வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை 8ம் இன்னசென்ட்டின் கல்லறை வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை 8ம் இன்னசென்ட்டின் கல்லறை 

திருத்தந்தையர் 8ம் இன்னசென்ட், 6ம் அலெக்ஸாண்டர்

சிலுவையில் தொங்கிய இயேசுவின் விலாவில் குத்தப்பட்ட ஈட்டியை, திருத்தந்தை 8ம் இன்னசென்டிடம்தான், சுல்தான் இரண்டாம் Bayezid வழங்கினார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தந்தை 4ம் சிக்ஸ்துஸின் மரணத்திற்குப்பின் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றார் திருத்தந்தை 8ம் இன்னசென்ட். 1432ஆம் ஆண்டு இத்தாலியின் ஜெனோவாவில் பிறந்த இத்திருத்தந்தை வரலாற்றில் குறிப்பிடும்படியான எவ்வித பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்திச் செல்லவில்லை எனக் கூறலாம். உரோமைய செனட் அவை அங்கத்தினர் Aran Cibò மற்றும் Teodorina de' Mari என்பவர்களின் மகனான இவரின் இயற்பெயர் Giovanni Battista Cibò என்பதாகும். இளம் வயதில் சுகவாழ்வைத்தேடி ஓடிய இவருக்கு திருமணம் ஆகாமலேயே Franceschetto, Teodorina என இரு குழந்தைகள் பிறந்தன. அதன்பின்னர் அருள்பணித்துவ வாழ்விற்குள் நுழைந்து கர்தினால் Calandriniயின்கீழ் பணியாற்றினார். 1467ஆம் ஆண்டு இத்தாலியின் சவோனா ஆயரானார். 1472ஆம் ஆண்டு தென்கிழக்கு இத்தாலியிலுள்ள Molfetta ஆயரானார். 1473ஆம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தப்பட்டார். 1484ஆம் ஆண்டு திருத்தந்தை 4ம் சிக்ஸ்துஸ் மரணமடைந்தவுடன் இடம்பெற்ற கர்தினால்கள் அவைக் கூட்டத்தில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தன்னைப்போல் ஜெனோவாவில் பிறந்த திருத்தந்தை 4ம் இன்னசென்டை கௌரவிக்கும் விதமாக எட்டாம் இன்னசென்ட் என்ற பெயரையும் எடுத்துக்கொண்டார். மிகுந்த கருணை உள்ளவராக விளங்கிய இவர், ஐரோப்பிய கிறிஸ்தவ மன்னர்களிடையே அமைதியை உருவாக்குவதில் அதிகக் கவனம் செலுத்தினார். ஆனால், 1490ஆம் ஆண்டில் உரோமையில் கூடிய  கிறிஸ்தவ மன்னர்களின் கூட்டத்தில் நல்ல தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. துருக்கியர்களுக்கு எதிராக சிலுவைப் போர் நடத்த ஐரோப்பிய இளவரசர்களை ஒன்றிணைக்கும் முயற்சி தோல்வியடைய இவரும் ஒருவிதத்தில் காரணமாக இருந்தார் என்பதும் உண்மை. நேப்பிள்ஸ் மன்னர் Ferranteயுடன் இவர் முரண்பாடு கொண்டிருந்ததால் சில மன்னர்கள் இவரை ஆதரிக்கவில்லை.

மேலும், இவர் இரக்க குணம் உடையவராக இருந்ததால் உரோமையில் குற்றங்கள் பெருகின. பெரிய தண்டனை இல்லாதிருந்ததால் குற்றவாளிகளின் எண்ணிக்கை பெருகியது என வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். ஆஸ்திரியாவின் இறைஊழியர் Margrave Leopold அவர்களைப் புனிதராக அறிவித்தது இத்திருத்தந்தையே. சிலுவையில் தொங்கிய இயேசுவின் விலாவில் குத்தப்பட்டு, பின்னர் எருசலேமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஈட்டியை, இத்திருத்தந்தையிடம்தான் ஒட்டமான் சுல்தான் இரண்டாம் Bayezid, திருத்தந்தை இறப்பதற்கும் சிறிது காலத்திற்கு முன்பு கிறிஸ்தவர்களுக்கென வழங்கினார். இவர் காலத்தில் வத்திக்கான் கருவூலம் காலியானதால், அதிகாரமிக்க சில அலுவல்களை இவர் உருவாக்கி அப்பதவிகளை ஏலம் விட்டார் என்ற குற்றச்சாட்டும் இந்த திருத்தந்தை மீது உண்டு. இத்திருத்தந்தை எட்டாம் இன்னசென்ட், 1492ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ம் தேதி இறைபதம் சேர்ந்தார்.

