ஒரு சிறைச்சாலையின் தோற்றம் ஒரு சிறைச்சாலையின் தோற்றம்  

சிறைக்கைதிகள் மறுவாழ்வு பெற மாநில அரசுகள் உதவவேண்டும்

கைதிகளுக்குச் சட்ட உதவிகளை வழங்குவதற்கும் விரைவான விசாரணைகளை உறுதி செய்வதற்கும் மாநில அரசுகள் சிறப்பு முயற்சிகளை எடுக்க வேண்டிய நேரம் இது : அருள்பணியாளர் கொடியன்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்தியாவிலுள்ள கத்தோலிக்கத் திருஅவையால் நடத்தப்படும் சிறைத்துறை பணியகம், சீர்திருத்தங்களை விரைவுபடுத்தவும், நாட்டிலுள்ள கைதிகள் மற்றும் சிறைகளில் அவர்களின் மறுவாழ்வுக்கான பணிகளை மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது

மேலும், இந்தியாவிலுள்ள சிறைத்துறை பணியகம் (PMI) நெரிசலான சிறைகள், நீதிமன்ற விசாரணைகளில் தாமதம், மற்றும் சுகாதாரமின்மை போன்ற விடயங்கள் கைதிகளின் வாழ்க்கையை மாற்ற உதவாது என்றும் கூறியுள்ளது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அருள்பணியாளர் பிரான்சிஸ் கொடியன் அவர்கள், கைதிகளுக்குச் சிறந்த வசதிகளை வழங்கும் நோக்கில் மாநில அரசுகள் கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுத்துள்ளன, ஆனால், இத்திட்டங்கள் அனைத்தும் சிறைகளில் துயருற்றுக்கொண்டிருக்கும் கைதிகளைப் பெரும்பாலும் சென்றடைவதில்லை என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

நவம்பர் 23, இப்புதனன்று UCA செய்தியாளரிடம் பேசிய அருள்பணியாளர் கொடியன் அவர்கள், கைதிகளின் மோசமான நிலைமைகளை சுட்டிக்காட்டியதுடன்,  70 விழுக்காட்டிருக்கும் அதிகமான கைதிகள் விசாரணைக்காகக் காத்திருக்கின்றனர் என்றும், மேலும் நீதிமன்ற நடைமுறைகளில் ஏற்படும் தாமதம் அவர்களை முறைகேடு மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு ஆளாக்குகிறது என்றும் கூறியுள்ளார்.

பெரும்பாலான கைதிகள் ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவர்கள், எனவே திறமையான வழக்கறிஞர்களின் உதவியை அவர்களால் பெற முடிவதில்லை என்று கூறிய அருள்பணியாளர் கொடியன் அவர்கள், கைதிகளுக்குச் சட்ட உதவிகளை வழங்குவதற்கும் விரைவான விசாரணைகளை உறுதி செய்வதற்கும் மாநில அரசுகள் சிறப்பு முயற்சிகளை எடுக்க வேண்டிய நேரம் இது என்றுக் எடுத்துக்காட்டியுள்ளார்.

1981-ஆம் ஆண்டு அருள்பணியாளர் வர்கீஸ் கரிப்பேரியுடன் (Varghese Karippery) இணைந்து இந்திய கத்தோலிக்க சிறைப்பணியகத்தை (PMI ) அருள்பணியாளர் கொடியன் அவர்கள் நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. (UCA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 November 2022, 14:23