கோவாவிற்கு திருப்பயணம் மேற்கொள்ளும் உள்ளூர் மக்கள் கோவாவிற்கு திருப்பயணம் மேற்கொள்ளும் உள்ளூர் மக்கள்  

புனித பிரான்சிஸ் சவேரியார் நினைவுச்சின்னங்கள் மக்கள் பார்வைக்கு

புனித சவேரியாரின் நம்பிக்கைப் பயணத்தை மக்களுக்கு வெளிப்படுத்தவும், இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதில் அவருக்கிருந்த ஆர்வத்தை மக்கள் பின்பற்றவும் இக்கண்காட்சி வாய்ப்பளிக்கின்றது : அருள்பணி பாரி

மெரினா ராஜ் – வத்திக்கான்

உலகம் முழுவதுமுள்ள இலட்சக் கணக்கான மக்கள் புனித பிரான்சிஸ் சவேரியாரின் நினைவுச் சின்னங்களைக் காண்பதற்கான கண்காட்சி 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21-ஆம் தேதி தொடங்க உள்ளதாக கோவா உயர் மறைமாவட்டப் பேராயர் கர்தினால் பிலிப்பு நேரி ஃபெராவோ அவர்கள் தெரிவித்துள்ளார்.

கோவா மற்றும் டாமன் பேராயரான கர்தினால் பிலிப்பு நேரி ஃபெராவோ அவர்கள், நவம்பர் 5 அன்று வெளியிட்ட அறிக்கையில் 17-ஆம் நூற்றாண்டின் இயேசு சபைத் துறவியான  புனித பிரான்சிஸ் சவேரியாரின் நினைவுச்சின்னங்கள் பொது மக்களின் பார்வைக்காக ஏழு வாரங்கள் கண்காட்சியாக வைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.  

புனித பிரான்சிஸ் சவேரியாரின் நம்பிக்கைப் பயணத்தை மக்களுக்கு வெளிப்படுத்தவும், இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதில் அவருக்கிருந்த ஆர்வத்தை மக்கள் பின்பற்றவும் இக்கண்காட்சி வாய்ப்பளிக்கின்றது என்று கூறியுள்ள கோவா மறைமாவட்ட சமூகத் தொடர்பு இயக்குனர் அருள்பணி பாரி கார்டோசா (Barry Cardoza) கிறிஸ்துவுடனான தனிப்பட்ட சந்திப்பு மட்டுமே நம்மை அவருடைய உண்மையான சீடர்களாக மாற்றுகின்றது என்பதை புனிதரின் நினைவுச் சின்னங்களும் வாழ்க்கையும்,  வெளிப்படுத்துகின்றன என்றும் கூறியுள்ளார்.  

பேராயத்தின் அனைத்து நிலைகளிலும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் புதுப்பிப்பதற்கும், திருப்பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுவதற்குப் போதுமான நேரத்தை வழங்குவதற்கும் உதவியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கர்தினால் இக்கண்காட்சியை அறிவித்துள்ளார் எனவும், இக்கண்காட்சி நிகழ்வு மட்டுமல்ல, அந்த நிகழ்வை நோக்கிச் செல்லும் பயணமும் முக்கியமானது என்றும் கூறியுள்ளார் அருள்பணி பாரி.

ஆன்மிகப் பயணத்தின் உச்சமாக, புதுப்பித்தல் மற்றும் நம்பிக்கையின் பயணமாக அமைய இருக்கும் இக்கண்காட்சியில் தனிநபர், குடும்பம், தலத்திருஅவை, கோவா மற்றும் டாமன்  என முழு மறைமாவட்டமும் பங்கேற்க வேண்டும் என்றும்,  இந்த இரண்டு வருட ஆன்மீகத் தயாரிப்புகள், ஏழைகள், விளிம்புநிலை மக்கள், அனைத்து மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்கள், படைப்பு போன்றவற்றுடன் இணக்கமாக உடன்நடத்தலில் கவனம் செலுத்தும் என்றும் அருள்பணி பாரி கூறியுள்ளார்.

ஏப்ரல் 7, 1506-ஆம் ஆண்டில் ஸ்பெயினின் ஜேவியர் நகரில் பிறந்து டிசம்பர் 3, 1552 ஆம் ஆண்டு சீனாவின் ஜியாங்மென், ஷாங்சுவான் தீவில் மறைப்பணியாளராக இறந்த புனித பிரான்சிஸ் சவேரியாரின் நினைவுச் சின்னங்களைப் பக்தியோடு பார்வையிடும் மக்கள் பலர் நோயிலிருந்து குணம்பெறுகின்றனர்.

2024-ஆம் ஆண்டு, 21 நவம்பர் வியாழனன்று தொடங்கி, 2025, ஜனவரி 5, ஞாயிறன்று நிறைவடையும் இக்கண்காட்சியானது டிசம்பர் 3-ஆம் தேதி கொண்டாடப்படும் புனிதரின் திருவிழாவினைச் சிறப்பிப்பதற்காக கடந்த 40 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றது.

கண்காட்சி தொடர்பான விளக்கவுரை மற்றும் செய்திகளுக்காக, பொது நிலையினர், துறவறத்தார், மற்றும் அருள்பணியாளர்களைக் கொண்ட ஒரு சிறப்புக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கர்தினால் பிலிப்பு நேரி ஃபெராவோ கூறியுள்ளார்.(UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 November 2022, 13:26