சிரியா நாட்டு சிறுவன் சிரியா நாட்டு சிறுவன்  

அலெப்போ பேராயர்: சிரியாவில் கடுமையான நலவாழ்வு நெருக்கடி

உலக அளவில் சிரியா தனிமைப்படுத்தப்பட்டிருப்பது, அந்நாட்டுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள், உள்கட்டமைப்பின் அழிவுகள், அரசில் நிதிப்பற்றாக்குறை, போன்றவற்றால் மக்கள் மிகவும் துன்புறுகின்றனர் – அலெப்போ பேராயர்

மேரி தெரேசா: வத்திக்கான்

சிரியா நாட்டின் சில பகுதிகளில், இரஷ்யாவின் ஆதரவுபெற்ற பாஷர் அல்-அசாத் அரசின் படைகளுக்கும், புரட்சியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து போர் இடம்பெற்றுவரும்வேளை, அந்நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுவருகிறது என, அலெப்போவின் மெல்கிதே வழிபாட்டுமுறை கத்தோலிக்க பேராயர் Georges Masri அவர்கள் கூறியுள்ளார்.

ACN எனப்படும் தேவையில் இருக்கும் திருஅவைகளுக்கு உதவும் பன்னாட்டு பிறரன்பு நிறுவனத்தின் தலைமையகத்திற்கு அண்மையில் சென்ற பேராயர் Masri அவர்கள், சிரியாவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் போர், அதனால் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி, மக்களின் நலவாழ்வு மற்றும், தலத்திருஅவையின் மேய்ப்புப்பணியில் ஏற்படுத்தியுள்ள எதிர்த்தாக்கம் போன்றவை குறித்து விளக்கியுள்ளார்.

சிரியாவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளால் உருவாகியுள்ள கடுமையான பணவீக்கம், உலக அளவில் நாடு தனிமைப்படுத்தப்பட்டிருப்பது, உள்கட்டமைப்பின் அழிவுகள், அரசில் நிதிப்பற்றாக்குறை, லெபனோனில் நிதி குறைந்து வருவது போன்றவற்றால் நாட்டு மக்கள் மிகவும் துன்புறுகின்றனர் எனவும், பேராயர் Masri அவர்கள் கூறியுள்ளார்.

சிரியாவில் 11 ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் போரால், நாட்டைவிட்டு வெளியேற முடிந்தவர்கள் தொடர்ந்து புலம்பெயர்ந்து வருகின்றனர் என்றும், நாட்டில் வாழ்கின்ற பலர், அடிப்படை தேவைகளின்றி துயருறுகின்றனர் என்றும், ஜெர்மனியிலுள்ள ACN தலைமையகத்தில் தெரிவித்துள்ளார், பேராயர் Masri.

ஏறத்தாழ இருபது இலட்சம் பேர் நாட்டிற்குள்ளே புலம்பெயர்ந்து முகாம்களிலும், மக்கள் தொகை அதிகமாகவுள்ள மற்ற பகுதிகளிலும் வாழ்ந்துவரும்வேளை, அண்மையில் சிரியாவின் 14 மாநிலங்களில் 13ல் காலரா தொற்றுநோய் பரவியுள்ளதையும் குறிப்பிட்டார், அலெப்போ பேராயர்.

இதற்கிடையே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதன் பொது மறைக்கல்வியுரைகளில் உக்ரைன் குறித்துப் பேசும்போது, சிரியா, மியான்மார் போன்ற உலகின் மற்ற நாடுகளில் இடம்பெறும் போர்கள் குறித்தும், அவற்றால் உருவாகியுள்ள மனிதாபிமான நெருக்கடிகள் குறித்தும் மறக்காமல் குறிப்பிட்டு வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 November 2022, 14:00