அனைத்துப் புனிதர்கள் பெருவிழா   அனைத்துப் புனிதர்கள் பெருவிழா  

வழிசொல்லும் ஒளிச்சுடர்: அனைத்துப் புனிதர்கள் பெருவிழா

புனிதர்களாக ஆவதற்கு வயது வரம்போ, பதவியோ பட்டமோ மொழியோ செல்வமோ எதுவுமே தேவையில்லை. யாரும் புனிதராகலாம் என்பதை அனைத்துப் புனிதர்கள் பெருவிழா நினைவுபடுத்துகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான்

கிறிஸ்தவ உலகத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவர்கள், மற்றும் அறிவிக்கப்படாதவர்கள் என அனைத்துப் புனிதர்களுக்குமென்று, பெருவிழா சிறப்பிக்கப்படுகிறது. இப்பெருவிழாவின் தொடக்க வரலாறு என்ன என்பதை உறுதியாகக் கூறமுடியவில்லையெனினும், பல்வேறு இடங்களில் பல்வேறு நாள்களில் இப்பெருவிழா சிறப்பிக்கப்பட்டு வந்தது. சைரஸ் நகர் எப்ரேமின் (இறப்பு 373), கூற்றுப்படி, கிழக்கு மரபுவழி திருஅவைகளில் அனைத்து மறைசாட்சிகள் விழா, மே 13ம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது. இதன் காரணத்தினாலேயே திருத்தந்தை நான்காம் போனிபாஸ், கி.பி.609ஆம் ஆண்டு மே 13ம் தேதி, உரோம் நகரின் பாந்தியோன் ஆலயத்தை புனித கன்னி மரியா மற்றும் அனைத்துப் புனிதர்களுக்கும் அர்ப்பணித்தார் எனச் சொல்லப்படுகிறது. திருத்தந்தை மூன்றாம் கிரகரியின் தலைமைப்பணி காலத்தில் (731–741), இப்பெருவிழா நவம்பர் முதல் நாள் பரவலாகக் கொண்டாடப்பட்டது. கி.பி.837ஆம் ஆண்டில் திருத்தந்தை நான்காம் கிரகரி, இப்பெருவிழா பொதுவாகச் சிறப்பிக்கப்படவேண்டும் என்று ஆணையிட்டார். மத்தியகால இங்கிலாந்தில், இப்பெருவிழா, All Hallows Day அதாவது மிகவும் புனித மனிதர்களாக மதிக்கப்படுபவர்கள் நாள் என அக்டோபர் 31ம் தேதியிலிருந்து நவம்பர் 2ம் தேதி வரை சிறப்பிக்கப்பட்டது.

கத்தோலிக்கத் திருஅவையில் புனிதர்கள் என அறிவிக்கப்படுபவர்கள் தங்கள் வாழ்வில் வீரத்துவப் புண்ணியப் பண்புகளைக் கொண்டிருந்து, அவ்வாழ்வால் பொது மக்கள் மத்தியில் நன்மதிப்பை அதிகம் பெற்றவர்கள், இவர்களின் புனித வாழ்வும், மற்றவர் பின்பற்றக்கூடியதாக அமைந்திருக்கின்றவை, மற்றும், இறப்புக்குப்பின் இவர்களின் பரிந்துரையால், மருத்துவ மற்றும், அறிவியலால் விவரிக்கமுடியாதபடி அற்புதங்கள் நடந்தவையாகும். திருத்தூதர்கள், திருத்தந்தையர், கர்தினால்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், மறைச்சாட்சிகள், மறைப்பணியாளர்கள், இறையியலாளர்கள், ஆழ்நிலைத் துறவிகள், அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், அரசர்கள், அரசிகள், படைவீரர்கள், அடிமைகள், சிறார், இளையோர், பெற்றோர், கைம்பெண்கள், இறந்துண்போர், மனந்திரும்பிய பாவிகள்  என பலதரப்பினர் புனிதர்களாகப் போற்றப்பட்டு வருகின்றனர்.

