பங்களாதேஷ் காரித்தாஸ் அமைப்பின் ஐம்பதாவது ஆண்டு விழா
மெரினா ராஜ் வத்திக்கான்
திரு அவையில் காரித்தாஸ் பிறரன்பு அமைப்பு, நல்ல சமாரியனைப் போல தேவையில் இருக்கும் மக்களுக்கு தேடிச்சென்று உதவுகின்றது எனவும், தன்னலமின்றி, இரக்கத்துடன் விளிம்பு நிலை மக்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக செய்யும் அவர்கள் பணியை மேலும் தொடர வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார் பேரருள்திரு. Marinko Antolovic.
1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பங்களாதேஷ் காரித்தாஸ் அமைப்பின் ஐம்பதாவது ஆண்டு ஜூபிலி விழாவானது நாட்டின் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வரும் சூழலில், தேசிய அளவில் தலைநகர் டாக்காவில் கொண்டாடப்பட்ட நிறைவு விழாவில் பங்கேற்றபோது இவ்வாறு கூறியுள்ளார் பங்களாதேஷுக்கான திருப்பீடத்தூதரகத்தில் பணியாற்றும் பேரருள்திரு Marinko Antolovic.
அன்பு மற்றும் சேவையின் ஐம்பதாவது ஆண்டு பயணம் என்ற தலைப்பில் நடைபெற்ற ஜூபிலி நிறைவு நிகழ்வில் பங்கேற்ற பேரருள்திரு Antolovic அவர்கள், பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்கள், துன்பப்படும் மக்கள் மற்றும் சாதாரண எளிய மக்களின் வாழ்க்கையை காரித்தாஸ் மேம்படுத்துகிறது, என்றும், நல்ல சமாரியனைப் போல மக்களுக்கு உதவி அவர்களின் வாழ்வில் நம்பிக்கையைத் தருகிறது என்றும் கூறியுள்ளார்.
புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோரை பாதுகாத்தல், வரவேற்றல் போன்ற பணிகளைச் செய்யும் காரித்தாஸ் அமைப்பினர், தங்களது பணிகளை மேலும் தொடர்ந்து செய்யவேண்டும் என திருத்தந்தை வலியுறுத்துவதாக எடுத்துரைத்த பேரருள்திரு Antolovic அவர்கள், துணிவு, ஒற்றுமை, சேவை போன்றவற்றைக் கொண்டு செய்யப்படும் பணிகள் சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் மக்களுக்காக தொடர்ந்து திறந்த மன நிலையுடன் செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
1972 ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட சூறாவளியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட அமைப்பு, சிட்டகாங் மறைமாவட்டக் கரையோரப் பகுதிகளில் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பாக (CORD) உருவாகி, பின்னர் நிவாரணம், மற்றும் மறுவாழ்வுக்கான கிறிஸ்தவ அமைப்பு (CORR) என மறுபெயரிடப்பட்டது. 1971இல் ஏற்பட்ட உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து பங்களாதேஷ் சுதந்திரம் அடைவதற்கு முன்பு, CORR ஒரு தேசிய அமைப்பாக மாறி, 1972இல் பதிவுசெய்யப்பட்ட தன்னார்வ அமைப்பாகவும் பின்னர் காரித்தாஸ் பங்களாதேஷ் எனவும் மறுபெயரிடப்பட்டது.
தலைநகர் டாக்காவில் ஒரு தேசிய அலுவலகத்தையும் பங்களாதேஷில் உள்ள எட்டு கத்தோலிக்க மறைமாவட்டங்களில் எட்டு கிளை அலுவலகங்களையும் கொண்டு ஏறக்குறைய 4கோடியே 50இலட்சம் மக்களுக்கு உதவி வருகின்றது பங்களாதேஷ் காரித்தாஸ் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்