திருத்தந்தையர் வரலாறு: திருத்தந்தை 6ம் அலெக்ஸாண்டர் – பகுதி 2
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
கடந்த வாரத்தில் நாம் திருத்தந்தை 6ம் அலெக்ஸாண்டரின் வாழ்வு குறித்த முதல் பகுதியை நோக்கினோம். பல நல்ல பண்புகள் கொண்டிருந்த இத்திருத்தந்தைக்கு ஒரு பெரிய பலவீனமும் இருந்தது. அதுதான், தன் பிள்ளைகள் மீதான அளவுகடந்த பாசம். அதனால், தன் திருத்தந்தை பதவியை பிள்ளைகளுக்காகப் பயன்படுத்தினார். அது குறித்து இன்று காண்போம்.
தன்மகன் Juanஐ இஸ்பெயின் மன்னரின் நெருங்கிய உறவினர் பெண்ணுக்கு திருமணம் செய்துவைத்தார். இதன் மூலம் இஸ்பெயின் அரசரோடு உறவை வளர்த்துக்கொண்டார். இந்த Juanன் பேரன்தான், திருஅவையின் உன்னதப் புனிதர்களுள் ஒருவரான புனித பிரான்சிஸ் போர்ஜியா. தன் இன்னொரு மகன் Caesarஐ 18 வயதிலேயே ஸ்பெயினின் Valenciaவின் பேராயர் ஆக்கினார். ஆனால் Caesar இஸ்பெயினுக்கு செல்லவுமில்லை, அருள்பணியாளராகவோ, ஆயராகவோ திருநிலைப்படுத்தப்படவுமில்லை. கடைசி மகன் Jofreஐயும் இஸ்பெயின் திருஅவையில் அதிகாரியாக்கினார் இத்திருத்தந்தை. இதற்கிடையில், தனக்கு நம்பிக்கைக்குரிய ஒருவர் கர்தினால்கள் அவையில் இருக்கவேண்டும் என விரும்பிய திருத்தந்தை 6ம் அலெக்ஸாண்டர், தன் சகோதரி மகன் Giovanni Borgiaவை கர்தினாலாக உயர்த்தினார். இதற்கிடையில் தனக்குக்கீழ் இருந்த Virginio Orsiniக்கு இரு சிறிய நகரங்களை வாங்க நேப்பிள்ஸ் மன்னர் Ferrante தன்னிடம் சொல்லாமலேயே நிதி உதவி செய்ததை பொறுக்காத திருத்தந்தை, அவருக்கு எதிராக வட இத்தாலியின் மிலான் மற்றும் வெனிஸ் அரசுகளுடன் கூட்டுச்சேர்ந்தார். அதுவும் எப்படி என்றால், அப்பகுதியின் ஆட்சியாளரின் உறவினருக்கு தன் மகள் Lucreziaவை திருமணம் செய்துகொடுத்தன் வழியாக. திருத்தந்தை, பத்து கர்தினால்கள், மற்றும் உரோமையின் பிரபுக்கள் முன்னிலையில் இத்திருமணம் வெகு ஆடம்பரமாக வத்திக்கானில் இடம் பெற்றதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
திருத்தந்தையுடன் பகைமை கொண்டிருந்த நேப்பிள்ஸ் மன்னர் Ferrante, இஸ்பெயினின் தலையீட்டின்பேரில் திருத்தந்தையுடன் நட்பை உருவாக்க முன்வந்தார். அதுவும் எப்படி? தன் பேத்தியை திருத்தந்தையின் இளைய மகன் Jofreக்கு திருமணம் செய்து வைக்க முன்வந்ததன் வழியாக. இதற்கிடையே, Caesar Borgiaவும் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். நேப்பிள்ஸ் மன்னர் Ferrante 1494ஆம் ஆண்டு சனவரியில் உயிரிழக்க, அந்த அரசை கைப்பற்ற விரும்பிய பிரான்சிற்கு எதிராக, Ferranteயின் மகன் இரண்டாம் அல்போன்ஸோவை மன்னராக