தொடக்க கால மறைசாட்சிகள்

அக்கால உரோமைப் பேரரசில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம்பெற்ற அடக்குமுறைகளில் பலரும் பல்வேறு சித்ரவதைகளுக்கு உள்ளாகி உயிர்விட்டனர். அவ்வாறு இறந்த மறைச்சாட்சிகளில் அதிகமாகப் போற்றப்படுபவர்களில் அந்தியோக்கு நகர் ஆயரான புனித இஞ்ஞாசியாரும் ஒருவர். Ignatius Theophorous என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் பின்னாளில் தன்னை இக்னேஷியஸ் என்று மட்டுமே அழைத்தார். Theophorous அதாவது கடவுளைத் தாங்குபவர் எனப் பொருள்படும் பெயரைக் கொண்ட இவர், திருத்தூதர் புனித பேதுருவுக்குப்பின் அந்தியோக்கு நகர் ஆயராகப் பொறுப்பேற்றவர். திருத்தூதர் புனித யோவானின் சீடராகிய இவர், உரோமைப் பேரரசர் Trajan (கி.பி.98–117) ஆட்சிக் காலத்தில் கைது செய்யப்பட்டார். கைகள் கட்டப்பட்ட நிலையில், பத்து சிறுத்தைகள் மத்தியில், படைவீரர்கள் காவலில், அந்தியோக்கியாவிலிருந்து உரோமைக்கு, தரை மற்றும், கடல் வழியாகக் கடுமையான பயணங்களுக்கு உட்படுத்தப்பட்டு கொண்டுவரப்பட்டார். வருகிற வழியில் திருஅவைக்கு பல கடிதங்கள் எழுதினார். திருஅவை, அருளடையாளங்கள், ஆயர்களின் பணி உட்பட பல்வேறு தலைப்புக்களைக் கொண்டிருந்த அக்கடிதங்கள், தொடக்ககால கிறிஸ்தவ இறையியலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகவும் உள்ளன. கத்தோலிக்கத் திருஅவை என்னும் சொல்லாடலை முதன்முதலாக எழுத்தில் பயன்படுத்தியவர் இவரே. அக்கால மூன்று முக்கிய திருஅவைத் தந்தையர்களுள் ஒருவராக இவர் போற்றப்படுகிறார். உரோமைக் குடிமகனாக இவர் இருந்தபடியால் கி.பி. 108ஆம் ஆண்டில் உரோமையில் கொடிய விலங்குகளுக்கு இவர் இரையாகப் போடப்பட்டு உயிரிழந்தார். சுற்றிநின்று வேடிக்கைப் பார்த்த கூட்டத்திற்கு மத்தியில் வீரத்துடன் நின்ற ஆயரான புனித இஞ்ஞாசியார், காவலர்கள் கொடிய விலங்குகளை கட்டவிழ்த்துவிட்டபோது நான் இப்போது கிறிஸ்துவுக்காக விலங்குகளின் பற்களால் அரைக்கப்படுகிறேன் என்று மகிழ்வோடு கூறி, வீர மரணத்தை ஏற்றார்.

புனித இலாரன்ஸ்

திருத்தொண்டராகப் பணியாற்றிய புனித இலாரன்ஸ், திருஅவையின் சொத்துக்களை ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்துவிட்டு பேரரசரிடம் திருஅவையின் சொத்துக்கள் என ஏழைகளைக் காட்டியதற்காக, பழுக்க காச்சிய இரும்புக்கட்டிலில் படுக்கவைக்கப்பட்டார். ஒரு பக்கம் வெந்துவிட்டது, மறுபக்கம் புரட்டிப்போடுங்கள் என கிறிஸ்துவுக்காக வீரவசனம் பேசி உயிரிழந்தார் புனித இலாரன்ஸ்.

