பொதுக் காலம் 33ம் ஞாயிறு : விழிப்புணர்வே விண்ணக வாழ்வைத் தரும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. மலா 4: 1-2a II. 2 தெச 3: 7-12 III. லூக் 21: 5-19)
இன்று பொதுக் காலத்தின் 33-ஆம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். பொதுக்காலத்தின் இறுதி வாரத்திற்கு நாம் வந்திருக்கின்றோம். உலக முடிவில் என்ன நிகழும், நாம் எந்தளவுக்கு உறுதியுடன் இருக்க வேண்டும் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. ‘இறுதி’ என்ற வார்த்தை முடிவு என்றும் அர்த்தம் தருகிறது. பிறப்பில் தொடங்கும் நமது வாழ்க்கை இறப்பில் முடிவடைகிறது. நமது வாழ்வின் இறுதிக்கட்டத்தில் நம்மை அறியாமலேயே நாம் கடந்து வந்த பாதை நம் கண்முன் வந்துபோகும். பல நேரங்களில் நமது இறப்பிற்குப் பின்பு நமக்கு என்ன கிடைக்கும் என்பதை நாம் செய்த செயல்களின் அடிப்படையில் நாமே தீர்மானித்திக்கொள்ள முடியும். இவ்வுலகில் வாழ்ந்தபோது நாம் எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்குத் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது. இப்போது முதல் வாசகத்தை வாசித்து நமது சிந்தனைகளை விரிவுபடுத்துவோம்.
இதோ! சூளையைப்போல் எரியும் அந்த நாள் வருகின்றது. அப்போது ஆணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும் அதனுள் போடப்பட்ட சருகாவர்; வரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோ, கிளையையோ விட்டுவைக்காது; முற்றிலும் சுட்டெரித்துவிடும்,” என்கிறார் படைகளின் ஆண்டவர். “ஆனால் என் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கைகளில் நலம் தரும் மருந்து இருக்கும். சிறிய இறைவாக்கினரான மலாக்கி நூலின் இறுதியில் 'ஆண்டவரின் நாள்' என்ற தலைப்பில் இந்த இறைவார்த்தைகள் கூறப்பட்டுள்ளன. இதில் இருவகையான மனிதர்கள் எடுத்துக்காட்டப்படுகிறார்கள். முதல் வகையினர் ஆணவக்காரர், கொடுமை செய்வோர். இவர்கள் அனைவரும் எரியும் சூளையில் சருகாக்கப்படுவர் அல்லது சாம்பலாக்கப்படுவர். இரண்டாம் வகையினர் ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர். இவர்கள் அனைவரும் நீதியின் கதிரவனின் ஒளியைப் பெற்று, நிலைத்த நீடித்த வாழ்விற்குள் செல்வர். இதுவே அவர்களுக்கு நலம்தரும் மருந்தாக அமைகிறது.
இங்கே ‘மருந்து’ என்ற வார்த்தை எதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து சற்று ஆழமாகச் சிந்திப்போம். ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோர் அனைவரும் தீமையையும் தீமை செய்வோரையும் வெறுத்து நீதியின் பக்கம் நிற்பதால் அவர்கள் எண்ணற்ற துன்ப துயரங்களையும் வேதனை சோதனைகளையும் அனுபவிக்க வேண்டியிருக்கும். இவ்வுலகில் வாழும் காலம் முழுதும் அவர்கள் இத்தகைய இன்னல்களை அனுபவித்து உள்மனம் காயமுற்றவர்களாக ஆண்டவரை இறுதிநாளில் சந்திக்கும்போது, அவர்களது நேரிய வாழ்விற்கான பரிசாக நிலையான வாழ்வைப் பெறுவர். இதனைத்தான் திருவெளிப்பாடு நூலும் எடுத்துரைக்கிறது. பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது, “இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார்; அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார். அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது. துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது; முன்பு இருந்தவையெல்லாம் மறைந்து விட்டன” என்றது (திவெ 21:3:4).
இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசுவும் இருவகையான மனிதரை எடுத்துக்காட்டுகின்றார். அதாவது, இயேசுவின் பெயரை வைத்துக்கொண்டு நான்தான் அவர் என்று கூறி மக்களை ஏமாற்றுபவர்களும், அவர் பெயரில் நம்பிக்கை கொண்டுள்ளவர்களைத் துன்புறுத்துபவர்களும், துன்ப நேரங்களில் காட்டிக்கொடுக்கும் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும், உறவினர்களும், நண்பர்களும் முதல்வகையினர். இவர்கள் தரும் துயரங்களையெல்லாம் தாங்கிக்கொண்டு இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாய் இறுதிவரை உறுதியோடு நிலைத்து நிற்பவர்கள் இரண்டாம் வகையினர்.
