புனித நூன்சியோ சுல்பிரிசியோ புனித நூன்சியோ சுல்பிரிசியோ  

வழிசொல்லும் ஒளிச்சுடர்: வறியோரை பராமரித்தவர்கள்

புனித நூன்சியோ சுல்பிரிசியோவை, 1963ஆம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள் அருளாளராகவும், 2018ஆம் ஆண்டு 14ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதராகவும் அறிவித்தனர். புனித நூன்சியோவின் திருநாள் ஒவ்வோர் ஆண்டும் மே 5ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது

மேரி தெரேசா: வத்திக்கான்

Harry Sinclair Lewis (பிப்.7, 1885 – சன.10, 1951) அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், மற்றும், நாடகங்களை எழுதுகிறவர். தொடக்கத்தில் இவரது எழுத்துக்களுக்கு மிகக் குறைந்த அளவு வருமானமே கிடைத்து வந்தது. அவற்றுக்கு அவர் சில வேளைகளில் கடும் எதிர்ப்புக்களையும் சந்தித்தார். ஒருமுறை இவர் எழுதிய கட்டுரை ஒன்று கடும் எதிர்ப்புக்குள்ளானது. அதனால் அவர் தெருத் தெருவாய் விரட்டியடிக்கப்பட்டார். அப்படியிருந்தும் அவர் எழுதுவதை மட்டும் நிறுத்தவோ, மனம் சோர்ந்துவிடவோ இல்லாமல் தொடர்ந்து எழுதி வந்தார். அவருக்கு ஒரு நாவல் எழுதுவதற்கு குறைந்தபட்சம் ஆறு மாதம் எடுத்துக்கொள்வார். அதிகபட்சமாக பத்தாண்டுகள்கூட எடுத்துக்கொள்வார். அவ்வாறு அவகாசம் கொடுத்து அவர் எழுதிய நாவல்தான், 1920ஆம் ஆண்டில் வெளியான Main Street என்ற நாவல். இது, முதல் உலகப் போர், அப்போரில் அமெரிக்க ஐக்கிய நாடு நுழைந்தது, அதைத் தொடர்ந்து வந்த தடைகள் போன்றவை பற்றியும், அது Minnesotaவின் Gopher Prairie நகரின் வாழ்வியலைப் பாதித்துள்ளது குறித்தும் விவரிப்பதாய் இருந்தது. இந்நாவல் பெண்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. அதேநேரம் பல ஆண்களின் எதிர்ப்புக்கும் ஆளானது. அந்நகரின் மூலைக்கு மூலை ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும்கூடி இந்நாவல் பற்றி விவாதப் போர் நடத்தி வந்தனர். இதனால் இந்நூல் பல பதிப்புக்கள் போகும் அளவுக்கு அதன் விற்பனையும் அதிகரித்தது. Main Street நாவல், லேவிஸ் அவர்களுக்கு நொபெல் இலக்கிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. 1921ஆம் ஆண்டில் அந்நாட்டில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட நாவலாகவும் இது சிறப்புப் பெற்றிருந்தது. மிகச் சிறந்த நொபெல் விருதைப் பெற்ற அந்நூலுக்கு அவர் எடுத்த முயற்சி பற்றி பத்திரிகையாளர் ஒருவர் கேட்டபோது, அவர் இவ்வாறு கூறினார். நான் நொபெல் விருது பெறவேண்டும் என்பதற்காக நான் எந்த ஒரு சிறப்பான முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் ஓர் உண்மையைக் கூறுகிறேன், நான் தேர்ந்துகொண்ட எழுத்துத் துறையில் நிதானமாக, பொறுமையிலும் பொறுமையைக் கடைப்பிடித்ததோடு சோர்வு என்பதே சிறிதும் இன்றி உழைத்துக்கொண்டே இருந்தேன். அதன் பலன்தான் இது என்று கூறினார். Main Street உட்பட லேவிஸ் அவர்கள் எழுதிய நாவல்களில் Babbitt (1922), Arrowsmith (1925), Elmer Gantry (1927), Dodsworth (1929), It Can't Happen Here (1935) ஆகியவையும் புகழ்பெற்றவையாகும். (உதவி: இணைய பக்கங்கள்/இன்றையச் சிந்தனை)