புனித செபஸ்தியார்

புனித செபஸ்தியார், உரோமைப் பேரரசன் தியோக்ளேசியன் காலத்தில், மரத்திலோ, அல்லது தூணிலோ கட்டப்பட்ட நிலையில், அம்புகளால் குத்தப்பட்டு சித்ரவதைக்குள்ளானார். ஆயினும் அவரை, உரோம் நகரில் வாழ்ந்த ஐரீன் என்பவர் காப்பாற்றி குணப்படுத்தினார். அதற்குப்பின்பு, தியோக்ளேசியனின் கொடூரங்களை இவர் சாடியதால், பேரரசனின் ஆணைப்படி இவர் தடியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். புனித ஆகத்தா, மார்பகங்கள் அறுக்கப்பட்டு கொல்லப்பட்டார். இவ்வாறு தொடக்க காலத்தில் கிறிஸ்தவர்கள் பலர், கொடிய விலங்குகளுக்கு இரையாகப் போடப்பட்டும், உயிரோடு தோலுரித்தும், தீயிட்டு கொளுத்தப்பட்டும் இறந்தனர்.     

தீயிட்டு கொளுத்தப்பட்ட மறைச்சாட்சிப் புனிதர்கள்

புனித ஜோன் ஆப் ஆர்க்
புனித ஜோன் ஆப் ஆர்க்

உயிரோடு தீயிட்டு கொளுத்தப்பட்ட மறைச்சாட்சிப் புனிதர்கள், திருஅவையின் தொடக்க காலத்தில் மட்டுமல்ல பிற்காலங்களிலும் இருந்துள்ளனர். 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரான்ஸ் நாட்டு வீராங்கனை ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431), அவரது 19வது வயதில் தூணில் கட்டிவைக்கப்பட்டு உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். பெற்றோரைப் போலவே ஆழ்ந்த இறைசிந்தனையுடைய ஜோன் ஆஃப் ஆர்க், அந்நியரை ஓர்லியன்சை விட்டு விரட்ட தன்னைக் கடவுள் படைத்திருப்பதாக நம்பினார். அதனால் பிரெஞ்சு படையைத் தலைமை ஏற்று வழிநடத்தினார். இவரால் ஊக்கம் பெற்ற பிரெஞ்சு வீரர்கள், இவரின் தலைமையின்கீழ் அந்நியரை வெற்றிகொண்டனர். முதன்மை வானதூதர் புனித மிக்கேல், புனிதர்கள் மார்கிரேட், அலெக்சாந்திரியாவின் கேத்ரீன் ஆகியோரை இவர் காட்சியில் கண்டதன் பயனாக, பிரெஞ்சு படையினர் நூறாண்டுப் போரின்போது பல முக்கிய வெற்றிகள் அடைய இவர் காரணமானார். இவையே பிரெஞ்சு மன்னர் ஏழாம் சார்லசின் முடிசூடலுக்கு வழிவகுத்தது. ஆயினும் பர்கண்டியர்களால் பிடிக்கப்பட்ட இவர், பிரான்சின் எதிரிகளாயிருந்த ஆங்கிலேயரிடம் விற்கப்பட்டார். அச்சமயத்தில் சூனியக்காரி எனவும் தப்பறை கொள்கையுடையவர் எனவும் பொய்க் குற்றம் சாட்டப்பட்ட இவரை ஆங்கிலேய ஆயர் ஒருவர் மரணதண்டனை தீர்ப்பளித்தார். அதனால் இவரைக் கட்டிவைத்து உயிரோடு தீயிட்டுக் கொன்றனர். அப்போது இவருக்கு வயது 19. இவர் இறந்து 25 ஆண்டுகள் சென்று, இவர் மீது சாட்டப்பட்ட குற்றம் பொய் என, கத்தோலிக்கத் திருஅவை அறிவித்தது.

