பொதுக் காலம் 29ம் ஞாயிறு : மனம்தளராமல் மன்றாடுவோம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. விப 17: 8-13 II. 2 திமோ 3: 14 - 4: 2 III. லூக் 18: 1-8)
அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் மாணவி ருச்சிகா. இவர் சண்டிகரில் உள்ள திருஇருதயப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் பயின்று வந்தார். அவரது தந்தை கிருகோத்ரா, யூகோ வங்கியில் மேலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். ருச்சிகாவின் பத்தாவது வயதில் அவருடைய அம்மா இறந்துவிட்டார். அவருக்கு ஆசு என்னும் ஒரு சகோதரர் இருந்தார். ருச்சிகா, தனது நண்பர் ஆராதனா பிரகாசுடன், அரியானா லான் டென்னிஸ் அசோசியேஷனில் பயிற்சி பெறுவதற்காகச் சேர்ந்தார். இந்நிலையில் கடந்த 1990-ஆம் ஆண்டில் ருச்சிகாவுக்கு 14 வயதே நிரம்பியிருந்த நிலையில், அவர் பயிற்சிக்குச் செல்லும் நேரங்களில், அம்மாநில டி.ஜி.பி.யாக இருந்த ரத்தோர் என்பவர் அவருக்குப் பாலியல் தொந்தரவுகள் கொடுத்து வந்தார். இதனால் ருச்சிகா, காவல் துறை அதிகாரியான ரத்தோருக்கு எதிராகப் புகார் அளித்தார். இதன் காரணமாக, ருச்சிகாவுடன் அவரது குடும்பத்துக்கும் சேர்த்து ரத்தோர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். இதனால் மனமுடைந்த ருச்சிகா 1993-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
19 ஆண்டுகள், 40 ஒத்திவைப்புகள், 400க்கும் மேற்பட்ட விசாரணைகள் எனத் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தது இந்த வழக்கு. இறுதியாக, 2009-ஆம் ஆண்டு, டிசம்பர் 22-ஆம் நாளன்று, நீதிமன்றம் இறுதியாக இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கியது. இந்திய தண்டனைச் சட்டம் 354 (துன்புறுத்தல்) பிரிவின் கீழ் ரத்தோரை குற்றவாளி என்று அறிவித்து, அவருக்கு ஆறு மாத சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்தது. ஆனாலும் அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். ரத்தோருக்கு வழங்கப்பட்ட தண்டனையை அதிகரிக்கக் கோரி ருச்சிகாவின் பெற்றோர் சண்டீகர் செசன்ஸ் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால் அதேவேளையில் தனக்கு வழங்கப்பட்ட 6 மாதச் சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி ரத்தோரும் இதே நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த இரு மனுக்களையும் விசாரித்த நீதிபதி குல்பீர் சிங், ரத்தோரின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், அவருக்கு வழங்கப்பட்ட 6 மாதச் சிறை தண்டனையை ஒன்றரை ஆண்டுகளாக உயர்த்தியதுடன் அவரை உடனடியாக சிறையி்ல் அடைக்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து ரத்தோர் சண்டீகரில் உள்ள புராயில் சிறையில் அடைக்கப்பட்டார். ருச்சிகாவின் தோழி ஆராதனா என்பவர் இரண்டாண்டுகளுக்குப் பிறகு ரத்தோரின் பாலியல் சீண்டல்கள் குறித்த தகவல்களை வெளியிட்டதால்தான் இந்த விவகாரம் வெளியுலகுக்குத் தெரியவந்தது. நீதிக்கான இந்தப் போராட்டத்தில் ருச்சிகாவின் தந்தை மற்றும் ருசிக்காவின் தோழி ஆராதனாவின் பெற்றோர் ஆகிய இரு குடும்பத்தாரும் இறுதிவரை மனந்தளராமல் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தியதால்தான் அவர்களால் இந்த வழக்கில் வெற்றிபெற முடிந்தது.
பொதுக் காலத்தின் 29-ஆம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் நீதிக்கானப் போராட்டத்தில் இறை நம்பிக்கையுடன் தொடர்ந்து மனந்தளராமல் போராட வேண்டும் என்ற உயரிய கருத்தை முன்வைக்கின்றன. இப்போது இது குறித்த விளக்கும் நற்செய்தி வாசகத்திற்குச் செமடுப்போம். அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். “ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், ‘என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், ‘நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார்’ என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.” பின் ஆண்டவர் அவர்களிடம், “நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
இயேசு கூறும் இந்த உவமையில், நமது அன்றாட வாழ்வில் நீதிக்கான போராட்டத்தில் நாம் விடா முயற்சியுடன் துணித்து போராட வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகிறார். அதிலும் குறிப்பாக, நேர்மையற்ற இவ்வுலக நடுவர்களே பலநேரங்களில் நமக்கு நீதி வழங்கும்போது, கடவுள், தன்னை நோக்கிக் குரலெழுப்பும் அவர்தம் அடியவரை, கண்டுகொள்ளாமல் இருக்கமாட்டார், கைவிடவும் மாட்டார் என்று கூறுகின்றார் இயேசு. இம்மறையுரையின் தொடக்கத்தில் நாம் கேட்ட ருச்சிகாவின் வாழ்வு, இயேசு கூறும் இந்த உவமைக்கு மிகவும் பொருந்தமாக அமைந்துள்ளது.
