புனித Marguerite Bays புனித Marguerite Bays  

வழிசொல்லும் ஒளிச்சுடர்: ஐந்து காய வரம்பெற்ற புனித மார்கிரேட்

இதுவரை ஏறத்தாழ நானூறு பேர் ஐந்து காய வரத்தைப் பெற்றவர்கள் என வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளது

[ Photo Embed: புனித Marguerite Bays ]மேரி தெரேசா: வத்திக்கான்

ஜேம்ஸ், சான்ட்ரா தம்பதியர், பதினான்கு ஆண்டுகளுக்குமேலாக குழந்தைப் பேறுக்காக உருக்கமாக கடவுளை இறைஞ்சி வந்தவர்கள். இறைவேண்டலின் பலனாக, சான்ட்ராவும் கருவுற்றார். அவருக்கு குழந்தை பிறக்கும் தேதியும் குறிக்கப்பட்டது. பிரசவத்திற்காக தன் மனைவியை காரில் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார் ஜேம்ஸ். சென்ற வழியில் எதிரே வந்த ஒரு லாரி, அவர்களின் காரில் வேகமாக மோதியதில் பயங்கரமான விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவல்துறையினர் அத்தம்பதியரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் சான்ட்ராவுக்கு அறுவை சிகிச்சை செய்து அழகான பெண் குழந்தையை வெளியே எடுத்தனர். அதேநேரம், சான்ட்ரா இறந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் அறிவித்தனர். இரு கால்களும் முறிந்த நிலையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்தார் ஜேம்ஸ்,. ஒரு நாள் இரவு, வெண்ணிற ஆடை அணிந்த ஒருவர் ஜேம்சுக்குத் தோன்றி அவர் தலையைத் தொட்டார். அதற்குப்பின்பு ஜேம்ஸ் தும்மல்போடத் தொடங்கினார். அதற்கு ஐந்து நிமிடம் சென்று ஜேம்ஸ் விழித்தெழுந்தார். தான் வலிமையாய் இருப்பதாக உணர்ந்த அவர், உடனடியாக எனது மனைவி எங்கே எனக் கேட்டார். அப்போது அடுத்த அறையில் தும்மல் சப்தம் கேட்டது. அதை அறிந்த செவிலியர்கள், சான்ட்ரா உயிரோடு இருக்கிறார், உயிரோடு இருக்கிறார் என வியப்பால் கத்தினார்கள். சான்ட்ராவுக்கும் அன்று இரவில் வெண்ணாடை அணிந்த ஒருவர் அவரது தலையைத் தொட்டுள்ளார். சில நாள்கள் சென்று, இத்தம்பதியர் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் சென்றனர். ஜேம்சின் கால்களும் முழு குணமடைந்து நன்றாக நடக்கத் தொடங்கினார். இப்போது தானும், சான்ட்ராவும், தங்களின் மகளும் நன்றாக உள்ளதாகவும், தங்களின் மகளுக்கு அற்புதம் என்ற பெயரையே சூட்டியிருப்பதாகவும், தங்களுக்கு விபத்து ஏற்பட்டபின் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட விவரங்களை தன் சகோதரி விவரித்ததாகவும் ஜேம்ஸ் ஊடகத்தில் பதிவுசெய்திருக்கிறார். கடவுள் இருக்கிறார், அவர் புதுமைகளை ஆற்றுகிறார் என்ற தன் நம்பிக்கையையும், ஜேம்ஸ் தன் பதிவில் உறுதிபட அறிவித்துள்ளார். இப்புதுமைக்கு அவர் சாட்சியமும் சொல்லியிருக்கிறார்.

ஐந்து காய வரம்பெற்றவர்கள்

புண்ணிய வீரப் பண்புகளால் வாழ்ந்த புனித மனிதர்கள் வழியாக, கடவுள் புதுமைகளை ஆற்றி வருகிறார். கத்தோலிக்கத் திருஅவையில் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ள சிலர், சிலுவையில் அறையுண்ட இயேசுவின் காயங்களைப் போன்று தங்களின் கைகள், கால்களில் காயங்களை அற்புதமாய்ப் பெற்று, அவற்றின் வேதனைகளையும் பொறுமையோடு ஏற்றுள்ளனர். ஐந்து காய வரம்பெற்றவர்கள் என அழைக்கப்படும் இவர்கள், அக்காலத்திலிருந்து இக்காலம் வரை உள்ளனர். இவ்வாறு வரம்பெற்றவர்களில் சிலர் திருஅவையில் புனிதர்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். சில புனிதர்கள் பெற்ற ஐந்து காயங்கள், வெளியில் தெரியாமலும் இருந்துள்ளன. இயேசு கிறிஸ்துவின் ஐந்து காய வரம்பெற்ற இவர்களின் புனித வாழ்வு மிகச் சிறப்பானது. இதுவரை ஏறத்தாழ நானூறு பேர் இந்த வரத்தைப் பெற்றவர்கள் என வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.  