படைவீரர் புனிதர்கள்

உரோமைப் பேரரசர் தியோக்ளேசியன் (கி.பி.284-305) கிறிஸ்தவர்களுக்கு எதிராக மேற்கொண்ட அடக்குமுறைகளில், உரோமை இராணுவத்தில் பணியாற்றிய பல கிறிஸ்தவப் படைவீரர்கள், கிறிஸ்துவை மறுதலிக்க மறுத்ததால் சித்ரவதைக்கு உள்ளாகி மறைசாட்சிய வாழ்வை எதிர்கொண்டனர். இந்தப் படைவீரர் புனிதர்களில் பெரும்பான்மையினோர் துருக்கியில் வாழ்ந்தவர்கள். இவர்களின் உருவப் படங்களில் அவர்கள் ஆயுதங்கள் மற்றும், இராணுவ உடையில் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இப்படைவீரர் புனிதர்களில் ஆர்த்தாடக்ஸ் கிறிஸ்தவர்கள் மத்தியில் புனித ஜார்ஜ் மிகப் பிரபலமானவர். உரோமைப் படைவீரராகிய இவர், கி.பி.303ஆம் ஆண்டில் கிறிஸ்தவ நம்பிக்கைக்காகக் கொல்லப்பட்டார். இவரது உருவப்படம், வெண் குதிரையின் மீது அமர்ந்து, பாம்பு அல்லது டிராகனைக் குத்துவதுபோல் அமைக்கப்பட்டிருக்கும். அதேபோல் படைவீரரான புனித தெயோதோரம் கறுப்புக் குதிரைமீது இருப்பவராய் வரையப்பட்டிருப்பார்.   

புனித இலொயோலா இஞ்ஞாசியார்

1534ஆம் ஆண்டில் இயேசு சபையை ஆரம்பித்த புனித இலொயோலா இஞ்ஞாசியார், இஸ்பெயின் நாட்டு அரசவையில் போர் வீரராகப் பணியாற்றியவர். 1521ஆம் ஆண்டில் பிரெஞ்சுகாரரிடமிருந்து பாம்பலூனா கோட்டையைப் காப்பாற்றுவதற்காக நடந்த போரில் அவரது கால்கள் படுகாயமடைந்தன. அதற்காக சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்தபோது விவிலியத்தையும், அசிசி நகர் புனித பிரான்சிஸ், புனித சாமிநாதார் போன்றோரின் வாழ்க்கை வரலாறுகளையும் வாசித்ததன் பயனாக மனந்திரும்பினார். படைவீரனுக்குரிய உடைகளைக் களைந்து இயேசுவின் படைவீரராக இவர் மாறினார். இஸ்பெயினில் 1491ஆம் ஆண்டு டிசம்பர் 27ம் நாள் பிறந்த இவர், 1556ஆம் ஆண்டு, ஜூலை 31ம் நாள் இறைவனடி சேர்ந்தார்.    

இளம்வயது அருளாளர்கள்

கத்தோலிக்கத் திருஅவையில் பல இளம்வயதினர் புனிதர்கள் மற்றும், அருளாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 25 வயதுக்குட்பட்ட சிலர் குறித்த விவரங்கள்...

இளம்வயது அருளாளர் Carlo Acutis
இளம்வயது அருளாளர் Carlo Acutis

அருளாளர் Carlo Acutis, (1991-2006), தனது 15வது வயதில், 2006ஆம் ஆண்டில் இரத்த புற்றுநோயால் இறைபதம் சேர்ந்தவர். இவர், திருநற்கருணை பக்தியை இணையதளம் வழியாகப் பரப்பியவர். அருளாளர் Laura Vicuña (1891-1904), தனது 12வது வயதில், 1904ஆம் ஆண்டில் நுரையீரல் காசநோயால் இறைபதம் சேர்ந்தார். தன் தாயின் மீட்புக்காக தன் வாழ்வை அர்ப்பணித்திருந்தவர் இவர். 1925ஆம் ஆண்டில் தனது 24வது வயதில் இறைபதம் சேர்ந்த அருளாளர் Pier Giorgio Frassati (1901-1925), போலியோவால் தாக்கப்பட்டிருந்தார். தனது 18வது வயதில், 1990ஆம் ஆண்டில் இறைவனடி சேர்ந்த அருளாளர் Chiara Badano (1971-1990), அரிதான எலும்பு புற்றுநோயால் தாக்கப்பட்டிருந்தவர். தனது 19 அல்லது 24வது வயதில் 1909ஆம் ஆண்டில் உயிரிழந்த அருளாளர் Isidore Bakanja

 (1887-1909), இரப்பர் தோட்டத்தில் கொத்தடிமையாக வேலைசெய்தவர். கிறிஸ்தவ நம்பிக்கைக்காக, முதலாளியால் பலமாக அடிக்கப்பட்டு, ஆறு மாதங்கள் அக்காயங்களால் வேதனையடைந்தார். இறக்கும்வேளையில் தன் முதலாளியை மன்னித்து அவருக்காகச்  செபிப்பதாக உறுதியளித்தார் இசிதோர்.