கோவைப்புதூரிலுள்ள அற்புத குழந்தை இயசு திருத்தலத்திற்கு முதல் வியாழன் திருப்பலி நிறைவேற்றுவதற்காகச் சென்றிருந்தேன். திருப்பலியின் இறுதியில் நற்கருணை ஆராதனை நடைபெற்றது. அது முடிந்ததும் பக்தர்கள் சாட்சி சொல்லும் நிகழ்வு நடைபெற்றது. பலர் வந்து சாட்சி சொல்லிவிட்டுப் போனார்கள். அப்போது பெண் ஒருவர் பச்சிளம் குழந்தை ஒன்றை கையில் ஏந்தியவாறு சாட்சி சொல்ல வந்தார். “நான் ஒரு கிறிஸ்தவ பெண் அல்ல. வேறு மதத்தை சேர்ந்தவள். எனக்குத் திருமணமாகி 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் எனக்குக் குழந்தைப் பேறு கிடைக்கவில்லை. இதனால் எனது வீட்டில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன. ஆனால், என் கணவர் மட்டும் என்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அதனால், துயரங்கள் மத்தியிலும் என் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தேன். ஒருநாள் கிறிஸ்தவ பெண் ஒருவரை நான் எதேச்சையாகச் சந்திக்க நேரிட்டது. அப்போது, குழந்தை பாக்கியமற்ற எனது நிலை பற்றி அவரிடம் எடுத்துக்கூறினேன். உடனே அவர், அக்கா, கோவைப் புதூரிலுள்ள குழந்தை இயேசு கோவிலுக்குப் போய் செபம் செய்யுங்கள். அற்புதக் குழந்தை இயேசு உங்கள் குறைகளைப் போக்கி உங்களுக்குக் குழந்தை வரம் அருள்வார். நம்பிக்கையோடு செல்லுங்கள் என்று என்னிடம் கூறினார். அப்போதிலிருந்து இந்த அற்புத குழந்தை இயேசு கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் முதல் வியாழனன்று வரத் தொடங்கினேன். மூன்று ஆண்டுகளாக மனந்தளராமல் விடாமல் தொடர்ந்து வந்தேன். அற்புத குழந்தை இயேசுவே, என்னைப் பாருங்கள், எனக்கு ஏற்பட்டுள்ள அவமானத்தைப் போக்குங்கள், நீங்களே என் வயிற்றில் ஒரு குழந்தையாகப் பிறந்திடுங்கள் என்ற கண்ணீர்விட்டு அழுது செபித்தேன். சரியாக மூன்று ஆண்டுகள் கழித்து இப்போது எனக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்துள்ளது. அற்புத குழந்தை இயேசுவே எனக்குக் குழந்தையாக வந்து பிறந்துள்ளார் என்று கூறி ஆனந்த கண்ணீர் வடித்தார்.
நமது தமிழகத்தின் வேளாங்கண்ணியிலுள்ள புனித ஆரோக்கியமாதா கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் பலரிடம் நாம் பேசியிருக்கிறேன். அவர்களில் பலர், “சாமி நான் பல ஆண்டுகளாக மாதா கோவிலுக்கு நடந்து போகிறேன், மாதா கண்டிப்பாக என் தேவையை நிறைவேற்றுவாங்க, அந்த நம்பிக்கையில்தான் நான் இத்தனை ஆண்டுகளாகப் பாதயாத்திரைப் போயிட்டு இருக்கேன்” என்று ஆழமான நம்பிக்கையுடன் பேசியதைக் கேட்டிருக்கிறேன். யானையின் நம்பிக்கை அதன் தும்பிக்கையில் இருப்பதுபோல மனிதரின் நம்பிக்கை இறைவனில் இருக்கவேண்டும்.