இடைவிடாத முயற்சி, கடுமையான உழைப்பு, மற்றும், உறுதியான மனத்தை எவர் ஒருவர் கொண்டிருக்கிறாரோ அவர் நிச்சயமாக வெற்றி அடைவார். கடும் உழைப்பு எப்போதும் பயன்தரும், வெறும் பேச்சினால் வருவது வறுமையே (நீ.மொ.14,23) என்று திருவிவிலியம் சொல்கிறது. எந்நிலையிலும் நிலைகுலையாது வாழ்வியலை நடத்திச்சென்று இறுதியில் வெற்றி வாகையைச் சூடியவர் பலர் வரலாற்று ஏடுகளில் இடம்பிடித்துள்ளனர். இயேசு தம் சீடர்களுக்குக் கற்றுக்கொடுத்த பாதையின் வழியில், தலைமைத்துவத்திற்குச் சிறந்த முன்மாதிரிகையாய்த் திகழ்பவர் புனித மரிய கேத்ரீன் காஸ்பர் (Maria Katharina Kasper).  

புனித மரிய கேத்ரீன் காஸ்பர்

புனித மரிய கேத்ரீன் காஸ்பர்
புனித மரிய கேத்ரீன் காஸ்பர்

புனித மரிய கேத்ரீன் காஸ்பர் அவர்கள், 1820ஆம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி ஜெர்மனியின் Dernbach என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தைக்கு முதல் திருமணத்தில் நான்கு மகள்களும், இரண்டாவது திருமணத்தில், கேத்ரீன் உட்பட நான்கு பிள்ளைகளும் இருந்தனர். குடும்பத்தில் ஆறாவது குழந்தையாக இருந்த கேத்ரீன், அவர்களது சிறிய கிராமத்தில் பள்ளிக்குச் சென்று வந்தார். மற்ற நேரங்களில் அவர்கள் குடும்பத்தின் உருளைக்கிழங்கு வயலிலும், மற்ற வேலைகளையும் செய்தார். அதேநேரம் கேத்ரீனாவின் தாய் அவருக்கு நூல் சுத்தவும், துணி நெய்யவும் கற்றுக்கொடுத்தார். அவருக்கு 21 வயது நடந்தபோது அவரது தந்தை இறந்தார். அப்போதைய சட்டத்தின்படி சொத்துக்கள் அனைத்தும் முதல் மனைவியின் நான்கு பிள்ளைகளுக்கும் சென்றது. அதனால் அப்போது 56 வயதை எட்டியிருந்த கேத்ரீனாவின் தாய், தன் பிள்ளைகளோடு மத்தியாஸ் முல்லர் குடும்பத்திடமிருந்து ஒரு வாடகை வீடு எடுத்து தங்கினர். கேத்ரீனின் தாய் நிலத்தில் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றினார். சாலை கட்டுமான வேலையில் கல் உடைக்கும் தொழில்செய்து குடும்பத்திற்கு உதவி வந்தார்.   திருவிவிலியம் மற்றும், தாமஸ் அகெம்பிஸ் எழுதிய கிறிஸ்துவைப் பின்செல்தல் நூல்களை வாசிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார்.

சிறு வயதிலிருந்தே மற்றவருக்கு உதவுவதில் ஆர்வம் கொண்டிருந்த கேத்ரீன், இளவயதில் ஏழைகளுக்கும், கைவிடப்பட்டோருக்கும் ஆற்றிவந்த பிறரன்புப் பணிகளால் பல இளம்பெண்கள் அவர்பக்கம் ஈர்க்கப்பட்டனர். கேத்ரீன், நான்கு இளம்பெண்களுடன் சேர்ந்து ஒரு துறவுக் குழுமத்தைத் தொடங்கினார். இவர், ஏற்கனவே தொடங்கப்பட்டிருந்த துறவு சபை ஒன்றில் சேர விரும்பினாலும், அப்போது அவர் வாழ்ந்த பகுதியில் எந்த சபையும் இல்லை. அதனால், 1851ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம் தேதி, “இயேசு கிறிஸ்துவின் ஏழை அடிமைகள்” (ADJC) என்ற துறவுக் குழுமத்தை உருவாக்கி, Limburg ஆயர் Peter Joseph Blum அவர்கள் முன்னிலையில், அந்த ஐந்து இளம்பெண்களும், ஏழ்மை, கற்பு, பணிவு ஆகிய வார்த்தைப்பாடுகளைப் பொதுப்படையாக எடுத்தனர். “Dernbach அருள்சகோதரிகள்” என்றழைக்கப்படும் இவர்கள், அதிகத் தேவையில் இருப்பவர்களுக்கும், சிறாருக்கும் உதவி வந்தனர். துறவு சபையில், மரியா என்ற பெயரை எடுத்துக்கொண்ட கேத்ரீன், அச்சபையின் தலைமை அன்னையாக, ஐந்து முறை தொடர்ச்சியாகப் பணியாற்றினார்.

