பொதுக் காலம் 28ம் ஞாயிறு : யாதும் ஊரே! யாவரும் கேளீர்
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. 2 அர 5: 14-17 II. 2 திமோ 2: 8-13 III. லூக் 17: 11-19)
இன்று நாம் பொதுக் காலத்தின் 28ம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் பிற இனத்தார் கடவுள் மீது கொண்டிருக்கும் ஆழமான நம்பிக்கையை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. அதேவேளையில் கடவுள்மீதான நமது நம்பிக்கை எந்தளவுக்கு ஆழமானதாக இருக்கின்றது என்று சிந்தித்துப் பார்க்கவும் நம்மை அழைக்கின்றன. இன்றைய நடைமுறை வாழ்க்கையில் பிற இனத்தாரிடம் இருக்கும் பக்தி கூட, கடவுளை அனுதினமும் நம்புவதாகக் கூறுவோரிடம் இருப்பதில்லை என்பதும் உண்மையாக இருக்கின்றது.
ஒர் ஊரில் ஏழைப் பெண் ஒருவர் இருந்தார். அவரிமிருந்த மாடுகளிடமிருந்து பாலை கறந்து அக்கம் பக்கத்து கிராமங்களில் உள்ள பலரின் வீடுகளுக்குச் சென்று தினசரி கொடுப்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். அதன் வழியாகக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தனது வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். அவர் கடவுளை அறியாத ஒரு வேற்றினப் பெண். ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு துறவியின் மடத்திற்கும் இவர்தான் தினமும் பால் ஊற்றி வந்தார். ஒரு நாள் வழக்கம் போல, துறவி பூசையில் உட்கார்ந்தார். ஆனால், பூசைக்குத் தேவையான பால் இன்னும் வரவில்லை. பால் கொண்டு வரும் இந்தப் பெண் அடிக்கடி தாமதமாக வருகிறார் என்பதை புரிந்துகொண்ட அவர், ஒருநாள் அந்தப் பெண்ணிடம், “ஏன்மா… உன்னாலே ஒழுங்கா சரியான நேரத்துக்குப் பால் கொண்டுவர முடியாதா? உன்னாலே எனக்குப் பூசை நேரம் தாமதமாகுது” என்று கடிந்து கொண்டார். “மன்னிக்கணும் சாமி. நான் என்ன பண்ணுவேன்…. வீட்டை விட்டு சீக்கிரமா தான் கிளம்புறேன். ஆனால், இங்கே வர்றதுக்கு கரையில படகுக்காக ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டியிருக்கு.” என்று கூறினார்.
அதற்கு அந்தத துறவி, “என்னது ஆத்தை கடக்குறதுக்குப் படகுக்கு காத்திருக்கியா? அவனவன் பிறவிப் பெருங்கடலையே 'கடவுளே... கடவுளேன்னு...' சொல்லிகிட்டே தாண்டிடுறான். நீ என்னடான்னா ஆத்தை கடக்குறதை போய் ஒரு பெரிய காரியமா சொல்லிகிட்டிருக்கியே…. சரி சரி... போ…. இனிமே சீக்கிரம் வரணும். இல்லேன்னா எனக்குப் பால் வேண்டாம்” என்று கறாராகக் கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார். துறவி. விளையாட்டாக சொன்னதை, அந்தப் பெண் மிகவும் பயபக்தியுடன் கேட்டுக்கொண்டார். மறுநாளிலிருந்து சரியாகக் குறித்த நேரத்துக்குப் பால் கொண்டு வர தொடங்கிவிட்டார் அப்பெண். இதனால் அந்தத் துறவிக்குத் திடீரென சந்தேகம் வந்துவிட்டது. “என்னமா இது அதிசயமா இருக்கு? இப்போதெல்லாம் சரியான நேரத்துக்கு வந்துடுறியே?” என்றார். “எல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்த மந்திரம் தான் சாமி…. அதச் சொல்லி சொல்லித்தான் நான் ஆத்தை சுலபமா தாண்டிடுறேன். படகுக்காக இப்போதெல்லாம் நான் காத்திருக்கிறதில்லை” என்றார் அந்த பெண். "என்னது... நான் சொல்லிக் கொடுத்த மந்திரமா? அதை வெச்சு ஆத்தை தாண்டிடுறியா? நம்பமுடியலியே…. என்னால” என்று கூறிய துறவி, சரி வா.. நீ ஆற்றைத் தாண்டுவதை நான் நேரில் பார்க்க வேண்டும்” என்றார்.