பழைய ஏற்பாட்டிலுள்ள சாமுவேல் முதல் புத்தகத்தில் ஒரு நிகழ்வு வருகிறது. எல்கானா என்பவருக்கு அன்னா, பெனின்னா என்ற இரு மனைவியர். இவர்களில் முதல் மனைவிக்கு குழந்தைப்பேறு கிடைத்தது. ஆனால் அவரது இரண்டாவது மனைவியான அன்னா குழந்தைப்பேறு இல்லா நிலையில் முதல் மனைவியால் இகழ்ந்து ஒதுக்கப்பட்டார். ஆனாலும், அன்னா மனம் தளராமல் தினமும் ஆலயம் சென்று இறைவனிடம் வேண்டுதல் செய்து வந்தார். “படைகளின் ஆண்டவரே! நீர் உம் அடியாளாகிய என் துயரத்தைக் கண்ணோக்கி. என்னை மறவாமல் நினைவு கூர்ந்து எனக்கு ஓர் ஆண் குழந்தையைத் தருவீரானால், அவனை வாழ்நாள் முழுவதும் ஆண்டவராகிய உமக்கு ஒப்புக்கொடுப்பேன். (1 சாமு 1:11). என்ற அவரின் தொடர் வேண்டுதல் இறைவனால் கேட்கப்பட்டு சாமுவேல் என்ற ஆண்குழந்தையை கடவுள் அவருக்குப் பரிசாகக் கொடுக்கிறார். அக்குழந்தையை பிற்காலத்தில் இறைவாக்கினராக மாற்றுகின்றார் கடவுள். புதிய ஏற்பாட்டில் வரிதண்டுபவரான சக்கேயுவின் வாழ்வைப் பார்க்கின்றோம். எப்படியும் இயேசுவைப் பார்த்துவிடவேண்டும் என்று தொடர்ந்து அவர் எடுக்கின்ற மனம்தளராத முயற்சியின் பயனாக, இயேசுவே அவருடைய வீட்டிற்குச் சென்று அவரோடு தங்குகின்றார், உணவு அருந்துகின்றார், அவரை ஆசீர்வதிக்கின்றார். “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில், இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்” (லூக் 19:9-10) என்று இயேசு கூறுவதைப் பார்க்கின்றோம். “தாய்கூட அழுகின்ற பி்ள்ளைக்குத்தானே பசியென்று பரிவோடு பாலூட்ட வருவாள். உன்வீட்டுக் கண்ணாடி ஆனாலும் கூட முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே. மனதுக்குள் பலகோடி நினைவுகள் இருந்தாலும் உதடுகள் திறந்தால்தான் உதவிகள் பெறக்கூடும்” என்கின்றார் ஒரு கவிஞர்.
இன்றைய முதல் வாசகத்தில் அமலேக்கியர்களுக்கும் இஸ்ரயேலருக்கும் இடையே நிகழ்கின்ற போரில், தொடர் இறைவேண்டல்தான் அவர்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தருகிறது. மோசே தம் கையை உயர்த்தியிருக்கும்போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றியடைந்தனர்; அவர் தம் கையைத் தளர விட்டபோதெல்லாம் அமலேக்கியர் வெற்றியடைந்தனர். மோசேயின் கைகள் தளர்ந்து போயின. அப்போது அவர்கள் கல்லொன்றை அவருக்குப் பின்புறமாக வைக்க, அவர் அதன்மேல் அமர்ந்தார். அவர் கைகளை ஆரோன் ஒருபக்கமும், கூர் மறுபக்கமுமாகத் தாங்கிக்கொண்டனர். என்று வாசிக்கின்றோம். இதில் முக்கியமான விடயம் ஒன்று பொதிந்துக் கிடக்கிறது. அதாவது, நமது கிறிஸ்தவ வாழ்வில் கடவுள் மீதான நமது நம்பிக்கை குறையும்போதெல்லாம் தோல்வி நம்மை கீழே விழச் செய்கிறது. ஆனால் அதேவேளையில் கடவுள்மீதான நமது நம்பிக்கை வளரும்போதெல்லாம் வெற்றி நம்மை தலை நிமிரச் செய்கிறது என்பதுதான்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடியார் திமொத்தேயுவுக்கு கூறும் அறிவுரையில், “நீ கற்று, உறுதியாய் அறிந்தவற்றில் நிலைத்து நில்; யாரிடம் கற்றாய் என்பது உனக்குத் தெரியுமே. நீ குழந்தைப் பருவம் முதல் திருமறைநூலைக் கற்று அறிந்திருக்கிறாய். அது இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது” என்ற வார்த்தைகள் வழியாக, நாம் கற்றுக்கொண்ட திருமறை நூல்கள் நம்மை மென்மேலும் இறைநம்பிக்கையில் வளர்க்கவேண்டும் என்று கூறுகின்றார். “முயற்சியை எவனொருவன் கைவிடுகிறானோ, அப்போதே அவன் திறமை அவனிடமிருந்து போய் விடுகிறது” என்கிறார் அறிஞர் எமர்சன். “முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்” (குறள் 616) என்ற குறள் வழியாக, முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும் என்று திருவள்ளுவரும் முயற்சியின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைக்கின்றார். ஆகவே, நமது நம்பிக்கை போராட்டத்தில் நாம் மனம் தளராமல் இறுதிவரை உறுதியோடு நின்று போராடவேண்டும். இத்தகைய இறையருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்