நில நடுக்கத்தால் சேதமடைந்த  பிலிப்பீன்ஸ் கிறிஸ்தவ ஆலயம் நில நடுக்கத்தால் சேதமடைந்த பிலிப்பீன்ஸ் கிறிஸ்தவ ஆலயம்  

பிலிப்பீன்ஸ் கிறிஸ்தவ ஆலயங்களை சீரமைக்க உதவி

மக்கள் சார்ந்திருக்கும் மதமல்ல, ஒன்று கூடி செபிக்கும் வழிபாட்டுத்தலங்களே புனிதமானது முக்கியமானது.- ஆயர் Leopoldo Jaucian.

மெரினா ராஜ்- வத்திக்கான்

தெற்கு பிலிப்பீன்ஸில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் கத்தோலிக்கர்கள், மற்றும் பிறமத கிறிஸ்தவர்களின்  ஆலயங்கள் சேதமடைந்துள்ளன என்றும் அதனை சரிசெய்ய மக்கள் அனைவரும் தாராள நிதி உதவி கொடுத்து ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஆயர் Leopoldo Jaucian  தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 25 செவ்வாய்க்கிழமையன்று தெற்கு பிலிப்பீன்ஸில் ஏற்பட்ட நில நடுக்கமானது  நாட்டின் பல மாநிலங்களைத் தாக்கியுள்ள நிலையில் அதன் சீரமைப்புப் பணிகள் பற்றிப் பேசுகையில் இவ்வாறு கூறியுள்ளார் ஆயர் Jaucian. 

ஆலய சீரமைப்பு உதவிக்காக செபிப்பதிலும் வேண்டுகோள்விடுப்பதிலும் கத்தோலிக்கர்கள் மற்றும் பிறசபை கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்திருப்பது, மக்கள் சார்ந்திருக்கும்  மதமல்ல, மாறாக, ஒன்று கூடி செபிக்கும் வழிபாட்டுத்தலங்களே புனிதமானது,  முக்கியமானது  என்பதை எடுத்துரைக்கின்றது என்று கூறியுள்ளார் Bangued மறைமாவட்டத்தின்  ஆயர்  Jaucian.

நூற்றாண்டு கால பழமையான ஆலயங்களில் உள்ள படங்கள் மற்றும் திருவுருவச் சிலைகள் உடைந்தும் சிதைந்தும் இருப்பது வேதனை அளிக்கின்றது எனவும், கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கை தொடர்புடைய இப்புனித பொருட்கள் அனைத்தும் கட்டாயம் சீரமைக்கப்பட வேண்டியவை என்றும் வலியுறுத்தியுள்ளார் ஆயர் Jaucian. 

மேலும், பள்ளிகளின் கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள கணணிகள் மற்றும் இதர பள்ளிப் பொருட்கள் அனைத்தும் சேதமடைந்திருப்பதாகவும், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட பிலிப்பீன்ஸ் பள்ளிக்கல்வித்துறையின் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் பாதிக்கப்பட்ட பள்ளி ஒன்றின் தலைமையாசிரியரான Esterio Apolinar.  

இதற்கிடையே, பிலிப்பீன்ஸின் காரித்தாஸ் அமைப்பு தங்களதுப் பணிகளை இக்காலகட்டத்தில்  சிறப்பாக செய்து வருவதாகவும், நிதி உதவித்தொகையை விட மக்களின் தேவைகள் அதிகமாக இருப்பதால் அதற்கான தொடர் முயற்சிகளை அயராது மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார் பிலிப்பீன்ஸ் காரித்தாஸ் அமைப்பின் தலைவர், ஆயர் Jose Colin Bagaforo. 

தெற்கு பிலிப்பீன்ஸில் ஏற்பட்ட நில நடுக்கம் Abra  மாநிலத்தில் உள்ள  Bangued மறைமாவட்டம், மற்றும்  Cagayan மாநிலத்தில் உள்ள Tuguegarao மறைமாவட்டத்திலும் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. (UCAN)

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 October 2022, 11:58