ஆற்றின் கரைக்குச் சென்றவுடன், “எங்கே தாண்டு பார்க்கலாம்” என்றார் அந்த பெண்ணிடம். உடனே அந்தப் பால்காரப் பெண், கை இரண்டையும் கூப்பி “கடவுளே... கடவுளே..” என்று கூறியபடியே தண்ணீரில் நடக்கத் தொடங்கினார். இதனைப் பார்த்த துறவிக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி மறுபக்கம் தயக்கம். “ஆறு எவ்வளவு ஆழம்னு தெரியலையே…. தவிர கால் உள்ளே போய்ட்டா என்ன செய்றது? ஆடை நனைந்துவிடுமே…? என்று பலவாறாக சிந்தித்தார். ஒரு சில வினாடிகள் தயக்கத்துக்கு பிறகு ‘கடவுளே... கடவுளே..' என்று கூறியபடி தண்ணீரில் காலை வைக்க முயற்சித்தார் ஆனால் கால் உள்ளே சென்றதும் திடுக்கிட்டு வெளியே வந்துவிட்டார். அப்போது, “அம்மா உன்னாலே முடியுது என்னால ஏன் முடியலே….?” என்று அந்தப் பெண்ணைப் பார்த்துக் கேட்டார் துறவி. அதற்கு அந்தப் பெண் பணிவுடன், “சாமி. உங்க உதடு ‘கடவுளே... கடவுளே..'’ன்னு சொன்னாலும் உங்க கை ரெண்டும் உங்க உடை நனையக் கூடாதுன்னு தூக்கி பிடிச்சிருக்கே….? தவிர ஆத்தோட ஆழத்தை சோதித்துப் பார்க்கும் உங்க முயற்சி அந்தக் கடவுளையே ஆழம் பார்க்கிறது போலல்லவா இருக்கு!” என்றார். அப்போது அந்தத் துறவி வெட்கித் தலைகுனிந்தார்.
இன்றைய முதல் வாசகத்தில் நாமான் தொழுநோயிலிருந்து நலம் பெறுகிறார். இப்பொழுதெல்லாம் தொழுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இந்த நோய் மிகக் கொடியதாகக் கருதப்பட்டது. தொழுநோய் கொண்டவர் அருகில் யாருமே வரமாட்டார்கள். இவர்கள் பெரும்பாலும் ஊருக்கு வெளியே தள்ளப்படுவார்கள். தனது இரத்த சொந்தங்களாலேயே இவர்கள் நிராகரிக்கப்படுவார்கள். இந்நிலையில்தான் சிரியாவைச் சேர்ந்த நாமான் தொழுநோயிலிருந்து நலம் பெறுகிறார். இஸ்ரயேல் இனத்தைச் சாராத நாமான் இஸ்ரயேல் மக்களின் யாவே கடவுளை உண்மைக் கடவுளாக ஏற்று அவர்மீது நம்பிக்கை கொள்கின்றார். பின்பு, அவர் தம் பரிவாரம் அனைத்துடன் கடவுளின் அடியவரிடம் திரும்பி வந்து, “இஸ்ரயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லையென இப்போது உறுதியாக அறிந்து கொண்டேன்” என்கிறார். இஸ்ரயேல் மக்கள் அதிலும் குறிப்பாக உயர்நிலையில் இருந்தோர் அனைவரும் தாங்கள் மட்டுமே யாவே கடவுளால் தேரிந்துகொள்ளப்பட்டவர்களாகக் கருதிக்கொண்டு சமாரியர் போன்ற பிற இனமக்களை வெறுத்தொதுக்கி வந்தனர். சட்டங்களின் பெயரால் சாமானியர்களைப் புறந்தள்ளி வந்தனர். ஆனால், நம்பிக்கையுடன் தன்னை நாடிவரும் அனைவருக்கும் கடவுள் நலமளிக்கக் கூடியவர் என்பதை இன்றைய முதல் வாசகமும் மூன்றாம் வாசகமும் நமக்கு எடுத்துரைக்கின்றன.
நற்செய்தி வாசகத்தில் தொழுநோயாளர்கள் 10 பேர் நலம் பெரும் நிலையில், அவர்களில் சமாரியர் ஒருவர் மட்டுமே திரும்ப வந்து இயேசுவுக்கு நன்றி செலுத்துகிறார். இப்போது அப்பகுதியை வாசிப்போம். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று. அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர். இயேசு, அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அந்நியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார். பின்பு அவரிடம், “எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” என்றார்.
இயேசு தனது பணிவாழ்வில் சமாரியர், கனானேயர், நூற்றுவர் தலைவர் போன்ற பிறஇன மக்களின் நம்பிக்கையைப் போற்றுகின்றார். அவர்களுக்கு முதன்மைப்படுத்திப் பேசுகின்றார். லூக்கா நற்செய்தியில் வரும் நல்ல சமாரியர் உவமையிலும், யோவான் நற்செய்தியில் வரும் இயேசு-சமாரியப்பெண் உரையாடலிலும் இதனை நாம் காண்கின்றோம்.