அங்கீகரித்தார். இந்நேரத்தில் பிரெஞ்ச் படைகள் ஆல்ப்ஸ் மலையைக் கடந்து உரோம் நகரை வந்தடைந்தன. ஏற்கனவே நேப்பிள்ஸ் நகர் விடயத்தில் திருத்தந்தையிடம் கோபமாயிருந்த மன்னர், உரோம் நகரை வந்தடைந்தவுடன், திருத்தந்தைக்கு ஆதரவாக இருந்த கோமகன்கள் ஒவ்வொருவராக அவரை விட்டு விலகி ஓடினர். ஆனால், திருத்தந்தை உறுதியாக நின்றார். நேப்பிள்ஸ் அரசை பிரான்ஸ் மன்னருக்கு விட்டுக்கொடுக்க அவர் தயாராக இல்லை. இறுதியில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. திடீரென்று பிரெஞ்ச் மன்னர், திருத்தந்தைக்கு எதிரான மோதலைக் கைவிட்டு, அவரை உண்மைத் திருத்தந்தையாக ஏற்று, தன் பணிவான வணக்கத்தை அளித்தார். பிரெஞ்ச் மன்னரோ, அங்கிருந்து நேப்பிள்ஸ்க்குச் சென்று இரண்டு மாதம் தங்கியிருந்து பார்த்து, வெற்றி எதுவும் கிட்டாமையால் மே மாதம் 1495ஆம் ஆண்டில் தனக்குத்தானே மன்னராக முடிசூட்டிக் கொண்டு ஜூலையில் படைகளுடன் பிரான்ஸ் திரும்பிவிட்டார்.
உரோம் நகரப் பாதுகாப்பிலும் அதிகக் கவனம் செலுத்தினார் திருத்தந்தை 6ம் அலெக்ஸாண்டர். இவர் கலைகளை வளர்த்தார். Pinturicchio (புகழ்பெற்ற கலைஞர் இரபேலின் குரு), Bramante ஆகியோரின் திறமைகளை ஊக்குவித்து பணிகளை வழங்கினார். உரோம் நகரின் 4 பெருங்கோவில்களுள் ஒன்றான புனித மேரி மேஜர் பெருங்கோவிலின் உட்புற மேற்கூரையில் அழகான கலை வேலைப்பாடுகளை அமைத்தார். கிறிஸ்தோபர் கொலம்பஸ் அமெரிக்காவிலிருந்து முதலில் கொண்டுவந்த தங்கத்தைக் கொண்டு அக்கலை வண்ணத்தை அவர் படைத்தார் எனக் கூறப்படுகிறது. அறிவியல் மற்றும் இலக்கியத்திலும் அதிக ஈடுபாடு காட்டினார். உரோமையப் பல்கலைகழகத்தை மீண்டும் கட்டி எழுப்பியவர் இவரே. இவரைச் சுற்றி எப்போதும் கற்றோர்களை வைத்துக்கொண்டார். இசையில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். வத்திக்கான் கோவிலின் பங்குத்தந்தையாக அகுஸ்தினார் துறவு சபை இருக்கவேண்டும் என்ற விதியைக் கொண்டுவந்தவரும் இவரே, அது இன்றும் தொடர்கிறது. புதிய நாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, இஸ்பெயினும் போர்த்துக்கல்லும் தங்கள் மக்களை அங்கு குடியமர்த்த எழுந்த சண்டைகளில், இந்த இரு நாடுகளுக்கும் இடையில் நடுநிலையாளராக இத்திருத்தந்தை பணியாற்றினார். மேலும், 1500ஆம் ஆண்டு உரோம் நகரில் இடம்பெற்ற யூபிலி ஆண்டு கொண்டாட்டத்தை மிகச் சிறப்பாக நடத்தினார் திருத்தந்தை 6ம் அலெக்சாண்டர்.
இவரின் மகன் தொண்டை அறுக்கப்பட்டு கொல்லப்பட்டது, இவர் மகளின் மூன்றாவது திருமணம் என்பவை குறித்து வரும் வார இறுதிப் பகுதியில் நோக்குவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்