“அன்னை, மரியா” என்றழைக்கப்பட்ட கேத்ரீன் காஸ்பர் அவர்கள் ஆரம்பித்த துறவு சபை, 1890ஆம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி திருத்தந்தை 13ம் லியோ அவர்களால் அங்கீகரிக்கப்பட்டது. அச்சபையினரின் எளிமையான வாழ்வும், அன்புப்பணியும் அனைவரையும் கவர்ந்தன. இவர், 1898ஆம் ஆண்டு சனவரி 27ம் தேதி மாரடைப்பால் பாதிக்கப்பட்டு பிப்ரவரி 2ம் தேதி உயிரிழந்தார். 1978 ஆம் ஆண்டில் திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்களால் அருளாளராகவும், 2018ஆம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதராகவும் அறிவிக்கப்பட்டார். “இயேசு கிறிஸ்துவின் ஏழை அடிமைகள்” சபையினர், ஜெர்மனி தவிர, நெதர்லாந்து, மெக்சிகோ, பிரேசில், கென்யா, நைஜீரியா, இந்தியா போன்ற நாடுகளில் மறைப்பணியாற்றுகின்றனர். அன்னை மரியா அவர்கள் இறைபதம் சேர்ந்த 1898ஆம் ஆண்டில் 193 துறவு இல்லங்களில் 1725 அருள்சகோதரிகள் இருந்தனர். புனித மரிய கேத்ரீன் காஸ்பர் அவர்களின் திருநாள் பிப்ரவரி 2ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.

புனித இஞ்ஞாசியா நசாரியா மார்ச் மேசா (Ignacia Nazaria March Mesa)

Nazaria Ignacia March Mesa அவர்கள், 1889ஆம் ஆண்டு சனவரி 10ம் தேதி இஸ்பெயினின் மத்ரித்தில் பிறந்தார். இவர் தனது ஒன்பதாவது வயதில், "நசாரியா என்னைப் பின்செல்" என்ற ஆண்டவரின் அழைப்பைக் கேட்டார். அப்போது நசாரியாவும், "ஒரு மனிதப் பிறவியாக எவ்வளவு விரைவில் பின்செல்ல முடியுமோ அவ்வளவு விரைவில் இயேசுவைப் பின்செல்வேன்" என்று பதில் கூறினார். பொருளாதாரச் சூழல் காரணமாக இவரது குடும்பம் மெக்சிகோவுக்குச் சென்றது. அங்கு இவர், 1908ஆம் ஆண்டில் கைவிடப்பட்ட முதியோருக்குப் பணியாற்றும் சிறிய அருள்சகோதரிகள் சபையில் சேர்ந்தார். பின்னர் பொலிவியா நாட்டின் Oruroவில் 12 ஆண்டுகளுக்கு மேலாக, வயது முதிர்ந்தோருக்குப் பணியாற்றினார். கிறிஸ்துவின் துன்புறும் உடலின் உறுப்பினர்களாக  அவர்களைப் பார்த்தார் இவர். இலெயோலா புனித இஞ்ஞாசியாரின் ஆன்மிகப் பயிற்சியில் இறையாட்சிக்குப் பணியாற்றுவது குறித்து தியானித்தார். அதில் திருஅவைக்காக இயேசுவின் திருச்சிலுவையை அன்புகூரும் ஒரு சபையை உருவாக்குவது குறித்த எண்ணத்தை வளர்த்துக்கொண்டார்.