ஐந்து காய வரம்பெற்ற புனித மனிதர்கள் பொதுவாக, ஒவ்வொரு வியாழன் தொடங்கி, அடுத்த நாளாகிய வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 4 மணி வரை அக்காயங்களால் மரண வேதனையை எதிர்கொள்கின்றனர். இக்காயங்கள் புதுமையாய்ப் பெறப்பட்டவை என மருத்துவச் சான்றிதழ் கொடுக்கப்படும்வரை, அவர்கள் மற்றவரால் புறக்கணிக்கப்படுகின்றனர், மற்றும், சந்தேகத்தோடு பார்க்கப்படுகின்றனர் எனச் சொல்லப்படுகிறது. சிலரது காயங்களிலிருந்து வெளிப்படும் இரத்தம் நறுமணமிக்கதாகவும் உள்ளது, இது அவர்களின் புனிதத்துவத்திற்குச் சான்றாய் விளங்குகிறது என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தின் கார்மேல் சபை அருள்சகோதரி ரோசி அவர்களின் காயங்களிலிருந்து வருகின்ற இரத்தம் நறுமணமிக்கது என சிலர் சொல்கின்றனர்.  

"என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம்"  (கலா.6:17) என புனித பவுலடிகள் கலாத்தியருக்கு எழுதிய திருமடலில் கூறியிருப்பதை வைத்து அவர், வரலாற்றில் இயேசுவின் காயங்களை முதலில் பெற்றவர் என சில விவிலிய அறிஞர்கள் நம்புகின்றனர். இவர் இத்திருமடலை கிரேக்க மொழியில் முதலில் எழுதியுள்ளார். கிரேக்க மொழியில், "தழும்புகள்" என்ற சொல்லுக்கு "துளை" என்ற அர்த்தமாகும்.

அசிசி நகர் புனித பிரான்சிஸ்,
அசிசி நகர் புனித பிரான்சிஸ்,

கிறிஸ்தவ வரலாற்றில் திருத்தூதர் புனித பவுலுக்குப்பின், இத்தாலியின் அசிசி நகர் புனித பிரான்சிஸ், ஐந்து காய வரம் பெற்றவராக பதிவுசெய்யப்பட்டுள்ளார். 1224ஆம் ஆண்டில், அவர் இறப்பதற்கு ஈராண்டுகளுக்குமுன்பு, நாற்பது நாள்கள் நோன்பிருப்பதற்காக, லா வெர்னா மலைக்குச் சென்றார். அச்சமயத்தில் கிறிஸ்துவின் சிலுவை உயர்த்தப்பட்ட திருநாள் அண்மித்துவந்த நாள்களில், பிரான்சிஸ் செபித்துக்கொண்டிருந்தபோது, ஆறு இறக்கைகள்கொண்ட வானதூதர் சிலுவையில் அறையப்பட்ட நிலையில் தோன்றியதாகவும், அக்காட்சியைப் பார்த்து தன்னையே தாழ்த்திய அவரது கண்களிலிருந்து வானதூதர் மறைந்தவுடன், அவரது கரங்கள் மற்றும், கால்களில் ஆணிகள் அறைந்தது போன்ற உருவம் உடனடியாகத் தெரிந்தன எனவும், விலாக் காயத்திலிருந்து இரத்தம் அடிக்கடி வந்ததெனவும் வரலாற்று ஏடுகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இத்தாலி நாட்டின் Pietrelcinaவின் புனித பாத்ரே பியோ, 1918ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ம் தேதி முதல், ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஐந்து காய வரத்தைப் பெற்றிருந்தவர். இவர் உயிரோடு வாழ்ந்தபோதே பல புதுமைகளை ஆற்றியவர்.

ஜெர்மன் நாட்டுப் புனிதர் Therese Neumann அவர்கள், 1926ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டு வரை ஐந்து காய வரம் பெற்றிருந்தவர். இவர் பல ஆண்டுகள், எவ்வித உணவோ, தண்ணீரோ அருந்தாமல், திருநற்கருணையால் மட்டும் உயிர் வாழ்ந்தவர். இவரது இந்நிலையை மருத்துவர்களால் விவரிக்க முடியவில்லை. இவர் வாழ்வின் பெரும்பகுதியில் படுக்கையாகவே இருந்தார்.

