உக்ரைனில், போர்நிறுத்தத்திற்குத் திருத்தந்தையின் அழைப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்ககம் - வத்திக்கான்
போரை நிறுத்துமாறு தனது இதயத்திலிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்புவிடுக்கிறார் என்று உக்ரைனுக்கான திருப்பீடத் தூதர் பேராயர் Visvaldas Kulbokas அவர்கள் கூறியுள்ளார்
நவம்பர் 08, இச்செவ்வாயன்று, நாட்டில் போரை நிறுத்துமாறு திருத்தந்தையின் அண்மைய மற்றும் அவசர வேண்டுகோள் குறித்து வத்திக்கான் செய்திக்குப் பேட்டியளித்தபோது இவ்வாறு கூறியுள்ளார் பேராயர் Kulbokas
அண்மையில் பஹ்ரைனுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டு திரும்புகையில் விமானத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது திருத்தந்தை பேசியவற்றில் மூன்று முக்கியக் கூறுகளை எடுத்துக்காட்டிப் பேசியுள்ளார் பேராயர் Kulbokas
தனது மூவேளை செப உரையின்போது திருத்தந்தை மக்களை மையப்படுத்தி பேசியதை முதல் கருத்தாக எடுத்துக்காட்டிய பேராயர் Kulbokas அவர்கள், "இரஷ்ய மற்றும் உக்ரேனிய மக்கள் மீது அவர் கொண்டிருக்கும் அன்பு, பாசம் பற்றி பேசியதுடன், மிகவும் பிரபலமான இரஷ்ய எழுத்தாளர் தஸ்தாயெவ்ஸ்கியை மேற்கோள் காட்டினார் என்றும், திருத்தந்தை தனது இதயத்திலிருந்து இரஷ்ய மக்களிடம் பேச முயன்றதை எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது என்றும் கூறியுள்ளார்.
திருத்தந்தை யாருடனும், எந்த அமைப்புடனும், மேற்கு அல்லது கிழக்குடன் அரசியல் ரீதியாகவோ அல்லது கருத்தியல் ரீதியாகவோ இணைந்திருக்கவில்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்ட அவர் சாத்தியமான அனைத்து வழிகளையும் பயன்படுத்தினார் என்றும் தனது இரண்டாவது கருத்தாகக் கூறியுள்ளார் பேராயர் Kulbokas
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராக மட்டுமல்ல, ஒரு சிறந்த மனிதராகவும் தனது எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்தியுள்ளார் என்று தனது மூன்றாவது கருத்தாகச் சுட்டிக்காட்டியுள்ள பேராயர் Kulbokas அவர்கள், மனித உயிரின் மீதான மரியாதை மற்றும் போரை நிறுத்துவதன் அவசியத்தை பற்றி நற்செய்தி மட்டுமல்ல, மனிதகுலம் முழுவதுமே பேசுகிறது என்று தனது நேர்காணலில் திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் கத்தோலிக்கத் திருஅவையின் பிறரன்பு பணிகளைக் குறித்து வத்திக்கான் செய்திக்கு இதற்கு முந்தைய நேர்காணலில் பேசிய பேராயர் Kulbokas அவர்கள், போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு மற்றும் தங்குமிடங்களைக் கட்டியெழுப்புவதில் திருஅவை காட்டிவரும் அக்கறையையும் பேருதவியையும் பாராட்டியுள்ளார்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்