1925ஆம் ஆண்டு ஜூன் 16ம் தேதி ஒரு புதிய துறவு சபையைத் தொடங்குவதற்காக, தான் சேர்ந்திருந்த சபையிலிருந்து வெளியேறினார் அருள்சகோதரி நசாரியா. திருத்தந்தையின் சிலுவைப்போர் வீரர்களின் மறைப்பணி அருள்சகோதரிகள் என்ற பெயரில் மறைமாவட்டம் அங்கீகாரம் பெற்ற சபையாக அதைத் தொடங்கினார். 1943ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 6ம் தேதி அன்னை நசாரியா இஞ்ஞாசியா அவர்கள், அர்ஜென்டீனா நாட்டு புவனோஸ் அய்ரசில் இறைபதம் சேர்ந்தார். அன்னை நசாரியா இஞ்ஞாசியா அவர்களை, 1992ஆம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் அருளாளராகவும், 2018ஆம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதராகவும் அறிவித்தனர். புனித நசாரியா இஞ்ஞாசியாவின் திருநாள் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 6ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.

1947ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ம் தேதி அச்சபையின் கொள்கைத் திரட்டும் திருத்தந்தையால் அங்கீகரிக்கப்பட்டு, திருஅவையின் மறைப்பணி சிலுவைப்போர் வீரர்கள் என்ற பெயரையும் பெற்றது. இச்சபையின் கொள்கை நூலை எழுதிய அன்னை நசாரியா இஞ்ஞாசியா அவர்கள், அதில் இவ்வாறு குறித்துள்ளார். "இந்த திருத்தந்தையின் மறைப்பணி சிலுவைப்போர் சபை, பெண்களின் சமூகப் பணிகளை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. இச்சபை, அன்பிலும், பணிவிலும், படைப்பனைத்திற்கும் நற்செய்தி அறிவிக்கும் திருஅவையின் பணியோடு ஒத்துழைக்கின்றது. இதுவே இச்சபையின் வாழ்வுமுறை. இதுவே நாங்கள். இதுவே எமது ஆன்மிகப் போர், மற்றும், நம்பிக்கை. இதில், கோழைத்தனம் கிடையாது. எல்லாமே அன்புதான். அனைத்தையும் கிறிஸ்துவுக்கும், கிறிஸ்துவில் எல்லாருக்காகவும் அன்புகூர்தலாகும். ஏழைகள் மத்தியில் பணி, கவலைப்படுவோரைத் தேற்றுவது, சிறார் கல்வி, அவர்களோடு உணவைப் பகிர்தல், இரத்தினச் சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், எமது வாழ்வு முழுவதையும் கிறிஸ்துவுக்கும், திருஅவைக்கும், ஆன்மாக்களுக்கும் அர்ப்பணிப்பதாகும்".

புனித நூன்சியோ சுல்பிரிசியோ (Nunzio Sulprizio:13 ஏப்.1817– 5 மே 1836)

புனித நூன்சியோ சுல்பிரிசியோ (Nunzio Sulprizio) அவர்கள், மென்மையானவர், பணிவுள்ளவர், அன்பானவர் பக்திமான் என, தன் நகர மக்களால் போற்றப்படுபவர். இத்தாலியரான இவர் இரும்புப் பட்டறையில் பயிற்சிப் பெற்றுவந்தவர். சிறிது நாள்கள் நோயினால் தாக்கப்பட்டு தனது 19வது வயதிலேயே இறைபதம் சேர்ந்தவர் இவர். 1817ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி இத்தாலியின் போப்போலி என்ற ஊரில் தொமேனிக்கோ சுல்பிரிசியோ, ரோசா லூசியானி தம்பதியருக்கு, கடுமையான பஞ்ச காலத்தில் பிறந்தார் நூன்சியோ. இவர் பிறந்த சிலமணி நேரங்களிலேயே திருமுழுக்கு வழங்கப்பட்டார். இவர் உறுதிபூசுதல் பெற்ற 1820ஆம் ஆண்டிலேயே இவரது தந்தை இறந்தார். இதற்குச் சில மாதங்களிலேயே நூன்சியோவின் சகோதரியும் இறந்தார். இவரது தாய், பொருளாதாரப் பாதுகாப்புக்காக வயதில் மூத்த ஒருவரை மறுமணம் செய்துகொண்டார். நூன்சியோவின் வளர்ப்புத்தந்தை, அவரிடம் மிகக் கடுமையாகவும், வெறுப்போடும் நடந்துகொண்டார். ஆனால் நூன்சியோ, தன் தாயோடும் தாய்வழி பாட்டியோடும் நெருங்கிய உறவை வைத்திருந்தார். அவ்வூர் பங்குத்தந்தை நடத்திய பள்ளியில் வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார். அச்சமயத்தில் இயேசு கிறிஸ்துவை அறியவும், அவர் மற்றும், புனிதர்களின் முன்மாதிரிகையைப் பின்பற்றவும் கற்றுக்கொண்டார் நூன்சியோ.    

