திருத்தந்தை 6ம் ஏட்ரியன் திருத்தந்தை 6ம் ஏட்ரியன் 

திருத்தந்தையர் வரலாறு - திருத்தந்தை 6ம் ஏட்ரியன்

திருத்தந்தை ஆறாம் ஏட்ரியனுக்கென எழுப்பப்பட்ட நினைவுச் சின்னத்தில், “மிக உன்னத மனிதர்கள்கூட அவர்களின் உயர் குணத்திற்கு பொருந்தாத ஒரு காலக்கட்டத்தில் பிறந்து விடுவது உண்டு” என குறிக்கப்பட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

     1513ம் ஆண்டு முதல் திருத்தந்தை பதவி வகித்து, 1521ஆம் ஆண்டு இறைபதம் சேர்ந்த பிளாரன்ஸ் நகரின் தெ மெதிச்சி என்ற புகழ்வாய்ந்த குடும்பத்தின் அங்கத்தினரான பாப்பிறை 10ம் லியோ குறித்து கடந்த வாரம் கண்டோம். எட்டு வயதில் துறவு இல்ல அதிபராக, ஒன்பது வயதில் புகழ்வாய்ந்த துறவு இல்லம் ஒன்றின் பொறுப்பாளராக, 11 வயதில் புகழ்வாய்ந்த Monte Cassino துறவு இல்ல பொறுப்பாளராகப் பதவிவகித்தார் அத்திருத்தந்தை. அதுமட்டுமல்ல, அவரின் 13வது வயதில் கர்தினாலாக உயர்த்தப்பட்டதையும், பிரெஞ்ச் துருப்புகளால் சிறைப்பிடிக்கப்பட்டு தப்பியதையும், தன் 38ம் வயதில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கலைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டியதையும், 1521ஆம் ஆண்டு மலேரியா நோயால் திடீரென மரணமடைந்ததையும் குறித்து கண்டோம். திருத்தந்தை 10ம் லியோ 1521ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதி உயிரிழக்க, அதைத் தொடர்ந்து கூடிய கர்தினால்கள் அவை கர்தினால் ஏட்ரியனை திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தது. இவரும் தன் இயற்பெயரை மாற்றாமல் அதனையே வைத்துக்கொண்டு திருத்தந்தை 6ம் ஏட்ரியன் ஆனார்.

  இவர் 1459ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி நெதர்லாந்தின் Utrechtல் பிறந்தார். மிக ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஏட்ரியன், தன் இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். விதவையான தாயின் அரவணைப்பில் வளர்ந்த இவர், மிகவும் ஏழ்மையான சூழலில் Louvain பல்கலைக்கழகம் வரைச் சென்று உயர் கல்வி கற்றார். மெய்யியல், இறையியல், சட்டம் ஆகியவற்றில் மேற்படிப்பை முடித்து 1491ஆம் ஆண்டில், அதாவது தன் 32ஆம் வயதில் மெய்யியல் முனைவர் என்ற பட்டத்தைப் பெற்றார். தான் பயின்ற பெல்ஜியத்தின் Louvain பல்கலைகழகத்திலேயே பேராசிரியராகப் பணியாற்றியபோது இவரின் புகழ் எங்கும் பரவத் துவங்கியது. இவர் பாடம் நடத்தும்போதே தாங்கள் எடுத்த குறிப்புகளை வைத்தே இவரின் மாணவர்கள் இவருக்குத் தெரியாமல் இவர் பெயரில் இரு புத்தகங்களை வெளியிட்டனர். அப்புத்தகங்கள் மிகப் பிரபலமடைந்ததால் பேராசிரியர் ஏட்ரியனின் பெயரும் பிரபலமானது. Louvain பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை இவர் வகித்தபோது கலை, இலக்கியம், அறிவியல் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு மிகவும் பாடுபட்டார். அதுமட்டுமல்ல, தன் வாழ்க்கை மூலம் இவர் மற்றவர்களுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்கினார். ஏட்ரியனின் புகழ் குறித்துக் கேள்விப்பட்ட பேரரசர் Maximilian, தன் பேரன் ஐந்தாம் சார்லஸ்க்கு கல்வி கற்பிக்க இவரை நியமித்தார். ஆறு வயதிலிருந்தே ஏட்ரியனிடம் கல்விகற்ற மன்னர் ஐந்தாம் சார்லஸ், பிற்காலத்தில் தன் தனிமனித வாழ்க்கை வெற்றிக்கெல்லாம் தன் ஆசிரியர் ஏட்ரியனே காரணம் என புகழ்ந்துள்ளார். கல்வித் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய ஏட்ரியன், வருங்கால மன்னரின் ஆசிரியராகப் பணியேற்ற பின்னர், இவரின் வளர்ச்சி படிப்படியாக முன்னேறியது. திருஅவையில் கர்தினாலாகவும் உயர்ந்தார். 1521ஆம் ஆண்டு திருத்தந்தை 10ம் லியோ இறந்தபின், கர்தினால்கள் ஏட்ரியனை அடுத்த திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தபோது அது மக்களுக்கு மட்டுமல்ல, அவருக்கே வியப்பு நிறைந்த ஒன்றாக இருந்தது.

