பேராயர் ஷேவ்சுக்: உக்ரைன் குடும்பங்களுக்காகச் செபியுங்கள்
மேரி தெரேசா: வத்திக்கான்
உக்ரைனில் 239வது நாளாக தொடர்ந்து இடம்பெற்றுவரும் போர், நாட்டின் உள்கட்டமைப்புக்களைப் பெருமளவில் சேதப்படுத்தியிருப்பதோடு, குடும்பங்களிலும் ஓர் இறுக்கமான சூழலை உருவாக்கியுள்ளது என்று, அந்நாட்டு கிரேக்க-கத்தோலிக்க வழிபாட்டுமுறை திருஅவைத் தலைவர் பேராயர் Sviatoslav Shevchuk அவர்கள் கூறியுள்ளார்.
உக்ரைனின் நிலவரம் குறித்து தினமும் காணொளிச் செய்திகளை வெளியிட்டுவரும் பேராயர் ஷேவ்சுக் அவர்கள், குடும்பங்களின் இந்நிலைமையை வீட்டு வன்முறை என்றும், நிலையான குடும்ப கட்டமைப்புக்கு இது ஆபத்தானது என்றும் கூறியுள்ளார்.
தொடர் வேதனை மற்றும், துயரங்களைக் காண்கின்ற உக்ரேனியர்கள், அவற்றுக்கு உணர்வற்றவர்களாக மாறியுள்ளனர் என இராணுவ அதிகாரி ஒருவர் தன்னிடம் தெரிவித்ததாகக் கூறியுள்ள பேராயர், உக்ரைன் குடும்பங்களுக்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இரஷ்யப் படைகள், உக்ரைனின் எல்லைப் பகுதிகளில் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன எனவும், அக்டோபர் 18, இச்செவ்வாயன்று மட்டும் பத்து ஏவுகணைகள் வீசப்பட்டன, மற்றும், ஏறக்குறைய 90 வான்வெளித் தாக்குல்கள் நடத்தப்பட்டன எனவும் பேராயர் தன் செய்தியில் கூறியுள்ளார்.
Sakharov 2022 விருது
மேலும், ஐரோப்பிய பாராளுமன்றத்தின் 2022ஆம் ஆண்டுக்கான Sakharov மனித உரிமைகள் விருது, வீரத்துடன் போராடும் உக்ரைன் மக்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துச் சுதந்திரத்திற்காக வழங்கப்படும் Sakharov விருது, மனித உரிமைகள் மற்றும், அடிப்படை சுதந்திரங்களுக்காகப் போராடும் தனிமனிதர் மற்றும், நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.
முன்னாள் சோவியத் யூனியனின் இயற்பியல் வல்லுநர் மற்றும், அரசியல் உரிமைக்காகப் போராடிய மனித உரிமை ஆர்வலரான Andrei Sakharovன் நினைவாக, இவ்விருது வழங்கப்படுகிறது. 1988ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இவ்வாண்டின் இவ்விருது, Strasbourgல் வருகிற டிசம்பர் 14ம் தேதி வழங்கப்படும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்