இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி : ACC கவலை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பொருளாதார நெருக்கடிகளால் முடங்கிப்போயிருக்கும் இலங்கை நாட்டிற்கு உதவிட பன்னாட்டுத் தலையீடு மற்றும் ஒன்றிணைந்த முயற்சிகள் தேவை என்று CCA எனப்படும் ஆசிய கத்தோலிக்க அமைப்பின் தலைவர் Mathews George Chunakara தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் உயர் கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் கொண்ட நாடாகப் போற்றப்பட்ட இலங்கை, தற்போது பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் உறுதியற்றத்தன்மையால் கௌரவத்துடன் வாழப் போராடும் நாடாக மாறியுள்ளது என்று கவலைதெரிவித்துள்ளார் Mathews George Chunakara
நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அரசியல் கொந்தளிப்பு மற்றும் சமூக எழுச்சியை ஏற்படுத்தியுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது CCA எனப்படும் ஆசிய கத்தோலிக்க அமைப்பு.
நாட்டின் பொருளாதாரச் சரிவு மற்றும் மோசமான நிலைமை காரணமாக, பணவீக்க உயர்வு, விளைபொருட்களின் விலை அதிகரிப்பு, பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு, எரிபொருள் மற்றும் மருந்து பற்றாக்குறை போன்றவை நாட்டில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன என்று தனது கவலையைப் பதிவு செய்துள்ள ஆசிய கத்தோலிக்க அமைப்பு, இதன் காரணமாக நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டு வன்முறை அதிகரிதுள்ளதுடன் மனித உரிமை மீறல்களும் அதிகம் நடந்தேறி வருகின்றன என்றும் விவரித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையில் ஏறத்தாழ 57 இலட்சம் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் இவர்களில் பாதி பேர் குழந்தைகள் என்றும் ஐக்கிய நாடுகள் அவை மதிப்பிட்டுள்ளது. அதேவேளையில், இலங்கையில் உள்ள இரண்டு குழந்தைகளில் ஒருவருக்கு உணவு, மருத்துவம், தூய்மையான நீர், கல்வி மற்றும் மனநலம் உட்பட நலப்பணிகளில் சில வகையான உதவிகள் தேவைப்படுவதாக UNICEF நிறுவனமும் சுட்டிக்காட்டியுள்ளது. (Fides)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்