திருத்தந்தை 6ம் அலெக்ஸான்டர்

திருத்தந்தை எட்டாம் இன்னசென்டின் மரணத்தைத் தொடர்ந்து திருத்தந்தை பொறுப்பை ஏற்றார் திருத்தந்தை 6ம் அலெக்ஸான்டர். இவர் திருத்தந்தையர் வரலாற்றிலேயே ஒழுக்கம் குறைந்த ஒருவராக இருந்தார் எனத் தெரியவருகிறோம். இவரைப் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் எண்ணற்ற கதைகள் எழுதி வைத்துச் சென்றுள்ளனர். குடும்பத்திற்காக உழைத்த சில திருத்தந்தையர்கள் குறித்து நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். ஆனால் இவரோ, தன் சொந்த குழந்தைகளுக்காக உழைத்துள்ளார். ஒரு பக்கம் நல்ல நிர்வாகியாகவும், மறுபக்கம் தன் குழந்தைகளுக்காக உழைப்பவராகவும் இருந்துள்ளார். அவரின் இரு பக்கங்கள் குறித்து காண்போம்.

1431ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் தேதி இஸ்பெயின் நாட்டின் Xativa எனுமிடத்தில் பிறந்தார் Rodrigo Borgia என்ற இயற்பெயர் கொண்ட இத்திருத்தந்தை. திருத்தந்தை மூன்றாம் கலிஸ்துசின் தங்கை Isabella Borja, மற்றும் Jofre Lançolவுக்கு பிறந்த  மகன் இவர். திருஅவையில் அருள்பணியாளராக அருள்பொழிவுச் செய்யப்படாமலேயே பல்வேறு படிகளைத் தாண்டி உயர் பதவிகளை அனுபவித்தவர் இவர். இவரின் மாமாவான திருத்தந்தை மூன்றாம் கலிஸ்துஸ் 1455ஆம் ஆண்டு திருத்தந்தையாகப் பொறுப்பேற்றபின், இவரை சட்டம் படிக்க இத்தாலியின் பொலோஞ்ஞா நகருக்கு அனுப்பினார். 1456ஆம் ஆண்டு இவரின் 25ம் வயதிலேயே கர்தினால் தியாக்கோனாக உயர்த்தப்பட்டார். 1457ஆம் ஆண்டிலிருந்து திருஅவையின் முக்கிய அதிகாரியாகச் செயல்பட்டார். சூதாட்டத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார் இவர். அவர் காலத்தின் மிகப் பெரும் பணக்காரர்களுள் ஒருவராக இருந்தார். ஆயரும் கர்தினாலும் ஆனபின்தான் 1468ஆம் ஆண்டு அவர் அருள்பணியாளாராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அதன் பின்னரும் இவரின் கேளிக்கை விளையாட்டுகள் குறையவில்லை.

  நல்ல திறமையான பேச்சாளர். நல்ல நிர்வாகி, அதேவேளை இவ்வுலக சுகபோகங்களில் அதிக நாட்டம் உடையவர். 1470ஆம் ஆண்டு இவருக்கு Vanozza Catanei என்ற உரோமையப் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு Juan, Caesar, Lucrezia, Jofre என்ற 4 குழந்தைகள் 1474, 1476, 1480, 1482 ஆகிய ஆண்டுகளில் பிறந்தன. இந்நிலையில் 1492ஆம் ஆண்டு 25 ஜூலையில் திருத்தந்தை 8ம் இன்னசென்ட் மரணமடைய, கர்தினால்கள் அவையில் ஆகஸ்ட் 11ம் தேதி திருத்தந்தையாக அறிவிக்கப்பட்டார் இவர். இவரின் வாக்கையும் சேர்த்து மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளுடன் திருத்தந்தையானார் 6ம் அலெக்ஸாண்டர். இவரை, வேறு எந்த திருத்தந்தையையும்விட அதிகமாக உரோம் மக்கள் வரவேற்றனர். இவர் புனித பேதுரு பசிலிக்காவில் பொறுப்பேற்றபோதும், அதன்பின் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா நோக்கிச் சென்றபோதும் மக்கள் வழங்கிய வரவேற்பு மிகப் பெரியதாக இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். உரோம் நகரில் முந்தைய திருத்தந்தையின் காலத்தில் குற்றங்கள் அதிகரித்திருந்ததாகக் கண்டோம் அல்லவா? இத்திருத்தந்தை பதவியேற்றவுடனேயே, குற்றங்களுக்கான கடுமையான தண்டனை முறைகளை அறிவித்து குற்றங்களைக் கட்டுப்படுத்தினார். நிர்வாக ஒழுங்கமைப்பைக் கொண்டுவரும் நோக்கத்தில் உரோம் நகரை நான்கு மாவட்டங்களாகப் பிரித்து ஒவ்வொன்றிற்கும் நீதிபதிகளை நியமித்தார். அது மட்டுமல்ல, வாரத்தின் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மக்கள் தன்னை நேரடியாகச் சந்தித்து தங்கள் குறைகளை முறையிடலாம் எனவும் அறிவித்து செயல்படுத்தினார்.

இத்தகைய நல்ல பழக்கங்களைக்கொண்ட இத்திருத்தந்தையின் வரலாற்றுத் தொடர்ச்சியை, வரும் வாரம் காண்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 October 2022, 14:31