காலநிலை மாற்றத்தின் விளைவு காலநிலை மாற்றத்தின் விளைவு  

காலநிலை மாற்ற இழப்பீடு வழங்க ஆப்ரிக்க தலத்திருஅவை கோரிக்கை

காலநிலை நெருக்கடி என்பது, அடிப்படையில் நீதி மற்றும் அமைதிக்கான பிரச்சனையாகும் : ஆப்ரிக்க கத்தோலிக்கத் தலத் திருஅவையினர்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

எகிப்தின் Sharm El Sheikh-இல் நவம்பர் 6ம் தேதியிலிருந்து நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் குறித்த COP-27 உச்சி மாநாட்டில், காலநிலை மாற்றம் காரணமாக வளரும் நாடுகளால் தங்களுக்கு ஏற்கனவே ஏற்பட்ட இழப்பு மற்றும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி ஆப்பிரிக்கத் தலத்திருஅவைத் தலைவர்களும் கத்தோலிக்க அமைப்பினரும் குரலெழுப்பி உள்ளனர். 

"காலநிலை மாற்றம் என்பது ஆப்ரிக்கா முழுவதிலும் உள்ள இலட்சக்கணக்கான மக்களைப் பாத்தித்துள்ளது என்பது உண்மை. ஆகவே, COP -27 ஒப்பந்தத்தில் இழப்பு மற்றும் பாதிப்பிற்கான நிதி வழங்குதல் சேர்க்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஆப்ரிக்கா மற்றும் மடகாஸ்கர் ஆயர் பேரவையின் துணைத் தலைவர் கர்தினால் Fridolin Ambongo Besungu, OFMCap.

காலநிலை நெருக்கடி என்பது, அடிப்படையில் நீதி மற்றும் அமைதிக்கான பிரச்சனையாகும் என்றும், மக்கள் பாதிக்கப்படும் வேளையில் இப்பூமிக்கோளத்தை மாசுபடுத்துபவர்கள் காலநிலை அழிவிலிருந்து தொடர்ந்து இலாபம்  ஈட்டும்போது அமைதி ஏற்பட வாய்ப்பிருக்காது என்றும் சுட்டிக்காட்டியுள்ள ஸ்காட்லாந்து கத்தோலிக்க அனைத்துலகத் தொண்டு அமைப்பின் சட்ட ஆலோசகர் Ben Wilson அவர்கள், காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளை மேம்படுத்தாமல் நீதியைக் கட்டியெழுப்ப முடியாது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள இழப்பு மற்றும் பாதிப்பின் விளைவுகளால் குறிப்பாக ஆப்ரிக்காவில் உள்ள இளைஞர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இருப்பினும் அவர்களின் அபகரிக்கப்பட்ட எதிர்காலத்திற்கு அவர்கள் பொறுப்பல்ல" என்று கூறியுள்ளார் ஆப்ரிக்காவின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்த கத்தோலிக்க இளையோர் தொடர்பு திட்ட மேலாளர் David Munene

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 November 2022, 13:44