உரையாடல், செவிமடுத்தல், ஒன்றிணைந்து நடப்பதன் காலம் கிறிஸ்மஸ்
மேரி தெரேசா: வத்திக்கான்
கிறிஸ்மஸில் கடவுள் நம்மோடு பயணிக்கிறார், மற்றும், கிறிஸ்து மனுஉரு எடுத்த நிகழ்வு, ஒன்றுசேர்ந்து பயணிக்கவேண்டியதை நினைவுபடுத்துகின்றது என்று பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Pablo Virgilio David அவர்கள், பாரம்பரிய கிறிஸ்மஸ் நவநாள் வழிபாட்டில் கூறியுள்ளார்.
பிலிப்பீன்ஸ் நாட்டில் தேசிய அளவில் சிறப்பிக்கப்படும் கிறிஸ்மஸ் நவநாள் பக்திமுயற்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய Kalookan ஆயர் Pablo David அவர்கள், கிறிஸ்மஸ், கடவுளின் இருத்தல் நம்மோடு இருப்பதையும், அவர் நம்மோடு பயணம் மேற்கொள்வதையும் நினைவுபடுத்துகின்றது என்று கூறியுள்ளார்.
கிறிஸ்மஸ் என்பது, கடவுள் நம்மிடம் வருகிறார், மற்றும், வாழ்வுப் பயணத்தில் நம்முடன் பயணிக்கிறார் என்பதை உணர்ந்து, ஒருவர் ஒருவரை அன்புகூரக் கற்றுக்கொள்ள அழைப்புவிடுக்கிறது என்று ஆயர் Pablo David அவர்கள் கூறியுள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும் பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கர் டிசம்பர் 16ம் தேதி தொடங்கும் கிறிஸ்மஸ் நவநாள் பக்திமுயற்சியை, அன்றைய நாளில் காலைத் திருப்பலிக்குச் செல்வதற்குமுன் அதிகாலையில் நிறைவேற்றும் பழக்கத்தைப் பாரம்பரியமாக கடைப்பிடித்து வருகின்றனர்.
2023 மற்றும், 2024ஆம் ஆண்டுகளில் வத்திக்கானில் ஒன்றிணைந்து பயணம் என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு கண்டம் அளவில் இரண்டாவது நிலை தயாரிப்புகள் இடம்பெற்றுவரும்வேளை, பிலிப்பீன்ஸ் நாட்டில் இவ்வாண்டு கிறிஸ்மஸ் நவநாள் பக்திமுயற்சியும், "ஒன்றிணைந்து பயணம்" என்ற தலைப்பில் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. (Fides)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்