அப்படி இயேசுவின் பெயரில் நம்பிக்கை கொண்டு உறுதியோடு நிலைத்து நிற்பவர்கள், துயரங்களின் மத்தியில் தாங்கள் பயணித்தபோதிலும் இறைவனின் உடனிருப்பு என்றும் அவர்களோடு இருக்கும் என்பதை இயேசு அவர்களுக்குத் தெளிவுபடுத்துகின்றார். உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்: சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின்பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.
இராணுவ வீரர் ஒருவர் தனக்கிருந்த சந்தேகம் ஒன்றைத் தீர்க்க, குரு ஒருவரைச் சந்தித்து, "உண்மையில் சொர்க்கம், நரகம் என்று உள்ளதா?" என்று கேட்டார். அதற்கு அந்தக் குரு "நீ யார்?" என்று வீரரிடம் கேட்டார். அதற்கு "நான் ஒரு இராணுவ வீரர்" என்று கூறினார். என்னது, நீ ஒரு ராணுவ வீரரா! என்று ஆச்சரியத்துடன் கேட்ட அந்தக் குரு "எந்த ஆட்சியாளர் உன்னை ஒரு இராணுவ வீரராகத் தேர்ந்தெடுத்தது? உன்னைப் பார்த்தால் ஒரு பிச்சைக்காரரைப் போன்று தெரிகிறதே என்றார். அதனைக் கேட்டதும் கோபம் தாங்காமல் தனது வாளை எடுத்தார். அதைப் பார்த்த அந்தக் குரு "ஓ! உன்னிடம் வாள் கூட இருக்கிறதா? பார்ப்பதற்கு அந்த வாள் மிகவும் கூர்மையானதாக இல்லையே. இதை வைத்துக்கொண்டு உன்னால் காய்கறிகளைக் கூட வெட்ட முடியாதே. நீ எப்படி என் தலையைத் துண்டிக்கப் போகிறாய் என்று கேலியாகக் கேட்டார். இதைக் கேட்ட அவ்வீரருக்கு இன்னும் அதிகமாக கோபம் தலைக்கேற, தனது வாளை எடுத்து அக்குருவின்மீது வீச முற்பட்டார். அப்போது குரு அவரிடம், "இங்குதான் நரகத்தின் கதவுகள் திறக்கின்றன" என்றார். குருவின் வார்த்தைகளைக் கேட்டு வீரர் சற்று சாந்தம் கொண்டு, அவரின் ஒழுக்கத்தை அறிந்து மீண்டும் தனது வாளை உறையில் வைத்தார். இப்போது குரு "இங்குதான் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கின்றன" என்று கூறினார். பின்பு அந்த வீரர், "கோபம் உள்ள இடத்தில் நரகமும், நற்குணம் நிறைந்த இடத்தில் சொர்க்கமும் உள்ளன" என்பதைப் புரிந்து குருவின் முன் தலை குனிந்து நின்றார்.
கோபம், மமதை, ஆணவம், செருக்கு, சுயநலம், மிதமிஞ்சிய செல்வப்பற்று ஆகியவை உலகில் போர்களைத் தோற்றுவித்து பிரிவினையையும், பிளவுகளையும் உண்டாக்குகின்றன. இவைகளே நரகத்திற்கான வழிகளாக அமைகின்றன. இன்றைய உலகில் நாம் காணும் போர், மதவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம், முதலாளித்துவம், வர்த்தகச் சுரண்டல், நுகர்வுவெறி, மனித கடத்தல், இயற்கை அழிப்பு ஆகிய யாவும் இறைத்தந்தை படைத்த ஒன்றிணைந்த மனிதக் குடும்பத்தை பலநூறு பிரிவுகளாக உடைத்திருக்கின்றன. இதன் காரணமாகவே, நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலகில் நிகழ்ந்துவரும் போர்களை அடிக்கடி கண்டித்து வருகின்றார். அதிலும் குறிப்பாக, உக்ரைனில் இடம்பெற்றுவரும் மதியற்ற போர் நிறுத்தப்படுவதற்கு உரையாடலில் ஈடுபடுமாறு அழைப்புவிடுத்துள்ளதுடன், அந்நாட்டில் சிறுபிள்ளைத்தனமாக, முதிர்ச்சியற்ற நிலையில் ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதற்கு எதிராகவும் தன் கண்டனக்குரலை எழுப்பியுள்ளார், மேலும், உக்ரைனில் மட்டுமின்றி, சிரியா, ஏமன் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளிலும் இடம்பெறும் போர்கள் நிறுத்தப்படவும் உரையாடலில் ஈடுபடுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
‘அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்’ (2 கொரி.8:9) என்ற பவுலடியாரின் வார்த்தைகளை மையக்கருத்தாகக் கொண்டு, நவம்பர் 13, இஞ்ஞாயிறு வறியோர் தினமாகச் சிறப்பிக்கப்படுகின்றது. திருஅவையின் தொடக்க காலத்திலிருந்தே, ஏழைகளின் தேவைகளில் கவனம் செலுத்துவது கிறிஸ்தவ சமூகத்தின் சிறப்புப் பண்பாக இருந்ததை, கொரிந்தியருக்கு எழுதிய கடிதத்தில் புனித பவுலடியார் சுட்டிக்காட்டியுள்ளார். அக்கடிதத்தில், இயேசு காட்டிய அன்பின் அடையாளமாக எருசலேமில் உணவுப் பற்றாக்குறையால் மிகவும் அவதியுற்ற எருசலேம் சமூகத்திற்காக ஒரு சிறப்பு நன்கொடையைத் திரட்டுமாறு உள்ளூர் கிறிஸ்தவச் சமூகத்தை திருத்தூதர் பவுல் கேட்டுக்கொள்வதையும் நாம் காணமுடிகிறது.
