விவிலியத் தேடல்:திருப்பாடல் 33-7-நம்பினோரைக் கைவிடாதக் கடவுள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘தனக்கஞ்சுவோரை வாழ்விக்கும் கடவுள்!’ என்ற தலைப்பில் திருப்பாடல் 33-இல் 18, 19 ஆகிய இரண்டு இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 20 முதல் 22 வரையுள்ள இறைவசனங்களைக் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவுக்குக் கொணர்வோம். இப்போது இறை ஒளியில் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம். நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! (வசனம் 20-22).
ஒருமுறை கடவுளின் பக்தர் ஒருவர் நூற்றுக்கணக்கான மக்களோடு கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். கப்பல் பயணிகளில் பெரும்பாலோர் கேளிக்கை நிகழ்ச்சிகளில் பொழுது போக்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் எல்லாருமே மது அருந்தியதால் நிலை தடுமாறியிருந்தனர். ஒருவருக்கொருவர் கேலிபேசியும், வேடிக்கைகள் செய்தும், சண்டை சச்சரவுகள் ஏற்படுத்தியும் பொழுது போக்கிக் கொண்டிருந்தனர். ஆனால், இவற்றையெல்லாம் அந்தப் பக்தர் கண்டுகொள்ளாமல் அமைதியாகக் கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தார். இதனால், அப்பயணிகளில் சிலர் அந்தப் பக்தரைச் சூழ்ந்து கொண்டு கேலியும், கிண்டலும் செய்தனர். ”எங்களைப் போல வாழ்க்கையை அனுபவிக்காமல், கடவுளோடு உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறதே! உம்முடன் உரையாடும் அளவுக்குக் கடவுள் அவ்வளவு எளியவராகி விட்டாரா?” என்று ஏளனப் பேச்சுப் பேசத் தொடங்கினர். அந்தப் பக்தர் சற்றும் கோபம் கொள்ளாமல் அவர்களைப் பார்த்து ”என் நண்பர்களே! கடவுள் என்னுடன் மட்டுமல்ல, தம்மைச் சந்திக்க வரும் எல்லா மக்களிடமும் உரையாட விரும்பும் கருணை உள்ளம் படைத்தவர்!” என்று கூறினார். அதற்கு அவர்கள் ”அப்படியானால், எங்களுக்கு ஏதாவது உதவிவேண்டும் என்றால் உம் வழியாகக் கடவுளிடம் அதைப் பெறலாம் போலிருக்கிறதே!” என்று கூறிப் பயணிகள் இன்னும் கேலியாகச் சிரித்தனர். ”கடவுளின் உதவியைப் பெறுவதற்கு என்னுடைய தயவே உங்களுக்குத் தேவையில்லை. கடவுளிடம் வேண்டினால், அவர் நிச்சயமாக யாருக்கு வேண்டுமானாலும் உதவி செய்வார்!” என்று பணிவான குரலில் கூறினார் அந்தப் பக்தர். அவருடைய பேச்சைக் கேட்டப் பயணிகள் மேலும் பரிகாசச் சிரிப்பொலி எழுப்பினர். அந்தப் பக்தரோ, சகப் பயணிகளின் நடவடிக்கைகளைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல். தன்போக்கில் அமைதியாக இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடிரென்று வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. பெரும் சூறாவளிக் காற்றுடன் பெருமழைக் கொட்டத் தொடங்கியது. கடலில் எழுந்த பேரலைகளின் நடுவே கப்பல் தத்தளிக்கத் தொடங்கியது. கப்பலைக் கட்டுப்படுத்த மாலுமி முயன்றார். ஆனால் பலனில்லை. கப்பல் திசைமாறித் தாறுமாறாகச் செல்லத் தொடங்கியது. கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகளுக்கு அச்சமும், குழப்பமும் ஏற்பட்டது. கப்பல் கவிழ்ந்து தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று அவர்கள் பேரச்சம் கொள்ளத் தொடங்கினர்.
