள் நிறைபேறு பலன்களை அடைவார்கள் எனவும், பிரான்சிஸ்கன் சபையின் அருள்பணியாளரும், அச்சபையின் மறைப்பணி ஒன்றியத்தின் இயக்குநருமான அருள்பணி Convertino அவர்கள், CNA செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

நான்காம் நூற்றாண்டில் அசிசியில் கட்டி எழுப்பப்பட்டு வானதூதர்களின் புனித மரியாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட Porziuncola சிற்றாலயம், அசிசி நகர் புனித பிரான்சிசுக்கு மிகவும் விருப்பமான இடம் என்பதால், பிரான்சிஸ்கன் சபைத் துறவிகளின் தாயில்லமாக, பிரான்சிஸ்கன் பாரம்பரியத்தின் சிறப்பாக மாறிவிட்டது எனவும், புனித அசிசியார் தன்னுடைய இறுதி நாள்களில் இச்சிற்றாலயத்தை பார்த்தவாறே தனது படுக்கையை அமைத்துக்கொண்டார் என்பதிலிருந்து அவர் இவ்விடத்தின்மீது கொண்ட பற்று வெளிப்படுகின்றது எனவும் அறிவித்துள்ளார், அருள்பணி Convertino.

கடவுளை மிக நெருங்கிச் செல்ல உதவும் எந்த வகை செபமும் சிறந்த செபமே அவ்வகையில் நிறைபேறுபலன்களை அடைய உதவும் இச்சிற்றாலயம், கடவுளின் அருளால் அதிகமாக நிரப்பப்பட்டு, தூய ஆவியின் வருகை அதிகமாக இருப்பதை தான் உணர்வதாக புனித பிரான்சிஸ் அசிசியார் கூறியதை, Celanoவின் துறவி தாமஸ் அவர்கள் எழுதிய அசிசி நகர் புனித பிரான்சிசின் வாழ்வு என்ற புத்தகத்தில் பதிவுசெய்துள்ளதையும் எடுத்துக் கூறினார் அருள்பணி Convertino.

இச்சிற்றாலயத்தின் மீது இப்பேராலயம் கட்டப்பட்டிருப்பது உலகினர் மற்றும் கத்தோலிக்கத் திருஅவையின் பல்வேறு குழுக்கள், உடன்பிறந்த உணர்வோடு வாழ வேண்டும் என்பதை எடுத்துரைப்பதாகவும், அசிசிக்கு வரும் ஒவ்வொரு முறையும் அதிகப்படியான அனுபவம் தரும் ஆற்றல் மிக்க இடமாக இருப்பதாகவும் தெரிவித்தார், அவர். மேலும் அவர், இச்சிற்றாலயத்தின் நுழைவாயிலில் வரையப்பட்டிருக்கும் அழகிய மலர்களுடனான புனித பிரான்சிஸ் அசிசியாரின் படம் நிறைபேறுபலன்களை அன்னை மரியாவிடமிருந்தும் இயேசுவிடமிருந்தும் பெற்றுத்தருவதும் போலவும் இருப்பதாக எடுத்துரைத்தார்.

இப்படத்திற்கான வரலாற்றுக் கதையாக, புனித அசிசியார் இயேசுவிடம் நிறைப்பேறுபலன்களை அடைய என்ன வழி என்று கேட்க, அதற்கு இயேசு, என் தாயாம் அன்னை மரியாவிடம் நீ இதனைக் கேட்பது நல்லது என்று கூறுவது போல அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. (CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 August 2022, 15:39