இளம்வயது புனிதர்கள்

புனிதர்களான Nunzio Sulprizio (1817-1836), 19வது வயதிலும், வியாகுல அன்னையின் கபிரியேல் (1838-1862) 23வது வயதிலும், ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா (1550-1568) 17வது வயதிலும், ஜான் பெர்க்மான்ஸ் (1599-1621) 22வது வயதிலும், Andes நகர் தெரேசா (1900-1920) 19வது வயதிலும், லிசிய நகர் தெரேசா 24வது வயதிலும் இறந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டு லிசிய நகர் புனித தெரேசா (1873-1897), திருஅவையின் வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற புனிதர்களில் ஒருவர். 15வது வயதில் கார்மேல் ஆழ்நிலை தியான துறவு இல்லத்தில் சேருவதற்குப் பல தடைகளை எதிர்கொண்டவர். இறைவன்மீது கொண்டிருந்த பேரன்பால் அனைத்தையும் ஆற்றிய இவரது ஆன்மிகம் “சிறிய வழி”  எனப் போற்றப்படுகிறது. இவர் தனது 24வது வயதில் காசநோயால் உ.யிரிழந்தார். 1997ஆம் ஆண்டில் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல், லிசிய நகர் புனித தெரேசாவை, திருஅவையின் மறைவல்லுனர் என அறிவித்தார். இவரே திருஅவையில் அறிவிக்கப்பட்டுள்ள இளவயது மறைவல்லுனர் ஆவார்.

புனித ஜோன் ஆப் ஆர்க், தனது 19வது வயதில் உயரிழந்தார். 4ம் நூற்றாண்டில் தனது 12 அல்லது 13வது வயதில் உயிரிழந்த உரோம் நகர் புனித ஆக்னஸ், தனது கன்னிமைக்காக கொல்லப்பட்டவர். தனது 11வது வயதில் இறந்த புனித மரிய கொரற்றி (1890-1902), தனது கற்பைக் காப்பாற்ற முயற்சித்தபோது கொல்லப்பட்டார். இவர் இறப்பதற்குமுன்பு தன்னைக் கொன்ற அலெச்சாண்டரையும் மன்னித்தார். பாத்திமாவில் அன்னை மரியாவை காட்சியில் கண்ட புனிதர்கள் பிரான்சிஸ் (1908-1919) தனது 10வது வயதிலும், லூசியா (1910-1920) 9வது வயதிலும் இறைபதம் சேர்ந்தனர்.,

புனித José Sánchez del Río (1913-1928) மெக்சிகோவில் தனது 14வது வயதில் மறைசாட்சியாக உயிரிழந்தவர். வட அமெரிக்காவின் Algonquin-Mohawk (1656-1680) பூர்வீக இனத்தவரான புனித Kateri Tekakwitha, தனது 24வது வயதில் உயிரிழந்தார். இவர் 2012ஆம் ஆண்டில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் புனிதராக அறிவிக்கப்பட்டார். இவர்கள் தவிர இன்னும் பல இளவயது புனிதர்களும் அருளாளர்களும் உள்ளனர்.

புனித அரசிகள்

வரலாற்றில் அரசர்களும் அரசிகளும் புனிதர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். உரோமைப் பேரரசரான கான்ஸ்ட்டைனின் அன்னை ஹெலன், அரசிகள் குளோட்டில், ADELAIDE, போர்த்துக்கல் நாட்டு எலிசபெத், போலந்து நாட்டு JADWIGA, ஹங்கேரி நாட்டு எலிசபெத்,  எட்விஜ் போன்றோர், தங்களது அரசில் தேவையில் இருப்போருக்கும், குறிப்பாக நோயாளிகள் மற்றும் ஏழைகளுக்கு உதவியவர்கள். தங்கள் குடும்பத்தினரை கிறிஸ்தவ நம்பிக்கையில் வழிநடத்தியவர்கள்.

