தெற்கு பாகிஸ்தானில் சிறந்த கத்தோலிக்க மருத்துவமனை
மெரினா ராஜ் -வத்திக்கான்
நல்ல சமாரியன் மன நிலை கொண்டு உடல் நலமற்றோரை இலவசமாக பரமாரிப்பது மேய்ப்புப்பணியில் நலவாழ்வு என்றும், மக்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவது, தேவையில் இருக்கும் பெண்களுக்கு நன்மை செய்து உதவும் வாய்ப்புக்களை உருவாக்குவது போன்றவைகளை புனித எலிசபெத் மருத்துவமனை செய்து வருகின்றது என்று தெரிவித்துள்ளார் அருள் பணியாளர் Robert McCulloch அவர்கள்.
1958 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் Achi Masjid என்னும் கிராமத்தில் மறைமாவட்டத்தின் கீழ் இயங்கி வரும் புனித எலிசபெத் மருத்துவமனையின் நிர்வாகத் தலைமை அதிகாரியான, கொலம்பியன் சபை அருள்பணியாளர் Robert McCulloch அவர்கள் பீதேஸ் கத்தோலிக்க செய்திகளுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நடமாடும் மருத்துவ முகாம்கள், வாழ்வின் இறுதி கட்டத்தில் இருக்கும் உடல் நலமற்றவரைப் பரமாரிக்கும் மையங்கள், மற்றும் தாய் சேய் நலவாழ்வு மையங்கள் போன்றவற்றை திறம்பட நடத்திவரும் புனித எலிசபெத் மருத்துவமனை தெற்கு பாகிஸ்தானின் மிகச்சிறந்த மருத்துவமனை என்றும், இதுவரை முதியோர், பெண்கள் மற்றும் சிறார் உட்பட 391 பேர் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு நோய்கள் கண்டறியப்பட்டு, தொடர் மருத்துவ சிகிச்சை பெற்றுவருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார் அருள்பணியாளர் McCulloch
மருத்துவ உதவி பெற ஆவலுடன் காத்திருக்கும் 40 குடும்பங்களைக் கொண்ட Achi Masjid கிராமம் இதுவரை டெங்கு, மலேரிய போன்ற பல்வேறு வகையான காய்ச்சல்கள், கண், காது, மற்றும் தோல் தொடர்பான தொற்று நோய்களுக்கு தகுந்த சிகிச்சை பெற்றுவருவதோடு, மகப்பேறு பள்ளிகள் வழியாக மருத்துவ உதவிபெண்களாக இங்குள்ள கிராமப்புற பெண்கள் பலனடைந்து வருகின்றனர் எனவும் அருள்பணியாளர் McCulloch எடுத்துரைத்துள்ளார்.
தொழில்முறை மருத்துவ உதவியாளர்களாக மாறும் அவர்களின் சமூக-பொருளாதார நிலை மேம்பட்டு, மனித விடுதலை மற்றும் தொழில்முறை பாதைக்கு வழிவகுக்கும் எனவும், தங்கள் பகுதியில் வாழ்கின்ற பெண்களுக்கு நன்மை செய்து உதவும் வாய்ப்பையும் பெறுகின்றனர் எனவும் கூறியுள்ளார் அருள்பணியாளர் McCulloch
80க்கும் மேற்பட்ட படுக்கைகள், 3 அறுவை சிகிச்சை அறைகள், கொண்டு 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவுடன் தெற்கு பாகிஸ்தானின் மிகச்சிறந்த மருத்துவமனையாக இயங்கும் இம்மருத்துவமனை, 2021 ஆம் ஆண்டு உலக சுகாதார நாளின் திருஅவை செய்தியான "இன்னும் நீதியான, நலமான உலகை அனைவருக்கும் கட்டியெழுப்ப" என்பதனுடன் இணைந்து தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அருள்பணியாளர் McCulloch தெரிவித்துள்ளார். (FIDES)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்