    இவர் உரோம் நகருக்குப் புதியவர். அதுமட்டுமல்ல, திருஅவையில் இலஞ்சம், அத்துமீறல், சீர்திருத்தம் குறித்த தேக்கநிலை, இளம் மன்னர்களின் மோதல்கள், சதிச்செயல்கள், ஜெர்மனியில் புரட்சி, கிறிஸ்தவ நாடுகளை ஆக்கிரமிக்க துருக்கியின் முயற்சி போன்ற சவால்கள் புதிய திருத்தந்தையின்முன் நின்றன. இத்தாலிக்குள் இதுவரை காலடி எடுத்துவைத்திராத இந்த 63 வயது திருத்தந்தை, எப்படி பிரச்சனைகளைக் கையாளப்போகிறார் என்பது அனைவருக்கும் பெரும் கேள்விக்குறியாக இருந்தது. திருத்தந்தையாக தன் ஆசிரியர் ஏட்ரியன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதைக் கேளிவியுற்ற இளவரசர் சார்லஸ் மிகுந்த மகிழ்ச்சியுற்றார். ஆனால், அவரின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. ஏனெனில் திருத்தந்தை 6ம் ஏட்ரியன் எவருக்கும் வளைந்து கொடுக்காத, எவருக்கும் சலுகைகாட்டாத ஒரு நீதிமானாக அவர் கண்டார். அப்படிப்பட்ட ஒரு மனிதன் வழியாக தனக்கு அரசியல் இலாபம் இல்லை எனக் கண்டார். 1522ஆம் ஆண்டு சனவரி 9ஆம் தேதி திருத்தந்தை பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஆறாம் ஏட்ரியன் அவர்கள் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் தேதிதான் உரோம் நகர் வந்தடைந்தார். இரண்டு நாட்களுக்குப்பின் அவருக்கு மும்முடி மகுடம் சூட்டப்பட்டது. இவர் முன்னிருந்த பணிகள் மலைபோல் நின்றன. முந்தைய திருத்தந்தை 10ஆம் லியோ கலையின் பெயரால் பணத்தை விரயம் செய்ததால் திருப்பீட கருவூலம் வேறு காலியாக இருந்தது. இதற்கிடையில் துருக்கியர்களின் கை ஓங்கி, கிறிஸ்தவ இடங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டன. இவையெல்லாம் திருத்தந்தையை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கின. திருப்பீடத்தில் இவர் கொணர்ந்த சீர்திருத்தங்களை அமல்படுத்துவது சிரமமாகியது. ஆகஸ்ட் மாத இறுதியில் உரோம் நகரில் பொறுப்பேற்ற திருத்தந்தை 6ம் ஏட்ரியன் அவர்கள், அடுத்த ஒரே ஆண்டில், அதாவது 1523ஆம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி காலமானார். இவர் அந்த ஓர் ஆண்டும் திருத்தந்தை பொறுப்பில் சிலுவையில் அறையப்பட்டதுபோல துன்பங்களை அனுபவித்தார் என சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அதற்கேற்றதுபோல், இவர் இறந்ததும், திருச்சிலுவையின் மாட்சியை கொண்டாடும் செப்டம்பர் 14ம் தேதிதான். உரோமிலுள்ள ஜெர்மானியர்களின் தேசியக் கோவிலான Santa Maria dell' Animaவில் இத்திருத்தந்தைக்கென நினைவுச்சின்னம் ஒன்றை எழுப்பிய இவரின் நண்பர் Wilhelm Enckenvoert அவர்கள் அதில் என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா? “மிக உன்னத மனிதர்கள்கூட அவர்களின் உயர் குணத்திற்குப் பொருந்தாத ஒரு காலக்கட்டத்தில் பிறந்து விடுவது உண்டு” என்று. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 November 2022, 14:04