தாய் மாமாவின் கொடுமை

1823ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் தேதி நூன்சியோவின் தாய் இறந்தார். அதனால் இவர் தன் பாட்டியின் அரவணைப்பில் வளர்க்கப்பட்டார். அவரது பாட்டி படிப்பறிவற்றவராய் இருந்தாலும், பக்தியுள்ளவராய், ஆழ்ந்த இறைநம்பிக்கையுள்ளவராய் இருந்தார். தன் பாட்டியோடு தினமும் திருப்பலிக்குச் சென்றுவந்த நூன்சியோ, ஏழை மாணவர்க்கென்று பங்குத்தந்தை நடத்திய பள்ளியில் சேர்ந்தார். இவரது பாட்டியும் 1826ஆம் ஆண்டில் இறந்தார். இதற்குப்பின்பு இவரது தாய் மாமா தொமேனிக்கோ லூசியானி, நூன்சியோவை வளர்க்கும் பொறுப்பை ஏற்றார். நூன்சியோவை இரும்புப் பட்டறையில் பணி பயிற்சிக்காக அனுப்பினார். அவரது மாமாவும் நூன்சியோவை கடுமையாக நடத்தினார். அவருக்குப் பல நேரங்களில் சரியான உணவு வழங்கவில்லை. நூன்சியோவின் நடத்தையில் ஏதாவது திருத்தம் கொடுக்க நேர்ந்தால் அவ்வேளைகளில் அவரைப் பட்டினியாகப் போட்டுவிடுவார் அவரது மாமா. தூரம் என்றுகூடப் பார்க்காமல் நூன்சியோவை ஓடிப்போய் சாமான்களைக் கொடுத்துவர அனுப்புவார். இது நூன்சியோவிற்கு மிகுந்த சோர்வை அளித்தது. இந்த வேலையை நூன்சியோ சரியாகச் செய்யவில்லையென்றால் அவரது மாமா அவரை அடிப்பார் மற்றும், பழித்துரைப்பார். இந்த வேலை, நூன்சியோவின் வயதிற்கு ஏற்றதாக இல்லை. மாறாக அது கடினமாக இருந்தது. அதனால் 1831ஆம் ஆண்டில்  நூன்சியோ நோயினால் தாக்கப்பட்டார்.

நோயின் பாதிப்பு

ஒரு குளிர் காலத்தில் இவரது மாமா, Rocca Tagliata மலைச்சரிவுகளில் பொருள்களை விநியோகம் செய்ய நூன்சியோவை அனுப்பினார். அன்று மாலையில் நூன்சியோ மிகவும் களைப்படைந்தார். அவரது கால் வீங்கியது. காய்ச்சல் கொளுத்தியது. இதை அவர் தனது மாமாவிடம் சொல்லவில்லை. மறுநாள் நூன்சியோவால் படுக்கையைவிட்டு எழுந்திரிக்க முடியவில்லை அப்போது நூன்சியோ அனுபவித்த வேதனையை அவரது மாமா கண்டுகொள்ளவே இல்லை. பின்னர் நூன்சியோவின் கால் அழுகி மரத்துப்போனதாக கண்டறியப்பட்டது. முதலில் L'Aquila மருத்துவமனையிலும், பின்னர் நேப்பிள்ஸ் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். இவ்வேதனைகளை இவர் பொறுமையோடு ஏற்று கடவுளுக்கு அவற்றை அர்ப்பணித்தார். நூன்சியோ வீட்டில் நோயாய் இருக்கும்போது அவரது கால்புண்ணைக் கழுவுவதற்காக, வீட்டிற்கு அருகிலிருந்த ஓர் ஓடைக்குச் சென்றார். அப்போது அங்கு துணி துவைத்துக்கொண்டிருந்த ஒரு பெண், இந்த தண்ணீர் அழுக்காகிவிடும் என அவரைத் திட்டிவிரட்டியுள்ளாள். பின்னர் நூன்சியோ மற்றோர் ஓடையில் தனது கால்புண் சுத்தமாகும்வரை செபமாலை செபித்துக்கொண்டிருந்தார் என்று அவர் பற்றி பதிவுசெய்யப்பட்டுள்ளது.  

