ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்டபோது (கோப்புப்படம்) ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்டபோது (கோப்புப்படம்) 

வன்முறை இல்லாமல் அமைதி சாத்தியமே: பேராயர் Kikuchi

“கத்தோலிக்கர்கள் அமைதியை உருவாக்கும் முயற்சியில் தங்களின் கூட்டொருமைப்பாட்டை வெளிப்படுத்த முயற்சிகள் எடுக்கவேண்டும்”- பேராயர் கிகுச்சி

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வன்முறை இல்லாமல் அமைதி சாத்தியமே என்றும், அதனை வளர்க்கவேண்டியது கத்தோலிக்கர்களின் கடமை என்றும், ஜப்பானில் நடைபெற்று வரும் அமைதிக்கான பத்து நாள்கள் இறைவேண்டல் வழிபாட்டு நிகழ்வொன்றில் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

1945-ஆம் ஆண்டு ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களும், அணுகுண்டுகளால் தாக்கப்பட்டதன் 77ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 6 முதல் 15 வரை ஜப்பான் தலத்திருஅவையால் நடத்தப்படும் இறைவேண்டல் வழிபாட்டு நிகழ்வின்போது இவ்வாறு தெரிவித்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

உலகின் அமைதி மற்றும் அனைத்துலகப் பாதுகாப்பிற்கு, அணு சக்தி முன்வைத்துள்ள புதிய அச்சுறுத்தல்கள் குறித்து, 2020, செப்டம்பர் 2, அன்று நடைபெற்ற திருத்தந்தையின் பொது மறைக்கல்வியுரை, மற்றும், ஏப்ரல் 17 அன்று திருத்தந்தை வழங்கிய ஊர்பி எத் ஓர்பி உயிர்ப்பு தினச் செய்தி ஆகியவற்றிலிருந்தும் கருத்துக்களை எடுத்துக்காட்டி பேசியுள்ளார், ஜப்பானின் கத்தோலிக்க ஆயர் பேரவைத் (CBCJ) தலைவரும், டோக்கியோவின் பேராயருமான ஐசாவோ கிகுச்சி (Isao Kikuchi).  

கோவிட்-19 பெருந்தொற்றின்போது, ஒன்றிணைந்த நிலையில் ஒருவரையொருவர் ஆதரிப்பதே உயிரைப் பாதுகாக்க சிறந்த வழி என்பதை அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொண்டோம். ஆனால் இப்போது, உக்ரைன்மீதான இரஷ்யாவின்  ஆக்கிரமிப்பிற்குப் பிறகு, வன்முறையின் வழியாக நாம் அமைதியை அழிக்க முடியும் என்பதை உணர்ந்துள்ளோம் என்றும், இவ்வன்முறை உண்மையான அமைதியை அழித்துவிடும் என்றும் எச்சரித்துள்ளார் பேராயர் கிகுச்சி

வறுமை, பொருளாதார நெருக்கடிகள், துன்புறுத்தல்கள் மற்றும் வெவ்வேறு காரணங்களுக்காகத் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட மக்கள் உட்பட மனித வாழ்க்கை தொடர்பான பிற முக்கியமான, ஆனால், புறக்கணிக்கப்பட்ட பிரச்சனைகளைவிட, போர் மிகவும் சக்தி வாய்ந்ததாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார் பேராயர் கிகுச்சி

வன்முறை இல்லாமல் அமைதி சாத்தியமே என்று எடுத்துரைத்துள்ள பேராயர்  கிகுச்சி அவர்கள், கத்தோலிக்கர்கள் அமைதியை உருவாக்கும் முயற்சியில் தங்களின் கூட்டொருமைப்பாட்டை வெளிப்படுத்த முயற்சிகள் எடுக்க இந்தப் பத்து நாள் இறைவேண்டல் வழிபாட்டை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1985-ஆம் ஆண்டு பிப்ரவரி 25-ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவர்கள், ஜப்பானுக்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின்போது, அமைதி நிலவ ஹிரோஷிமாவில் வேண்டுகோள்விடுத்ததன் நினைவாக இந்தப் பத்து நாள் இறைவேண்டல் வழிபாடு ஜப்பானிய ஆயர்களால் தொடங்கப்பட்டது. இது ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 6 முதல் 15 வரை நடத்தப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 August 2022, 13:39