இஸ்பானியரான புனித இறை யோவான் ஐந்து காய வரம்பெற்றிருந்தவர். 1500களில் பல மருத்துவமனைகளை உருவாக்கிய இவர், இறப்புக்குப்பின் மருத்துவமனைகளின் பாதுகாவலர் என அறிவிக்கப்பட்டார்.

1300களில் வாழ்ந்த இத்தாலியின் சியென்னா நகர் கேத்ரீன், தனது வாழ்வின் இறுதி ஐந்து ஆண்டுகளில் ஐந்து காய வரம் பெற்றிருந்தவர். தனது 33வது வயதில் இவர் இறந்தார். இவரது இறப்பிற்குப் பின்னரே இவரது உடலில் ஐந்து காயங்களின் அடையாளங்கள் இருந்ததை மக்கள் கண்டுபிடித்தனர்.

புனித Marguerite Bays

2019ஆம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனிதர்களாக அறிவித்த கேரளாவின் புனித மரியம் திரேசியா, சுவிட்சர்லாந்தின் Marguerite Bays ஆகிய இருவரும் ஐந்து காய வரம் பெற்றவர்கள்.

மார்கிரேட் பே அவர்கள், சுவிட்சர்லாந்து நாட்டின் ப்ரைபூர்க் மாவட்டத்தில் Siviriezல் 1815ஆம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி பிறந்தார். இவரது உடன்பிறப்புகள் ஆறு பேர். அறிவில் சிறந்து விளங்கிய இவர், பள்ளிப் பருவத்திலேயே கடவுளோடு தனிமையில் பேசும் ஆவலில் தன் சக மாணவிகளோடு அவ்வளவாக நெருங்கிப் பழகவில்லை. 1836ஆம் ஆண்டில் தையல் தொழிலைக் கற்றார். பல்வேறு வீடுகளில் தையல்காரராகவும் வேலைசெய்தார். வீட்டில் தனது அறையில் ஒரு சிறு பீடம் அமைத்து அன்னை மரியா திருவுருவத்தை வைத்து செபித்துவந்தார். துறவு வாழ்வைத் தேர்ந்துகொள்ள விரும்பாமல், உலகில் கன்னியாக எளிய வாழ்வு வாழத் தீர்மானித்தார்.  

மார்கிரேட்டின் குடும்பம் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டது. இவரது சகோதரி மரி மார்கிரேட்டின் திருமணம் முறிவுபட்டது. வன்முறைக் குணம் கொண்ட இவரது சகோதரர் ஜோசப், சிறைத்தண்டனை அனுபவித்தார். மற்றொரு சகோதரர் கிளவ், திருமணத்திற்குப் புறம்பே குழந்தையைக் கொண்டிருந்தார். பிரான்சுவா என்ற அந்த ஆண் குழந்தையை மார்கிரேட் தன் 17வது வயதில் பராமரிக்கத் தொடங்கினார். பிரான்சுவா, தனது 47வது வயதில் Josette என்ற பெண்ணைத் திருமணம் புரிந்தார். Josette, மார்கிரேட்டை தரக்குறைவாக நடத்தினார். மார்கிரேட்டின் உறவினர்களோடும் அவர் கடுமையாக நடந்துகொண்டார். இவையனைத்திற்கும் மத்தியில், Josette நோயினால் தாக்கப்பட்டபோது, அவர் இறக்கும்வரை மார்கிரேட் அவரைப் பராமரித்து வந்தார்.

ஏழைகளுக்குப் பணி

மார்கிரேட் தனது குடும்பத்தில் எவ்வளவு பிரச்சனைகளை எதிர்கொண்டபோதிலும், ஏழைகளுக்கும் சேவைசெய்துவந்தார். அவர் வளர்இளம் பருவத்தில் இருந்தபோது சுவிட்சர்லாந்தில் வேளாண் தொழிலில் தொழில்கருவிகள் பயன்படுத்தப்பட்டதால், சில விவசாயிகள் வேலையின்றி துன்புற்றனர். விவசாயக் குடும்பத்தில் பிறந்த மார்கிரேட்டுக்கும் இதுவும் அவரது பிறரன்புப் பணிக்குத் தடையாக இருக்கவில்லை. உணவின்றி துன்புற்றோருக்கு ரொட்டி, பால் போன்றவற்றைக் கொடுத்ததோடு, அவர்களின் ஆடைகளைத் தைத்துக் கொடுத்தார், ஏன் புது ஆடைகள்கூட வாங்கிக்கொடுத்தார். ஏழைகள் மீது இவர் கொண்டிருந்த பாசத்தால் பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையில் சேர்ந்தார். இருபது நிமிடம் நடந்து சென்று இவரது ஊருக்கு அருகிலிருந்த பிரான்சிஸ் சபை ஆலயம் சென்று திருநற்கருணை ஆராதனையில் பங்குகொண்டு வந்தார்.

