பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் பெருவெள்ளப் பாதிப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பாகிஸ்தானில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல குடும்பத்தினர் தங்களின் வீடுகளை மீண்டும் கட்டி எழுப்ப முடியும் என்ற நம்பிக்கையை இழந்துள்ளனர் என்று அந்நாட்டின் அருள்பணியாளர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தைத் தாக்கிய வழக்கத்திற்கு மாறான கனமழை மற்றும் திடீர் வெள்ளம், கிறிஸ்தவர்களுக்கும் அவர்தம் வழிபாட்டுத் தலங்களுக்கும், அவர்கள் நடத்தும் நிறுவனங்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவ்வாறு தெரிவித்துள்ளார் குவெட்டாவிலுள்ள புனித ஜான் வியானி ஆலயத்தின் பங்குத்தந்தை சாம்சன் ஷாகிர்.
பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனது பங்கு மக்களைப் பார்க்கச் சென்றபோது, அவர்களைப் பாதுகாப்பாக இருக்கும்படி தான் கேட்டுக்கொண்டதாகவும், அதேவேளையில், ஏழைகளின் வீடுகள் சேற்றில் மூழ்கியிருப்பதைப் பார்த்தபோது, தனது மனம் மிகவும் வேதனை அடைந்தது என்றும் கவலை தெரிவித்துள்ளார் அருள்பணி ஷாகிர்.
இப்பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க அதிகமான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு, தேசிய மற்றும் மறைமாவட்ட உதவிக் குழுக்களைக் மறைமாவட்ட ஆயர் வலியுறுத்தியதாகவும், பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்புடன் இணைந்து மீட்புப்பணிகளை மேற்கொண்டு அவர்களுக்கு உதவிகளை வழங்குமாறு பரிந்துரைத்துள்ளதாகவும், பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பின் இயக்குநர் அம்ஜத் குல்சார் அவர்களும் கூறியுள்ளார்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் புள்ளிவிவரங்களின்படி, பலுசிஸ்தானில் கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இவ்வாண்டு ஜூலை மாதம் பெருமழைக் கொட்டியுள்ளது என்றும், இதனால் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் காரணமாக ஏறத்தாழ 554 பேர் இறந்துள்ளதுடன், 990 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், 46,200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன என்றும் தெரியவந்துள்ளது. (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்