புனித நூன்சியோ சுல்பிரிசியோ
புனித நூன்சியோ சுல்பிரிசியோ

நூன்சியோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தபோது, படைவீரரான அவரது சித்தப்பா பிரான்செஸ்கோ சுல்பிரிசியோ அவர்கள், தன்னை யார் என அறிமுகப்படுத்திக் கொண்டார். அதிலிருந்து அவ்விருவரும் தந்தை, மகன் உறவில் வளர்ந்தனர். பின்னாளில் புனிதர் என அறிவிக்கப்பட்ட கயத்தானோ எரிக்கோ அவர்கள், நூன்சியோ குணம் அடைந்தபின்னர் அவரை துறவு வாழ்வில் சேர்த்துக்கொள்வதாக உறுதியளித்தார். இதற்கிடையே 1832ஆம் ஆண்டு ஜூன் 20ம் தேதி நூன்சியோ, குணமாக்கமுடியாத நோயாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவரது சித்தப்பாவால் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட இராணுவத் தளபதி Felice Wochinger, நூன்சியோவுக்குத் தேவையான உதவிகளைச் செய்தார். அச்சமயத்தில் நூன்சியோ, இயேசுவை முதன்முறையாகப் பெறுவதற்குத் தன்னைத் தயாரித்தார். அக்காலக்கட்டத்தில் 15 வயதில்தான் முதன்முறையாக திருநற்கருணை வாங்கவேண்டும் என்ற விதிமுறை இருந்தது. மேலும், அவர் இஸ்கியா தீவில் நீரூற்று சிகிச்சை பெற அனுப்பி வைக்கப்பட்டார். அதற்குப்பின் கைத்தடி ஒன்றின் உதவியோடு நடந்தார், நூன்சியோ.  

இறுதி நேரம்

1835ஆம் ஆண்டில் வேதனையைக் குறைப்பதற்காக அவரது காலை எடுத்துவிடவேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். ஆயினும் வேதனை குறையவில்லை. 1836ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிலைமை மோசமானது. காய்ச்சலும் அதிகரித்தது. தனது இறுதி நேரம் நெருங்கி வருகிறது என்பதை உணர்ந்த நூன்சியோ, கடவுளிடம் தொடர்ந்து நம்பிக்கை வைத்தார். அதற்கு இரு மாதங்கள் சென்று அவர் இறந்த நாளில் சிலுவை ஒன்றை தன்னிடம் கொண்டுவருமாறு கேட்டார். ஒப்புரவு மற்றும், நோயில்பூசுதல் அருளடையாளங்களையும் பெற்றார். நூன்சியோவைத் தாக்கியிருந்த நோயால் 1836ஆம் ஆண்டில் அவர் இறைபதம் சேர்ந்தார். நேப்பிள்ஸின் புனித தொமேனிக்கோ ஆலயத்தில் நூன்சியோவின் உடல் இப்போது வைக்கப்பட்டுள்ளது. அவர் இறந்து பல ஆண்டுகள் சென்று திருத்தந்தை 13ம் லியோ அவர்கள், நூன்சியோ சுல்பிரிசியோவை, தொழிலாளருக்கு முன்மாதிரிகை என்று பரிந்துரைத்தார்.    

ஒருவரை அருளாளராக அறிவிக்க ஒரு புதுமையும், புனிதராக அறிவிக்க மற்றொரு புதுமையும் தேவை. நூன்சியோ சுல்பிரிசியோவிடம் மன்றாடியதால் இரு புதுமைகள் நடைபெற்றன. இதனால் இவரை, 1963ஆம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள் அருளாளராகவும், 2018ஆம் ஆண்டு 14ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதராகவும் அறிவித்தனர். புனித நூன்சியோவின் திருநாள் ஒவ்வோர் ஆண்டும் மே 5ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது

பிரான்செஸ்கோ ஸ்பிநெல்லி, வின்சென்சோ ரொமானோ, திருத்தந்தை ஆறாம் பவுல், பேராயர் ஆஸ்கர் ரொமேரோ, மரிய கத்ரீனா காஸ்பர், இஞ்ஞாசியோ நசாரியா மார்ஷ் மெசால், நூன்சியோ சுல்பிரிசியோ ஆகிய ஏழு அருளாளர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2018ஆம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி புனிதர்களாக அறிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 December 2022, 08:25