ஆலயத்தில் உருக்கமாக செபிக்கும் இந்திய கிறிஸ்தவர்கள் ஆலயத்தில் உருக்கமாக செபிக்கும் இந்திய கிறிஸ்தவர்கள் 

கிறிஸ்தவர் துன்புறுத்தப்படுவது இந்தியாவில் அதிகரிப்பு

உத்தரபிரதேசத்தில் 149, சத்தீஸ்கரில் 115, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் 30 இடங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் பதிவாகியுள்ளன.

மெரினா ராஜ் - வத்திக்கான்

இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்கள் மாதம் தோறும் அதிகரித்து வருவதாகவும், கவலைக்குரிய இச்செயல்களைத் தடுக்க, மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாகச் செயல்பட வேண்டும் எனவும் UCF அமைப்பின் தலைவர் மைக்கேல் வில்லியம்ஸ் கூறியுள்ளார்.

இந்தியாவின் தலைநகரான புது தில்லியைத் தளமாகக் கொண்டு செயல்படும் UCF என்னும் ஒன்றிணைந்த கிறிஸ்தவ மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் மைக்கேல் வில்லியம்ஸ்  நவம்பர் 26ஆம் தேதி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படும் நிகழ்வுகள் ஆண்டுக்கு ஆண்டு மட்டுமல்ல, மாதத்திற்கு மாதம் அதிகரிப்பதாகவும் வடக்கில் உத்தரபிரதேசம், தெற்கில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிகப் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் வில்லியம்ஸ்.

UCF தனது ஹெல்ப்லைன் என்னும் உதவிப்பகுதி வழியாக சேகரித்த தரவுகளின் அடிப்படையில், 2021ஆம் ஆண்டு 505 நிகழ்வுகள் நடந்த நிலையில், 2022ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி வரை மொத்தம் 511 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை நிகழ்வுகள் அதிகரித்து வருவது மகிழ்ச்சியற்ற சூழ்நிலையைத் தருகின்றது எனவும் கூறியுள்ளார் வில்லியம்ஸ்.

இந்திய நாட்டில் மத மாற்ற தடைச் சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 79 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை நீதிமன்றத்தில் ஒரு வழக்குக்கூட நிரூபிக்கப்படவில்லை என்றும், நீதிமன்றங்களால் பிணையல் மறுக்கப்பட்டதால் பல பாமர மக்கள் சிறையில் வாடுகின்றனர் என்றும் கூறியுள்ளார் வில்லியம்ஸ்.

UCF நடத்தியக் கணக்கெடுப்பின்படி, வடக்கில் உத்தரப்பிரதேசம், மத்திய இந்தியாவில் சத்தீஸ்கர், தெற்கில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகியவை கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளும் துன்புறுத்தல்களும் நிகழும் மிகவும் மோசமான இடங்கள் என்றும் உத்தரபிரதேசத்தில் 149, சத்தீஸ்கரில் 115, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் 30 என 294 இடங்களில் துன்புறுத்தல்கள் பதிவாகியுள்ளன என்றும், தெரிவித்துள்ளார் வில்லியம்ஸ்.

நாடு முழுவதிலும் இருந்து பதிவாகும் அனைத்து நிகழ்வுகளிலும் தீவிரவாதக் கூறுகளை உள்ளடக்கிய கண்காணிப்பு கும்பல் ஈடுபட்டுள்ளது என்றும் மத மாற்ற தடைச்சட்ட நடவடிக்கைகள் பற்றிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஆலயங்கள் மற்றும் செபக்கூட்டங்களுக்குள் நுழைவது அல்லது தனிநபர்கள் அல்லது கிறிஸ்தவர்களின் சிறு குழுக்களைத் தாக்குவதே அவர்களின் செயல்பாடு என்றும் அக்கணக்கெடுப்பு கூறுகின்றது.(UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 November 2022, 13:30