இன்றைய உலகில் போர்கள்தாம் எண்ணற்ற மக்களைப் புலம்பெயரச் செய்து அவர்களை இல்லமற்ற வறியோராக்கி வருகின்றன என்பது திண்ணம். இன்று உலகில் 120 கோடி பேர் இல்லமற்றவர்களாக இருக்கின்றனர். வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்து செல்ல நிர்ப்பந்திக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 8 கோடியே 93 இலட்சம் பேர். இதில் 2 கோடியே 71 இலட்சம் பேர் புலம்பெயர்ந்தோராக உள்ளனர். உலகிலுள்ள பெரும்பாலான சொத்துக்கள் சில நூறுபேரின் கரங்களில் இருக்கின்றன. இதுதான் மனித சமூகத்தில் மிகப்பெறும் ஏற்றத்தாழ்வுகளைத் தோற்றுவித்து வருகின்றன. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்னவென்று சிந்தித்துப்பார்த்தால் தன்னலம்தான் என்பது புலனாகிறது.
இன்றைய இரண்டாம் வாசகத்தில், உங்களுள் சிலர் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறிகளாகச் சுற்றித்திரிந்து, பிறர் வேலையில் தலையிடுவதாகக் கேள்விப்படுகிறோம். இத்தகையோர் ஒழுங்காகத் தங்கள் வேலையைச் செய்து, தாங்கள் உண்ணும் உணவுக்காக உழைக்க வேண்டும் என ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் கட்டளையிட்டு அறிவுறுத்துகிறோம். என்கிறார் புனித பவுலடியார். மேலும் “உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது” என்று நாங்கள் உங்களிடையே இருந்தபோதே உங்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தோம். என்பதையும் நினைவுபடுத்துகிறார். உழைக்க மனமில்லாமல், எந்நேரமும் சோம்பித்திரிவது பல்வேறு சமூகத் தீமைகளின் தோற்றுவாயாக இருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.
நோவாவின் காலத்தில் நடந்ததுபோலவே மானிட மகனுடைய காலத்திலும் நடக்கும். நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அவர்கள் அனைவரையும் அழித்தது. அவ்வாறே லோத்தின் காலத்திலும் நடந்தது. மக்கள் உண்டார்கள், குடித்தார்கள்; வாங்கினார்கள், விற்றார்கள்; நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமை விட்டுப்போன நாளில் விண்ணிலிருந்து பெய்த தீயும் கந்தகமும் எல்லாரையும் அழித்தன. மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும் (லுக் 17:27-30) என்று இறையாட்சி எப்போது வரும் என்று பரிசேயர் கேட்ட கேள்விக்கு விழிப்பாய் இருக்கவேண்டும் என்று பதிலளிக்கின்றார் இயேசு.
ஆகவே, நாம் விழிப்பாய் இல்லையென்றால் விண்ணக வாழ்வை இழந்துவிடுவோம் என்ற பேருண்மையை நம் மனங்களில் இறுத்திச் செயல்படுவோம் இயேசுவுக்காக இன்னலுறும்போது, அவர் இறுதிவரை உடனிருந்து உன்னத வாழ்வுக்கு உவப்புடன் நம்மைக் காப்பாற்றுவார் என்பதை உறுதியாய் நம்புவோம். ஆன்மாவைக் கொல்ல இயலாமல். உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சாது, ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவரான கடவுளுக்கே அஞ்சுவோம் (மத் 10:28). அதற்கான அருள்வரங்களை ஆண்டவர் இயேசுவிடம் இந்நாளில் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்