குடல் புற்றுநோயிலிருந்து குணமடைதல்

மார்கிரேட் தன் வாழ்வு முழுவதும் சிறாருக்கு மறைக்கல்வி கற்பித்தல் மற்றும், நோயாளிகளைச் சந்திப்பதில் நேரத்தைச் செலவழித்தார். 1853ஆம் ஆண்டில் இவர்  குடல் புற்றுநோயால் தாக்கப்பட்டார். இந்நோயைக் குணமாக்குமாறு அன்னை மரியாவின் பரிந்துரையை வேண்டிய அதேநேரம், அந்நோயின் வேதனை இயேசு கிறிஸ்துவின் துன்பங்களோடு தொடர்புடையதாக இருக்கவேண்டும் என்றும் செபித்தார்.  இந்நோயின் தாக்கம் கடுமையாகும்வரை அந்நோய் பற்றி இவர் யாரிடமும் சொல்லவில்லை. அவரது நிலையைப் பரிசோதித்த மருத்துவர், அவர் அறுவை சிகிச்சை செய்துகொள்ளவேண்டும் என்று கூறினார். ஆயினும், திருத்தந்தை 9ம் பயஸ் அவர்கள், அன்னை மரியா, அமலியாய்ப் பிறந்தார் என்ற நம்பிக்கை அறிக்கையை வெளியிட்ட 1854ஆம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதியன்று, மார்கிரேட் அந்நோயிலிருந்து குணமானதை அறிந்தார். இதை அவர், கடவுளுக்கும், அயலவருக்கும் பணியாற்றவேண்டியதன் மாபெரும் அடையாளம் என ஏற்றுக்கொண்டார்.

ஐந்து காய வரம்

1854ஆம் ஆண்டில் தன் கரங்கள், கால்கள் மற்றும் நெஞ்சில் சிவப்புநிற கொப்பளங்கள் இருப்பதையும் அவை கடுமையான எரிச்சலைக் கொடுத்ததையும் உணர்ந்தார் மார்கிரேட்.  அதோடு, அவர், வாரத்திற்கு ஒரு முறை, கிறிஸ்துவின் வேதனையை எதிர்கொண்டு மெய்மறந்த நிலையில் பரவசமடைந்தார். இவர் முதலில் தன் காயங்களை மறைக்க முயற்சித்தாலும், பின்னாளில் வெளிப்படையாகத் தெரிந்தன. அச்செய்தி எங்கும் பரவியது. எனவே அவை உண்மையிலேயே ஐந்து காய வரம் தானா எனப் பரிசோதிக்கும்படி உள்ளூர் ஆயரிடம் கேட்டுக்கொண்டார். 1873ஆம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அச்சமயத்தில் அவரது மருமகள் உடனிருக்க அனுமதிக்கப்பட்டார்.

இறப்பு

மார்கிரேட் இறப்பதற்குமுன் சில வாரங்களாக, உணவு ஏதுமின்றி, தேனீர், சில நேரங்களில் பால், ரொட்டி, சூப் போன்றவற்றை மட்டுமே குடித்தார். 1879ஆம் ஆண்டு தவக் காலத்தில் கடுமையான வேதனையை எதிர்கொண்டார். இறந்துகொண்டிருந்த நாள்களில் வெறும் தோல் போர்த்திய எலும்புக்கூடாகவே அவர் காணப்பட்டார். தலை, கழுத்து, மற்றும், நெஞ்சில் அவர் மிகுந்த வேதனைப்பட்டார். இறுதியில், 1879ஆம் ஆண்டு ஜூன் 27ம் தேதி மாலை 3 மணிக்கு இறைபதம் சேர்ந்தார், மார்கிரேட். இவரது உடல், ஜூன் 30ம் தேதி Siviriez பங்கு ஆலயத்தில் அடக்கம்பண்ணப்பட்டது. Marguerite Bays அவர்களின் பரிந்துரையால் நடைபெற்ற புதுமைகளால், அவர் 1995ஆம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களால் அருளாளராகவும், 2019ஆம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதராகவும் அறிவிக்கப்பட்டார்.

அக்டோபர் 23, இஞ்ஞாயிறு 96வது உலக மறைபரப்பு ஞாயிறு. படுக்கையிலே நீண்டகாலம் வாழ்ந்து அந்நிலையிலேயே நற்செய்தி அறிவித்த புனித Marguerite Bays அவர்களின் வாழ்வு நமக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 October 2022, 11:47