நேர்காணல்: கிறிஸ்மஸின் அடையாளங்கள்
மேரி தெரேசா: வத்திக்கான்
உலகெங்கும் வாழ்கின்ற பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் டிசம்பர் 25, வருகிற ஞாயிறன்று கிறிஸ்மஸ் பெருவிழாவைக் கொண்டாட தங்களையே தயாரித்து வருகின்றனர். கிறிஸ்மஸ் என்றவுடனேயே கிறிஸ்மஸ் குடில்கள், கிறிஸ்மஸ் மரம், விண்மீன், வானதூதர்கள், இடையர்கள், கீழ்த்திசை மூன்று ஞானிகள், கிறிஸ்மஸ் தாத்தா, வாழ்த்து அட்டைகள், கிறிஸ்மஸ் பாடல்கள்... போன்றவையே நம் கண்முன் முதலில் வருகின்றன. அருள்பணி சகாயராஜ் அவர்கள், கிறிஸ்மஸ் குடில், கிறிஸ்மஸ் மரம் ஆகியவை பற்றிய வரலாற்று பின்புலங்களை வத்திக்கான் வானொலி நேயர்களுக்கென இன்று வழங்குகிறார். அருள்பணி சகாய ராஜ் அவர்கள், மரியின் ஊழியர் சபையைச் சார்ந்தவர்.
கிறிஸ்மஸின் அடையாளங்கள் - அருள்பணி சகாய ராஜ் ம.ஊ.ச.
அகிலத்தை மீட்க அவனியில் அவதரித்த அன்பின் உருவாம் ஆண்டவர் இயேசுவின் பிறப்பின் நினைவை மகிழ்வுடன் கொண்டாட நம்மையே தயாரிக்கும் நாட்கள் இவை. நம் உள்ளத்தில் பிறந்து நம்மை புது மனிதர்களாக்கும் இயேசுவின் உன்னத பிரசன்னத்திற்கு நமக்கு அடையாளங்கள் தேவையா என்கிற கேள்விகள் நம்மில் எழலாம். ஆனால், சராசரி மனிதர்களாகிய நமக்கு அடையாளங்களின் உதவி தேவை என்பதை மறுக்க இயலாது. உலகம் முழுவதும் இயேசு பிறப்பு கொண்டாட்டங்களின் அடையாளங்களாகத் திகழ்பவை: கிறிஸ்து பிறப்பு குடில், கிறிஸ்துமஸ் மரம், விண்மீன்கள், வாழ்த்து அட்டைகள், வாழ்த்து செய்திகள், கேரல்ஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் பாடல்கள், குடும்ப விருந்து என பட்டியல் இட்டுகொண்டே செல்லலாம்.
வத்திக்கான் வானொலி நேயர்களுக்கான இச்செய்தியில் கிறிஸ்துமஸ் குடில் மற்றும் கிறிஸ்துமஸ் மரம் இவற்றின் வரலாற்று செய்திகளை பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.
விண்ணக வேந்தனாம் இயேசுவின் மண்ணகப் பிறப்பு என்பது மாடடை குடிலில் நிகழ்ந்த எளிமையான நிகழ்வு என்பதை லூக்கா நற்செய்தியாளர் வழியாக நாம் அறிகிறோம். கிறிஸ்தவ மதத்தை உரோமை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொண்டபின் கிறிஸ்தவ விழாக்கள் பரவலாக கொண்டாடப்பட்டன. இயேசுவின் பிறப்பு விழா பற்றி உரோமை நகரில் கி.பி. 354ஆம் ஆண்டில் எழுதப்பட்ட நாட்காட்டியில் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 386ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் நாள் அன்று அந்தியோக்கியா நகரில் மறையுரை ஆற்றிய புனித ஜான் கிறிஸ்தோஸ்தம், இவ்விழாவானது பத்தாண்டுகளாக கொண்டாடப்படுகிறது என்று குறிப்பிடுகின்றார். எனவே, நான்காம் நூற்றாண்டின் இறுதியில் இயேசு பிறப்பு விழாவானது பரவலாகக் கொண்டாடப்பட்டது எனலாம். விவிலியச் சான்றுகள், மறையுரைகள், வழிபாட்டு கொண்டாட்டங்கள் என மக்கள் உள்ளங்களில் ஊன்றிய இவ்விழாவின் அடையாளங்களில் முக்கியமான அடையாளமான கிறிஸ்து பிறப்பு குடில் என்பது 13ஆம் நூற்றாண்டில்தான் முதலில் உருபெற்றது. அதுவும், உயிருள்ள மனிதர்கள் மற்றும் விலங்குகளைக் கொண்டு இந்நிகழ்வானது சித்தரிக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் குடிலை முதன்முதலாக உருவாக்கியவர் புனித பிரான்சிஸ் அசிசியார் ஆவார்.
