'பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்' சூழலியலை மதிப்பதன்...
மேரி தெரேசா: வத்திக்கான்
கிறிஸ்தவ ஒன்றிப்பு இன்றி, உலகளாவிய பொருளாதார அமைப்பில் நீதியும் நியாயமும் இடம்பெற முடியாது என்று, இத்தாலியின் அசிசி நகரில் நடைபெற்றுவரும் 'பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்' என்ற நிகழ்வில் பங்குபெறும் சுவிட்சர்லாந்து நாட்டு இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபையின் Adrian Pust அவர்கள் வத்திக்கான் செய்திகளிடம் கூறியுள்ளார்.
இளம் பொருளாதார வல்லுநர்கள், இளம் தொழில்முனைவோர், மற்றும், மாணவர்கள் கலந்துகொள்கின்ற இந்நிகழ்வில் பங்குபெறுகின்ற Adrian Pust அவர்கள், உலகளாவிய பொருளாதாரத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கியுள்ளார்.
Laudato si' அதாவது இறைவா உமக்கே புகழ், Fratelli tutti அதாவது அனைவரும் உடன்பிறந்தோர் ஆகிய இரு திருமடல்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ள மதிப்பீடுகள், இயற்கை, நீடித்த நிலையான வளர்ச்சி மற்றும், நியாயமான உலகளாவிய பொருளாதார அமைப்புகள் ஆகியவற்றுக்கு இன்றியமையாதவை என்றும் Adrian Pust அவர்கள் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத் துறைகளில் பணியாற்றும் பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சார்ந்த பிரதிநிதிகள் 'பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்' என்ற நிகழ்வில் கலந்துகொண்டு கிறிஸ்தவ ஒன்றிப்பின் முக்கியமான விழுமியங்கள் குறித்த தங்களின் கருத்துக்களைப் பதிவுசெய்து வருகின்றனர்.
சுற்றுச்சூழலை மதிப்பதன் ஓர் அடையாளம்
மேலும், 'பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்' என்ற நிகழ்வு, சுற்றுச்சூழலை மதிப்பதன் ஓர் அடையாளமாக இருக்கிறது என்று, இத்தாலியில் "படைப்பின் பாதுகாவலர்" என்ற திட்டத்தின் தலைவர் Giuseppe Lanzi அவர்கள் கூறியுள்ளார்.
செப்டம்பர் 22, இவ்வியாழன் முதல், 24, இச்சனிக்கிழமை வரை அசிசியில் நடைபெறும் 'பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்' என்ற நிகழ்வில் பங்குபெற்றுவரும் லான்சி அவர்கள், திருத்தந்தையின் Laudato si' திருமடலின் அறிவுரைகளை நடைமுறைப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து விளக்கியுள்ளார்.
நெகிழி பாட்டில்களையும், மறுசுழற்சிக்குப் பயன்படாத பொருள்களையும் பயன்படுத்துவதில்லை, மாறாக, மீண்டும் பயன்படுத்தப்படும் தண்ணீர் பாட்டில்களை இளையோருக்கு வழங்கி வருகின்றோம், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட உம்பிரியா மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருள்களைப் பயன்படுத்த ஊக்கப்படுத்துகிறோம் என்று லான்சி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்