பழைய ஏற்பாட்டில் ரூத்து புத்தகத்தில் அருமையான நிகழ்வு ஒன்று வருகிறது. பிற இனத்துப் பெண்ணான ரூத்து நகோமியின் மகனை மணந்து கைம்பெண்ணான நிலையில் திரும்பவும் தனது நாட்டிற்குப் போகவிரும்பாமல் அவருடனேயே பெத்லேகம் வருகின்றார். நகோமி தம் கணவரையும் இரு மைந்தரையும் இழந்து தன்னந் தனியாளாய் விடப்பட்ட நிலையில் ரூத்து அவருக்கு உண்மை மருமகளாய் உற்றதுணையாகிறார். அயல்நாட்டு பெண்ணான ரூத்து இஸ்ரயேல் கடவுள்மீது கொள்ளும் பேரன்பை நம்மால் கண்டு மகிழமுடிகிறது. அதற்கு ரூத்து, “உம்மோடு வராமல் உம்மை விட்டுப் பிரிந்து போகும்படி என்னை நீர் வற்புறுத்த வேண்டாம். நீர் செல்லும் இடத்திற்கே நானும் வருவேன்; உமது இல்லமே எனது இல்லம்; உம்முடைய இனமே எனது இனம்; உம்முடைய தெய்வமே எனக்கும் தெய்வம். நீர் எங்கே இறப்பீரோ அங்கேயே நானும் இறப்பேன்; அங்கேதான் என் கல்லைறையும் இருக்கும்; சாவிலும் உம்மைவிட்டு நான் பிரியேன்; அப்படிப் பிரிந்தால் ஆண்டவர் என்னைத் தண்டிப்பாராக” என்றார். (ரூத் 1:16-17). ரூத்தின் இத்தகைய நம்பிக்கை நிறைந்த வாழ்வால் இஸ்ரயேல் இனத்தவரான போவாசு அவரை மறுமணம் செய்துகொண்டு அவருக்கு மறுவாழ்வு அளிக்கும் அளவிற்கு அவரைக் கடவுள் நிறைவாக ஆசீர்வதிக்கின்றார். இதன் வழியாக, ரூத்து இயேசுவின் மூதாதையர் பட்டியலில் இடம்பெறும் பேறுபெறுகிறார்.
இயேசு தனது இறையாட்சிப் பணியைத் தொடங்கியபோது, பலபேர் வந்துபோகும் எருசலேமில் தொடங்காமல் பல இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியில் தொடங்குகிறார். முற்காலத்தில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் ஆண்டவர் அவமதிப்புக்கு உட்படுத்தினார்; பிற்காலத்திலோ, பெருங்கடல் வழிப்பகுதி யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு, பிற இனத்தார் வாழும் கலிலேயா நாடு ஆகிய பகுதிகளுக்கு மேன்மை வரச்செய்வார். காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது (எசா 9:1-2) என்று எசாயா புத்தகத்தில் வாசிக்கின்றோம். இயேசு தனதுப் பணியை எருசலேமில் தொடங்கியிருந்தால், அவரது போதனைகள் அதிக எண்ணிக்கையிலான யூதர்களைச் சென்றடைந்திருக்கும். ஆனால் இயேசு அவ்வாறு செய்யவில்லை. காரணம், தனது இறைத்தந்தையின் அன்பு எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டுமென இயேசு விரும்பினார்.
சிறப்பாக, நூற்றுவர் தலைவர் ஒருவர் இயேசுவிடம் வந்து (மத் 8:5-13) முடக்குவாதத்தால் துயருறும் தன் மகனை குணப்படுத்த வேண்டும்போது, தான் வந்து அவர் மகனைக் குணமாக்குவதாகக் கூறுகிறார் இயேசு. அப்போது நூற்றுவர் தலைவர் “ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால், ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான் என்று நம்பிக்கையோடு கூறுகிறார். இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என்று கூறுவதைப் பார்க்கிறோம். இந்த வார்த்தைகளை நினைவில் நிறுத்திதான் திருப்பலியின் இறுதியில் திருவிருந்துச் சடங்கில் பங்குபெறுவதற்கு முன்பு, “ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுயற்றவன்; ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும்; என் ஆன்மா நலமடையும்” என்று கூறுகின்றோம்.
மேலும், இயேசு ஆண்டவர் இன்னொரு முக்கியமான விடயத்தையும் நமக்கு நினைவு படுத்துகின்றார். அதாவது, கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர். அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்” என்கிறார். ஆக, கடவுள் எல்லாருக்கும் சொந்தமானவர்; நம்பிக்கையோடு தன்னைக் கூவி அழைப்போர் அனைவரையும் ஆதரித்து அவர்களை குணப்படுகிறார்; சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டோரையும், ஓரங்கட்டப்பட்டோரையும், சிறுமைப்படுத்தப்பட்டு வாழ்வில் நலிந்தோரையும் அவர் என்றும் கைதூக்கி விடுகிறார். இறைநம்பிக்கை கொண்ட அனைவரையும் தனது அரசில் ஏற்றுக்கொள்கிறார். இப்படி கூறும் இயேசு, அதேவேளையில், இத்தகையோரை ஏற்றுக்கொள்ளாத அனைவரும் அவரது அரசிலிருந்து விரட்டியடிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கின்றார். ஆகவே, கடவுள்மீதான நமது உண்மையான நம்பிக்கை என்பது அவரைப் போல நாம் எல்லாரையும் அரவணைத்துச் செல்வதில் அடங்கியிருக்கிறது என்பதையும் உள்ளத்தில் உள்வாங்கிக்கொள்வோம். எல்லாரையும் ஏற்றுவாழும் நல்மனதை இறைவன் நமக்கு வழங்க வேண்டுமென இந்நாளில் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்