கிறிஸ்து பிறப்பு குடில்
புனித பிரான்சிஸ் அசிசியார் இக்குடிலை கி.பி. 1223ஆம் ஆண்டு கிரேஜ்ஜோ என்கிற இடத்தில் இருந்த துறவற மடத்தின் அருகில் இருந்த ஒரு வனப்பகுதியில் அமைந்திருந்த குகையில், செல்வந்தரான ஜியோவான்னி வெலிதா என்பவரின் உதவியுடன் அமைத்தார். புனித பிரான்சிஸ் அசிசியின் இந்த முயற்சிக்கு திருத்தந்தை மூன்றாம் ஒனோரிஸின் அனுமதியும் ஆதரவும் பெரும் உதவியாயிருந்தன. அதுவரை ஓவியங்களில் மட்டும் காண கிடைத்த இந்த அற்புத காட்சியானது, முப்பரிமாண தோற்றத்தில் சதையும், இரத்தமுமாக மக்கள் கண்டு மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தனர்.
பின், இந்த இயேசுவின் பிறப்பு நிகழ்வு காட்சிகள் திருஉருவங்களாக வடிவம் பெற கி.பி. 1283ஆம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டியிருந்தது. கி.பி. 1283ஆம் ஆண்டு பிரான்சிஸ்கன் துறவற சபையைச் சார்ந்த முதல் திருத்தந்தை நான்காம் நிக்கோலாஸ் அவர்களின் முன்முயற்சியால், டஸ்கன் பகுதியைச் சார்ந்த புகழ்பெற்ற சிற்ப கலைஞர் காம்பியோ நகர் அர்னோல்ஃபோ அவர்களால் வடிவமைக்கப்பட்டு, மேற்கத்திய பெத்லகேம் என்றழைக்கப்பட்ட புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் வைக்கப்பட்டது.
இந்த பெருங்கோவிலானது ஏழாம் நூற்றாண்டிலிருந்தே இயேசுவின் குடிலைத் தாங்கிய அன்னை மரியின் ஆலயம் என்றழைக்கப்பட்டது. ஏனென்றால், இங்குதான் இயேசுவைத் தாங்கிய தீவனத் தொட்டியின் ஒரு பகுதியானது இங்கு வணக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. அர்னோல்ஃபின் குடிலானது 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் இடமாற்றம் பெற்று, திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்டஸ் அவர்களின் கட்டளைபடி கட்டிட கலைஞர் தோமினிகோ ஃபொன்தானா என்பவரால் உருவாக்கப்பட்ட சிஸ்டைன் ஆலயத்தில் வைக்கப்பட்டன. புனித மரியா பெருங்கோவிலிலும் ஒரு சிஸ்டைன் ஆலயம் உள்ளது என்பதை இங்ஙனம் நினைவில் கொள்வது நலம்.
16ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பா முழுவதும் கிறிஸ்து பிறப்பு குடில்கள் பரவலாயிற்று. தற்போதைய செக் குடியரசின் தலைநகராம் பிராக் நகரில் கி.பி. 1562ஆம் ஆண்டு இயேசு சபை குருக்கள் தங்கள் ஆலயத்தில் குடில் அமைத்திருந்ததற்கான குறிப்புகள் உள்ளன. அதனைத் தொடர்ந்து இன்ஸ்புர்க், மியூனிக் நகரங்களிலும் பெரிய ஆலயங்களில் மட்டுமல்லாமல் சிறிய ஆலயங்களிலும் குடில் இடம் பெற ஆரம்பித்தன. இத்தாலிக்கு வெளியே துறவற மடங்களில் குடில்கள் அமைக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. அவற்றில் மிகப் பழமையானதாக கருதப்படுவது சால்ஸ்புர்க் பெனடிக்டைன் துறவு இல்லக் குடிலாகும். இங்கு, கி.பி. 1615லேயே குடில்கள் அங்கு அமைக்கப்பட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
மிகப்பெரிய கலைஞர்களால் உருவாக்கப்பட்ட குடில் உருவங்கள், சாதாரண விவசாயிகளின் கவனத்தையும் ஈர்க்க ஆரம்பித்தன. கி.பி. 17ஆம் நூற்றாண்டில் தெற்கு திரோல் பகுதியில் உள்ள வல் கிரேதேனா பகுதியில் வசித்த விவசாயிகள், தங்கள் பகுதியில் இருந்த மரங்களில் திருக்குடும்பம், இடையர்கள், விலங்குகள் போன்ற சுரூபங்களை செதுக்க ஆரம்பித்தனர். குடில் வரலாற்றில் இது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதனால், குடில்கள் பெரிய செல்வந்தர்களின் வீடுகளை மட்டுமல்லாமல் சாதாரண எளிய மக்களின் இல்லங்களையும் அலங்கரிக்க ஆரம்பித்தன.
குடில்களில் ஒவ்வொரு நாட்டு கலாச்சாரமும் பிரதிபலிக்க ஆரம்பித்தன. அவற்றில் முக்கியமான ஒன்று இத்தாலி நாட்டு நேப்பிள்ஸ் பகுதி கலாச்சார குடில்கள் ஆகும். 17ஆம் நூற்றாண்டில் நாப்போலி குடில் சுரூபங்களை செய்த கலைஞர்கள் பல்வேறு வகையில் நவீனங்களை புகுத்தினர். பாரம்பரிய குடில் சுரூபங்களோடு தற்கால நிகழ்வுகளை சித்தரிக்கும் சுரூபங்களையும் இணைத்து வரலாற்றில் இணைந்து வாழும் இயேசுவை எல்லோரிடத்திலும் கொண்டு சேர்த்தனர்.
இக்கிறிஸ்துமஸ் காலத்தில் உரோமையில் உள்ள குடில்களையும், குடில் கண்காட்சிகளை மட்டும் தரிசிக்க பல நாட்கள் தேவை. இக்குடில்களை மட்டும் தரிசிக்க வரும் திருப்பயணிகளின் எண்ணிக்கை ஏராளமாகும்.
கிறிஸ்துமஸ் மரம்
கிறிஸ்து பிறப்பு காலத்தை சுட்டிக்காட்டும் மற்றொரு அடையாளம் கிறிஸ்துமஸ் மரமாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக குளிர்கால விழாக்களில், மக்கள் என்றும் பசுமையுடன் வாடா இலைகளைக் கொண்டிருக்கும் மரங்களைப் பயன்படுத்தினர். பின்னர் இது கிறிஸ்து பிறப்பு காலத்தைச் சுட்டிக்காட்டும் கிறிஸ்துமஸ் மரமானது. இப்பாரம்பரியம் முதலில் ஜெர்மனி நாட்டில் தோன்றியது.