புனித அரசர்கள்

புனித அரசர் 9ம் லூயிஸ்
புனித அரசர் 9ம் லூயிஸ்

புனிதர்களாக அறிவிக்கப்பட்டுள்ள அரசர்கள், தங்களது ஆட்சியுரிமை கடவுளிடமிருந்து வந்தது என்பதை ஏற்றவர்கள், நீதி மற்றும், பிறரன்போடு மக்களுக்குப் பணியாற்றுவதே தங்களின் கடமை என உணர்ந்தவர்கள். புனித அரசர்களில் அதிகமாக அறியப்படுபவர், பிரான்ஸ் நாட்டு மன்னர் 9ம் லூயிஸ் (1226 – 1270) ஆவார். இவரது பல சாதனைகளில் ஒன்று, ஒரு முன்மாதிரிகையான தந்தையாக விளங்கினார் என்பதே. அதை அவர் தன் மகனுக்கு எழுதிய கடிதம் வெளிப்படுத்தியுள்ளது. அவர் இவ்வாறு எழுதியிருக்கிறார். மகனே, உன் கடவுளாம் ஆண்டவரை, உனது முழு இதயம் மற்றும், முழு வல்லமையோடு அன்புகூர்வாயாக. இதுவே நான் உனக்குக் கூறும் முதல் அறிவுரை. நீ சில சோதனைகளை எதிர்கொள்ளவேண்டும் என்று ஆண்டவர் அனுமதித்தால், அவை உனது நன்மைக்காகவும், ஒருவேளை அதற்கு நீ தகுதியானவனாய் இருக்கிறாய் என்பதற்காகவும் அவற்றை விருப்பத்தோடும் நன்றியோடும் ஏற்றுக்கொள். ஆண்டவர் வளமையைக் கொடுத்தால், அதையும் தாழ்ச்சியோடு ஏற்றுக்கொள். அவற்றைப் பெற தகுதியற்றவன் என்ற உணர்வில் அவ்வளமை குறித்து வீணாகப் பெருமையடையாதே. ஏனெனில் கடவுளது கொடைகளுக்காக நீ அவரை எதிர்க்கவும் புண்படுத்தவும் முடியாது. ஏழைகள், துன்புறுவோர், மற்றும், பெருந்துயரோடு இருப்பவர்கள் மீது இரக்கம் காட்டு. அவர்களுக்கு உதவிசெய். உன்னால் இயன்றமட்டும் அவர்களுக்கு ஆறுதலாக இரு. உன்மீது பொழியப்படும் அனைத்து ஆசிர்களுக்காகவும் கடவுளுக்கு நன்றிசொல்.

ஹங்கேரி நாட்டு புனித அரசர் முதலாம் ஸ்டீபன் (1001–1038) அவர்களும், அரசர் 9ம் லூயிஸ் போன்று தன் மகனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இவர் புண்ணியப் பண்புகளைக் கொண்டிருந்தார், ஏழைகள் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் என, அரசர் முதலாம் ஸ்டீபன் பற்றி, லடிஸ்லாஸ் எழுதியிருக்கிறார்.

Anglo-Saxon பகுதியின் கடைசி அரசரான எட்வர்ட் (1042 – 1066) அவர்களும், நீதி என தனக்குத் தெரிந்ததையே ஆட்சியில் நடைமுறைப்படுத்தினார். இவர் அடிக்கடி திருப்பலிக்கும் சென்று வந்தார்.

