அன்னை தெரேசாவின் 25 ஆம் ஆண்டு நினைவு தினக் கொண்டாட்டத்தின் போது பிறரன்பு சபை அருள்சகோதரிகள் அன்னை தெரேசாவின் 25 ஆம் ஆண்டு நினைவு தினக் கொண்டாட்டத்தின் போது பிறரன்பு சபை அருள்சகோதரிகள் 

புனித அன்னை தெரேசா இறந்த 25-ஆம் ஆண்டு யூபிலி விழா

“அன்னை தெரசா 25 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வுலகை விட்டு மறைந்தாலும், அவர் இன்றும் உயிருடன் இருப்பதாகவே நான் உணர்கிறேன்”: Thomas D'Souza

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

எங்கள் யூபிலி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் குழந்தைகள் மற்றும் பிற குழந்தைகளுக்காக மாநிலத் தலைநகரில் ஒரு புதிய தினப் பராமரிப்பு மையத்தைத் திறந்துள்ளோம் என்று புனித அன்னை தெரேசா பிறரன்பு சபையின் சகோதரி கிறிஸ்டி கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கொத்தாவில் நடைபெற்ற புனித அன்னை தெரேசா இறந்த 25-ஆம் ஆண்டு யூபிலி விழாக் கொண்டாட்டத்தின்போது, இவ்வாறு கூறிய அச்சபையின் சகோதரி கிறிஸ்டி அவர்கள், அந்நாளில் எங்கள் சகோதரிகள் கொல்கத்தாவின் தெருக்களில் சென்று ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்களை விநியோகித்தார்கள் என்றும் தெரிவித்தார்.

இந்தத் தினப் பராமரிப்பு மையம் சத்தான உணவு, உடைகள் மற்றும் குழந்தைகளுக்கான பிற அடிப்படைத் தேவைகளை வழங்குவதோடு, அவர்களின் திறன்கள் மற்றும் ஆர்வத்தைப் பொறுத்து வரைதல் வகுப்புகள் மற்றும் தொழிற்கல்வி படிப்புகளை ஏற்பாடு செய்யும் என்று அருள்சகோதரி கிறிஸ்டி அவர் மேலும் கூறினார்.

மேலும், இந்தியா முழுவதும் இச்சபையால் நடத்தப்படும் அனைத்துக் கன்னியர் இல்லங்கள் மற்றும் நிறுவனங்கள் அவரது நினைவு தினத்தை சிறப்புத் திருப்பலி  மற்றும் இறைவேண்டல் கொண்டாட்டங்களுடன் நினைவு கூர்ந்தன என்றும் சகோதரி கிறிஸ்டி கூறினார்.

அன்னை தெரசா 25 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வுலகை விட்டு மறைந்தாலும், அவர் இன்றும் உயிருடன் இருப்பதாக நான் உணர்கிறேன் என்றும், ஏழைகள் மற்றும் கைவிடப்பட்டவர்களுக்காக அவர் தொடங்கிய பணிகள் வழியாக அவரது பாரம்பரியம் தொடர்ந்து வாழ்கிறது என்று கூறினார் யூபிலி விழாத் திருப்பலியைத் தலைமை ஏற்று சிறப்பித்த கொல்கொத்தாவின் பேராயர் Thomas D'Souza

மேற்கு வங்கக் கத்தோலிக்கச் சங்கம் அன்னை தெரேசா இல்லத்திற்கு அருகில் உள்ள ஆலன் பூங்காவில் அமைந்துள்ள அன்னையின் திருவுருவத்திற்கு அவருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்த பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் அரசியல் தலைவர்கள் உட்பட பல முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

1950-ஆம் ஆண்டு அன்னை தெரசா நிறுவிய பிறரன்பு சபையில் தற்போது ஏறத்தாழ 4,500 சகோதரிகள் உள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 136 நாடுகளில் இச்சபைக்கு 700 இல்லங்கள் உள்ளன. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 September 2022, 13:37