வரலாற்றின் மத்திய காலத்தில், ஜெர்மனி நாட்டில் திருவருகை மற்றும் கிறிஸ்துமஸ் காலங்களில் ஆலயங்களுக்கு முன் நாடகங்கள் நடத்தப்பட்டன. இந்நாடகங்கள் விவிலிய மாந்தர்களை மையப்படுத்தியதாக அமைந்திருந்தன. அதிலும் குறிப்பாக டிசம்பர் 24ஆம் தேதி முதற்பெற்றோரான ஆதாம் மற்றும் ஏவாள் நாளாக நினைவுகூறப்பட்டது. அவர்கள் வாழ்ந்த ஏதேன் தோட்டத்தை நினைவுகூரும் விதமாக இம்மரங்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும் இம்மரங்களில் ஆப்பிள் பழம் தொங்கவிடப்பட்டது. அதே நேரத்தில், வெண்ணிற அப்பங்களும் இம்மரத்தில் தொங்கவிடப்பட்டன. இந்த அப்பங்கள் நம்மை மீட்க தன்னையே பலியாகத் தந்த கிறிஸ்து பெருமான் ஏற்படுத்திய நற்கருணையை நினைவுகூர்வதாக அமைந்திருந்தன. காலஓட்டத்தில் பல்வேறு இனிப்புகள் இந்த ஆப்பிள் பழம் மற்றும் வெண்ணிற அப்பங்களின் இடத்தைப் பிடித்தன. மேலும், பல்வேறு விதமான வண்ண விளக்குகள், கண்ணாடி குமிழிகள், வண்ண காகிதங்களின் அலங்காரம் என கிறிஸ்துமஸ் மரம் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளானது.
16ஆம் நூற்றாண்டில் கிறிஸ்துமஸ் மரங்களின் பயன்பாடுகள் ஆரம்பித்த காலத்தில் மார்ட்டின் லூத்தர் இம்மரங்களில் எரியும் மெழுகுதிரிகளைத் தொங்கவிடும் பராம்பரியத்தைத் தொடங்கினார். கி.பி. 1539ஆம் ஆண்டு ஸ்டாஸ்புர்க் பேராலயத்தில் கிறிஸ்மஸ் மரம் வைக்கப்பட்டதாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 18ஆம் நூற்றாண்டில் லூத்தரன் சீர்திருத்த சபையினர் அதிக அளவில் கிறிஸ்துமஸ் மரங்களை தங்கள் ஆலயங்களிலும், வீடுகளிலும் ஏற்படுத்தினர். 19ஆம் நூற்றாண்டளவில் கிறிஸ்துமஸ் மரம் ஜெர்மன் கிறிஸ்துவ கலாச்சாரத்தின் ஓர் அங்கமாக மாறியது. சீர்திருத்த கிறிஸ்தவ சபைகள் இக்கிறிஸ்துமஸ் மரம் எல்லா நாடுகளுக்கும் குறிப்பாக அமெரிக்க கண்டத்தில் பரவக் காரணமாயிருந்தது.
தற்போதுள்ள எஸ்தோனியா நாட்டில் உள்ள தலின் நகரமும், லாத்துவியா நாட்டில் உள்ள ரீகா நகரமும் வரலாற்று பதிவுகளின் அடிப்படையில் முதல் கிறிஸ்துமஸ் மரம் தங்கள் நகரத்தில் அமைக்கப்பட்டன என உரிமை கொண்டாடி வருகின்றன. தலின் நகரில் கி.பி. 1441ஆம் ஆண்டும், ரீகா நகரில் கி.பி.1510ஆம் ஆண்டும் இம்மரங்கள் அமைக்கப்பட்டதாகவும், இந்த இரண்டு நகரிலும் கிறிஸ்துமஸ் மரங்களை கருப்புதலைப்பாகை சகோதரர்கள் குழுமம் என்ற குழுவினர் அமைத்தார்கள் எனவும் கூறப்படுகிறது. இக்குழுமமானது திருமணமாகாத வியாபாரிகள், கப்பல் உரிமையாளர்கள் மற்றும் வெளிநாட்டினர்களை உள்ளடக்கியதாக இருந்தது.
வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் கிறிஸ்துமஸ் மரம் மற்றும் ஆளுயர சுரூபங்களை கொண்டு கிறிஸ்துமஸ் குடிலை ஏற்படுத்தும் பழக்கமானது கி.பி.1982ஆம் ஆண்டு திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. தூய பேதுரு சதுக்கத்தின் மையத்தில் கிறிஸ்துமஸ் மரமும் அதன் அடியில் கிறிஸ்துமஸ் குடிலும் அமைக்கப்படுகிறது.