கண்பார்வையற்ற புனிதர்கள்

லூசியா, ஒடிலியா, சிலநேரங்களில் Aleydis என அழைக்கப்படும் ஆலிஸ், அதிதூதர் இரஃபேல் உட்பட பல புனிதர்கள் கண்பார்வையற்றோர் மற்றும், கண்ணாடிக்கடைக்காரர்களின் பாதுகாவலர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

தனது 21வது வயதில் மறைச்சாட்சிய மரணத்தைத் தழுவிய சிராகூஸ் நகரின் புனித லூசியா (283–304), பாலியல் தொழிலுக்கு அதிகாரிகளால் கட்டாயப்படுத்தப்பட்டபோது அதற்கு இணங்காததால் அவரது கண்கள் தோண்டி எடுக்கப்பட்டன. புனித ஒடிலியா, கண்பார்வையை பிறவியிலேயே இழந்தவர். இதனால் அவரது பெற்றோர் அவரைக் கொல்வதற்கு கட்டளையிட்டனர். ஆனால் ஒரு செவிலியர் உரிமைத்தொகை பெற்று அவரை எடுத்து வளர்த்தார். 12வது வயதில் ஒடிலியாவுக்கு திருமுழுக்கு அளித்தபோது அவர் பார்வை பெற்றார். புனித ஆலிஸ், தனது ஏழாவது வயதில் துறவு சபையில் சேர்ந்தார். இளம்பெண்ணாக இருந்தபோது தொழுநோயால் தாக்கப்பட்டு பார்வையை இழந்த இவர், பக்கவாத நோயாளிகளுக்கும் பாதுகாவலர். மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலரான காஸ்தெல்லோவின் புனித மார்கிரேட் (1287-1320)  பிறவிக் குருடர். இவரது முதுகுத்தண்டு கடுமையாய் வளைந்து, வலது கால் இடது காலைவிட ஒன்றரை அங்குலம் நீளம் குறைவாக இருந்தது. இவரது உயரம் நான்கு அடிக்குமேல் வளர்ந்தது கிடையாது.

இறந்துண்ட புனிதர்

பணக்கார உரோமன் செனட்டரின் ஒரே மகனான அலெக்ஸ் (கி.பி.410-460), ஏழைகளுக்குப் பிறரன்புப் பணியாற்றிய தன் பெற்றோரைப் பின்பற்றி, குடும்பத்தின் அனைத்து செல்வம் மற்றும், கவுரத்தைத் துறந்து, பெற்றோருக்குத் தெரியாமல் உரோமையிலிருந்து சிரியா சென்று 17 ஆண்டுகள் மருத்துவமனைகளில் தாழ்மையான வேலைகளைச் செய்தார். பின்னர் இறந்துண்பவராக உரோம் திரும்பி, தன் தந்தையின் அரண்மனையிலேயே அடிமையாக வேலைசெய்து அங்கேயே படிக்கட்டுகளுக்குக்கீழ் இருந்த ஒரு சிறிய அறையில் தூங்கினார். அவர் இறந்தபின்னரே, அவர் கைப்பட எழுதிவைத்திருந்த குறிப்பிலிருந்து அவர் யார் என அனைவரும் கண்டுகொண்டனர். “கடவுளின் மனிதர்” என அழைக்கப்படும் புனித அலெக்ஸ், தன்னலமின்றி மற்றவருக்காகப் பிச்சையெடுப்போருக்குப் பாதுகாவலர் என அறிவிக்கப்பட்டுள்ளார். 15ம் நூற்றாண்டில் இவர் பெயரால் ஒரு துறவு சபை தொடங்கப்பட்டது. அச்சபையினர் “அலெக்சியன் அருள்சகோதரர்கள்” என அழைக்கப்படுகின்றனர். முதியோர், மனநோயாளிகள், நரம்புத்தளர்ச்சியால் துயருவோர் போன்றோரை இச்சபையினர் பராமரித்து வருகின்றனர்.

எனவே, புனிதர்களாக ஆவதற்கு வயது வரம்போ, பதவியோ பட்டமோ மொழியோ செல்வமோ எதுவுமே தேவையில்லை. யாரும் புனிதராகலாம். நவம்பர் 01, வருகிற செவ்வாய் அனைத்துப் புனிதர்கள் பெருவிழாவை திருஅவை சிறப்பிக்கிறது. எல்லாருமே புனிதராக, புனித வாழ்வு வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை இப்பெருவிழா நினைவுபடுத்துகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 October 2022, 14:14