அப்போது கப்பல் மாலுமி, “என்னால் கப்பலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கப்பல் திசைமாறித் தன் போக்கில் நடுக்கடலுக்குச் சென்றுவிட்டது. அருகில் கரை இருக்குமா என்பது தெரியவில்லை. நாளைக் காலைக்குள் நாம் கரையை அடையாவிட்டால் நம்மிடம் இருக்கும் உணவும், தண்ணீரும் காலியாகி விடும். பிறகு பசியும், பட்டினியுமாக நடுக்கடலில் நாம் இறக்க வேண்டியதுதான்!” என்று கவலை தெரிவித்தார். அப்போது, பயணிகள் அனைவரும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகினர். அவர்கள் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. உடனே ஒவ்வொருவரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சிந்திக்கத் தொடங்கினர். உயிர் தப்புவதற்கு அவர்களுக்கு வேறு எந்தவழியும் புலப்படவில்லை. அப்போது அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அந்தப் பக்தரிடம் ஓடிவந்தனர். “ஐயா! சற்றுமுன் நாங்கள் கடவுளையும் உம்மையும் இழித்தும், பழித்தும் பேசியதன் காரணமாகத்தான் இப்படி ஓர் ஆபத்தில் சிக்கிக் கொண்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. தாங்கள் கடவுளுடன் நெருக்கமான அன்பு கொண்டவர் என்பதால் கடவுளிடம் எங்களுக்காகப் பரிந்து பேசி, எங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள்” என்று வேண்டினர். அப்போது அந்தப் பக்தர், “கடவுள் அதனையெல்லம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார். காரணம், நாம் அவரது குழந்தைகள். அவரது உருவிலும் சாயலிலும் அவரால் உருவாக்கப்பட்டவர்கள். அவர் ஒருதுபோதும் நம்மைக் கைவிடமாட்டார். குறிப்பாக, நாம் அவரை நம்பி இருக்குபோது, அவரே நமக்குப் பாதுகாப்பும், துணையும் கேடயமுமாக இருப்பார் என்றும் கூறினார். மேலும், “இப்போது நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நாம் அனைவரும் ஒன்றிணைந்து அவரை நோக்கி அபயக் குரலெழுப்பி வேண்டுதல் செய்வோம் வாருங்கள்” என்று அழைத்தார். உடனே அனைவரும் மண்டியிட்டு வானத்தை நோக்கிக் கரங்களை எழுப்பி வேண்டத் தொடங்கினர். அவர்களின் தொடர் வேண்டுதலின் பயனாக, மழை நின்றது, காற்றும் ஓய்ந்தது. மறுநாள் காலை அவர்கள் அழகியதொரு தீவை அடைந்தனர். இந்தப் பேராபதிலிருந்து தங்களைக் காப்பாற்றிய கடவுளுக்கு அந்தப் பக்தருடன் இணைந்து நன்றி கூறி மகிழ்ச்சிக் கடலில் திளைத்தனர்.
தாவீது அரசர் தான் அனுபவித்த எல்லாவிதமான துன்ப துயரங்களிலும் கடவுளை மட்டுமே தனது பாதுகாப்பும் அரணுமாகக் கொண்டிருந்தார். வாழ்வின் எல்லா நிலைகளிலும் நம் முதுபெரும் தந்தை ஆபிரகாமைப் போல, தாவீது அரசர் கடவுளை மட்டுமே முற்றிலும் சார்ந்திருந்தார். தனது எதிரிகளை வீழ்த்தி தன்னை கடவுள் எப்படியும் காப்பாற்றுவார் என்று அவர் உறுதியாக நம்பினார். அதனால்தான், தான் மேற்கொண்ட எல்லாப் போர்களிலும் வெற்றிவாகை சூடி, கடவுள் தன்னிடம் ஒப்படைத்த இஸ்ரயேல் மக்களை நாற்பது ஆண்டுகள் கண்ணும் கருதுமாகப் பாதுகாத்து வழிநடத்தினார். ஆண்டவர்மீதான அவரது அசைக்க முடியாத நம்பிக்கையும், உறுதியான மனமும் அவரது அனைத்து வெற்றிகளுக்கும் அடிப்படைக் காரணமாக அமைந்தன.
ஆண்டவர் தாமே தம் மக்களின் வலிமை; தாம் திருப்பொழிவு செய்தவர்க்கு அவரே பாதுகாப்பான அரண் (திபா 27:8) என்றும், ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்; என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண். போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன் (திபா 18:2) என்றும், ஏனெனில், கடவுளாகிய ஆண்டவர் நமக்குத் கதிரவனும் கேடயமுமாய் இருக்கின்றார்; ஆண்டவர் அருளையும் மேன்மையையும் அளிப்பார்; மாசற்றவர்களாய் நடப்பவர்களுக்கு நன்மையானவற்றை வழங்குவார் (திபா 84:11) என்றும், வேறுசில திருப்பாடல்களிலும் எடுத்துரைக்கின்றார். மேலும், இணைச்சட்ட நூலில், மோசே இஸ்ரயேல் மக்களுக்கு ஆசீர் கூறும்போது இவ்வாறு கூறுகின்றார். இஸ்ரயேலே! நீ பேறு பெற்றவன்; ஆண்டவரால் மீட்கப்பட்ட மக்களினமே! உன்னைப்போல் வேறு இனம் உண்டோ? உன்னைக் காக்கும் கேடயமும் உன் வெற்றி வாளும் அவரே! உன் பகைவர் உன்முன் கூனிக் குறுகுவர்! அவர்களின் தொழுகைமேடுகளை நீ ஏறி மிதிப்பாய் (இச 33:29). மோசேயின் இந்த வார்த்தைகள் வழியாக, யாவே இறைவன் தான் தெரிந்துகொண்ட இஸ்ரயேல் மக்களின் பாதுகாப்பு அரணாகவும், கேடயமாகவும், வெற்றியாகவும் விளங்குகிறார் என்பதை அறியமுடிகிறது.
திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் தொடக்க அதிகாரத்தை ‘கடவுள் வாழ்த்து’ என்றுதான் பெயரிட்டுள்ளார். எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்ற அர்த்தத்தில், அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு (குறள் 1) என்று தொடங்கியுள்ளார். கடவுள் ஒருவர் இருக்கிறார்; அவரை நினைந்து வாழ்த்தி வணங்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டு அமைந்துள்ளது 'கடவுள் வாழ்த்து' என்னும் முதல் அதிகாரம். ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இறைவன், தனக்கு உவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான் என்ற அடைமொழிகளால் இவ்வதிகாரத்தில் இறைவனைப் பாடுகிறார் திருவள்ளுவர். கடவுளை நினைப்பவர் நலமாக வாழ்வர்; அவர்கள் துன்பங்களிலிருந்து எப்போதும் காப்பாற்றப்படுவர்; அவர்களிடம் நல்வினை தீவினை தாக்கம் இருக்காது; அவர்கள் நீடித்து வாழ்வர்; அவர்களது தீராதத் துயரங்களுக்கு விடுதலைக் கிடைக்கும்; குற்ற உணர்ச்சிகளிலிருந்து அவர்கள் மீட்கப் பெறுவர்; வாழ்க்கை என்னும் கடலைக் கடந்து கரை சேர்வர் போன்ற பயன்களும் இக்குறள்பாக்களில் கூறப்படுகின்றன.
குரு ஒருவர் ஒரு மரத்தின் நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற ஒரு படைவீரன் அவரை அடையாளம் கண்டு, அவர் மீது இருந்த வெறுப்பினால் அவரைக் கொன்று விட முடிவு செய்து, வாளை உருவிக்கொண்டு அவர் அருகில் சென்றான். படைவீரன் வரும் சத்தம் கேட்டு விழித்தார் அந்தக் குரு. அப்போது அந்தப் படைவீரன், ஏய் குருவே, இப்போது உன்னை யார் காப்பாற்றுவார் பார்ப்போம் என்று கூறியபடி அவரை நோக்கி முன்னேறினான். அதற்கு அந்தக் குரு, “இறைவன் தான் என்னைக் காப்பாற்றுவார்” என்று உரத்து சத்தமிட்டுக் கூறினார். அந்தக் குரல் தந்த அதிர்ச்சியில் அப்படைவீரன் கையிலிருந்து வாள் நழுவியது. அந்த வாளை கைப்பற்றிய குரு, அதனை எடுத்துக் கொண்டு அவனிடம், “இப்போது, உன்னை யார் காப்பாற்றுவார்?” என்று கேட்டார். அதற்கு அவன், “என்னைக் காப்பாற்ற யாருமே இல்லை குருவே” என்று கதறினான். அப்போது அந்தக் குரு புன்முறுவலுடன், “இல்லை நண்பரே, உம்மையும் அந்த இறைவன்தான் காப்பாற்றுவார்” என்று கூறியபடி அந்த வாளை அவனிடமே திரும்பக் கொடுத்தார். அந்த வீரன் தன் செயல் குறித்து வெட்கித் தலை குனிந்தான். அன்றே அவரது சீடரானான். நமது அன்றாட வாழ்வில் நாம் கடவுளை நம்பி வாழும்போது அவரது காக்கும் கரங்கள் என்றும் நம்மோடு இருக்கும். அவரை மட்டுமே நாம் முழுமையாகச் சார்ந்திருக்குபோது அவரது பேரன்பு நம்மைச் சூழ்ந்து சுடர்விடும் விளக்காக மாறும். ஆகவே, இத்தகைய மாறாத அன்புகொண்ட இறைவனில் நாம் என்றும் நிலைத்து வாழ்வதற்கான அருளை இந்நாளில் இறைஞ்சுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்