இங்குள்ள குடிலில் மொத்தம் பதினேழு ஆளுயுர சுரூபங்கள் உள்ளன. இவற்றில் ஒன்பது சுரூபங்கள் கி.பி. 1842ஆம் புனித வின்சென்ட் பல்லோடியால் உரோமையில் உள்ள புனித அந்திரேயா தெல்லே வால்லே ஆலயத்திற்கு அன்பளிப்பாக தரப்பட்டவை. ஏனைய எட்டு சுரூபங்கள் காலஓட்டத்தில் பல்வேறு இடங்களிலிருந்து அன்பளிப்பாக அளிக்கப்பட்டன. கி.பி. 2006ஆம் ஆண்டு இத்தாலியின் த்ரென்தினோ மாநிலம் மற்றும் தெஸ்ஸெரோ பஞ்சாயத்தும் இணைந்து மேலும் பதிமூன்று மரத்தாலான உருவங்கள், விலங்குகள் மற்றும் அன்றாட வீட்டு உபயோகத்திற்குப் பயன்படும் பாத்திரங்களை அன்பளிப்பாக அளித்துள்ளன. இவையனைத்தும் இணைந்து இந்த கிறிஸ்துமஸ் குடிலை ஒரு வாழ்வியல் படைப்பாகவும், உயிரோட்டமுள்ள ஓவியமாகவும் உருவாக்கியுள்ளன.
இங்கு வைக்கப்படும் கிறிஸ்துமஸ் மரமானது ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு நாடுகள் மற்றும் இத்தாலியின் பல்வேறு பகுதிகளிலிருந்து அன்பளிப்பாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மரமானது இத்தாலியில் உள்ள அப்ரூஸ்ஸோ மாநிலத்தில் உள்ள 182 மக்கள் மட்டுமே வசிக்கக்கூடிய ரோசல்லோ என்கிற மலைக்கிராமத்திலிருந்து அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த மரமானது 30 மீட்டர் உயரமுள்ளதாகும். இந்த வெள்ளை ஃபிர் மரமானது லா குவாத்ரிபோலியோ மறுவாழ்வுமையத்தில் உள்ள இளம் உள்ளங்களாலும் அவர்களின் பெற்றோர்கள், மற்றும் பொரொல்லோவில் அமைந்துள்ள புனித அந்தோணியோ நலவாழ்வு மையத்தில் உள்ள முதியவர்களாலும் உருவாக்கப்பட்ட அலங்கார பொருட்களாலும், பிச்சோபெர்ராத்தா (Pணைணழகநசசயவழ), குவாத்ரி மற்றும் வில்லா சாந்தா மரியா பகுதிகளில் உள்ள பள்ளி சிறுவர், சிறுமிகளால் செய்யப்பட்ட அலங்கார பொருட்களாலும் வண்ணமயமாய் மிளிர்கிறது.
இந்த கிறிஸ்மஸ் குடில் மற்றும் மரத்தின் அழகிலும், ஒளியிலும் அமர்ந்து கிறிஸ்து பிறப்பு பாடல்களை பாடுவதும், அந்த ஏகாந்தமான அமைதியை உள்வாங்கி பிறந்திருக்கும் பாலனின் ஆசீரை பெறுவது என்பதும் ஓர் உன்னதமான அனுபவமாகும். பல்வேறு போர்களாலும், ஏற்றத் தாழ்வுகளாலும், ஏன் பிறந்தோம் என்றுகூடத் தெரியாமல் நிம்மதி இழந்துவிட்டோம் என்று மட்டும் சொல்லும் நமக்கு, ஒரு நமட்டு சிரிப்புடன் என்னை வந்து பார் என்றழைக்கும் பாலன் இயேசுவின் புன்னகை தரும் சமாதானமும், அமைதியும் என்றும் நம்மில் இருப்பதாக. வத்திக்கான் வானொலி நேயர்களுக்கும், அமைதியை விரும்பும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் கிறிஸ்மஸ் பிறப்பு பெருவிழா வாழ்த்துக்களும், செபங்களும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்