இலங்கை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டோர்க்கு இலவச வீடுகள்
மெரினா ராஜ் வத்திக்கான்
இலங்கையில் 2019ஆம் ஆண்டு உயிர்ப்புப் பெருவிழாவன்று நடைபெற்ற குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கு இலவச வீடுகள் புனித அந்தோணியார் வீட்டுமனைத் திட்டத்தாரால் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டன.
நவம்பர் 14ஆம் தேதி திங்கள்கிழமை இலங்கையின் கொழும்பு புறநகர்ப் பகுதியில் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் திட்ட நிகழ்வில், இலங்கைப் பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித், துணைப்பேராயர் அண்டன் இரஞ்சித் கொழும்பு காரித்தாஸ் அமைப்பின் தலைவர் அருள்பணி இலாரன்ஸ் ராமனாயக் மற்றும் அருள்பணியாளார்கள் பலர் பங்கேற்றனர்.
இத்தாலி நாட்டின் பதுவா நகர் காரித்தாஸ் அமைப்பான அந்தோனியானாவால் நிதியளிக்கப்பட்டு இலங்கையின் வடக்குப் பகுதியில் கட்டப்பட்டுள்ள 12 வீடுகள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்குக் காராணமானவர்கள் தவறுகளை ஒப்புக் கொண்டால் அதனை ஏற்று மன்னிக்கத் தயாராக இருக்கின்றோம் என்று கூறினார்.
இலங்கையின் கொழும்பு பேராயரான கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், தாக்குதல் பற்றிய வெளிப்படையான சுதந்திரமான விசாரணை நடைபெறும் என்று இலங்கையின் முன்னாள் அரசுத்தலைவர் மைத்திரிபால சிரிசேனா தன்னிடம் கூறியதாகவும், விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை காவல்துறை மற்றும் நீதித்துறையிடம் ஒப்படைக்கலாம் என்று தான் பரிந்துரைத்ததாகவும் கூறியுள்ளார்.
தவறுகளை ஒப்புக்கொள்பவர்களை மன்னிக்க இலங்கை மக்கள் தயாராக இருப்பதாகவும், குற்றங்களை மறைக்காமல் உண்மையை ஏற்றுக்கொள்பவர்கள் புத்த மதச் சட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாகவும், மறுப்பவர்கள் தண்டனைக்கும் ஆளாவர் என்றும் கூறியுள்ளார் கர்தினால் மால்கம் இரஞ்சித்.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள், மூன்று தங்கும் விடுதிகள் சேதமடைந்ததுடன் 250 பேர் உயிரிழந்தனர் என்பதும் 500 பேர் படுகாயமுற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலவச வீடுகளை வழங்கும் புனித அந்தோணியார் திட்டமானது 1920ஆம் ஆண்டின் மத்தியில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் Milwaukeeயில் ஒரு பள்ளியாக செயல்பட்டு, எண்ணற்ற பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளித்து வந்தது. பின் 1931ஆம் ஆண்டில் இக்கட்டிடம் ஒரு மருத்துவமனையாகவும், 1970ஆம் ஆண்டில், கப்புச்சின் பிரான்சிஸ்கன் அதிகாரத்தின் கீழ், புனித பென் சமூக உணவுத் திட்டமாகவும் தொடங்கப்பட்டு, வீடற்ற மக்களுக்கு இலவச உணவு வழங்கத் தொடங்கியது.
சிகாகோவைத் தளமாகக் கொண்ட ஏழ்மை ஒழிப்பு நிறுவனமான ஹார்ட்லேண்ட் அலையன்ஸுடன் இணைந்து 2009ஆம் ஆண்டிலிருந்து காலியாக இருந்த நிலங்களில் $150 மில்லியன் மதிப்பில் புதிய வீடுகளை அமைத்தல், மறுசீரமைப்பு செய்தல் போன்றவற்றைச் செய்து இது வரை எளிய மக்களுக்கு 60 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கியுள்ளது. (AsiaNews)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்