மதமாற்றத்தடைச் சட்டத்திற்கு எதிரான பேரணியில் அருள்சகோதரிகள் (கோப்புப்படம் 2021) மதமாற்றத்தடைச் சட்டத்திற்கு எதிரான பேரணியில் அருள்சகோதரிகள் (கோப்புப்படம் 2021) 

மத மாற்றத்திற்கு எதிரான சட்டத்திற்கு இந்திய அரசு ஆதரவு!

கட்டாய மதமாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை நிரூபிக்க முக்கியமான ஆதாரம் எதுவும் இதுவரைக் காட்டப்படவில்லை : இந்தியக் கிறிஸ்தவத் தலைவர்கள்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்திய உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்ட வழக்கு ஒன்றில் மத மதமாற்றங்களைக் கட்டுப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு இந்திய அரசு ஆதரவாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியுடன் (BJP) தொடர்புடைய Ashwini Upadhyay என்ற வழக்கறிஞர் இந்த நீதிப்பேராணை மனுவை தாக்கல் செய்துள்ள நிலையில், உரிமைகளைப் பாதுகாக்க ஒரு சட்டம் இயற்றுவது அவசியம் என்று மத்திய உள்துறை அமைச்சகமும் கூறியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம், மதமாற்றத்தைத் தடுக்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக் கோரிய பொதுநல வழக்குகளுக்கு நவம்பர் 28-இல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த உறுதிச் சான்றில், இவ்வழக்கு பிரச்சனையின் தீவிரத்தை அறிந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது  

இந்திய அரசியலமைப்பின் 25-வது பிரிவானது, எந்த ஒரு மதத்தைப் பின்பற்றுவதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும், பரப்புரை செய்வதற்கும் அனைத்து குடிமக்களுக்கும் உரிமையை வழங்கியுள்ளது, ஆனால் மற்றவர்களை மதம் மாற்றுவதற்கான உரிமைக்கு அது உத்தரவாதம் அளிக்கவில்லை என்றும் கூறியுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். 

இது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் A. J. Philip, உச்ச நீதிமன்ற அமர்வுக்கு தலைமை தாங்கிய நீதிபதி M. R. Shah-வுக்கு எழுதியுள்ள திறந்த கடிதத்தில், மனுதாரர் ஆளும் பாஜகவைச் சேர்ந்தவர் என்றும், கட்டாய மதமாற்றம் அவர் எப்போதும் பயன்படுத்தும் செல்லப் பெயராக இருந்து வருகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கட்டாய மதமாற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்திருந்தால், இந்தியாவில் கிறிஸ்தவ நம்பிக்கையைப் பின்பற்றுபவர்கள் அதிகமாக இருந்திருப்பார்கள். ஆனால் இந்தியாவில் வாழும் 140 கோடி மக்களில் 2.3 விழுக்காட்டினரே கிறிஸ்தவர்களாக உள்ளனர் என்றும் வாதிட்டுள்ளார் மூத்த பத்திரிக்கையாளர் A. J. Philip.

இந்தியாவில் கிறிஸ்தவர்களையும் அவர்களின் நிறுவனங்களையும் பொது மக்களுக்குப் பணியாற்றவிடாமல் துன்புறுத்துவதும், தடுப்பதும்தான் இந்த மனுவின் முக்கிய நோக்கம் என்று பல கிறிஸ்தவ சமயத் தலைவர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்த மனுவின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உச்ச நீதிமன்றம். (UCA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 November 2022, 15:27