மன்னர் சார்லஸ் மற்றும் திருமதி ஜெலென்ஸ்காவுடன் ஆயர் Kenneth மன்னர் சார்லஸ் மற்றும் திருமதி ஜெலென்ஸ்காவுடன் ஆயர் Kenneth  

மன்னர் சார்லஸின் வருகை ஒற்றுமையின் அடையாளம்

ஒலேனா ஜெலென்ஸ்கி மற்றும் மன்னர் சார்லஸ் இருவரின் வருகை பிரித்தானிய ஐக்கிய அரசு மற்றும் உக்ரைனிலுள்ள தங்கள் சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு இடையே வலிமையான ஒற்றுமையின் அடையாளமாக அமைகிறது : ஆயர் Kenneth Nowakowski

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் எங்கள் பேராலயத்திற்கு வருகை தந்திருப்பது எங்களுக்குப் பெருமை அளிக்கிறது என்றும், அவர் மீண்டும் இங்கு வரும்போது, உக்ரைன்-இரஷ்ய போர் நிறைவுற்று நன்றி கூறும் நிகழ்வாக அமையவேண்டும் என்றும் இலண்டனிலுள்ள உக்ரேனிய திருக்குடும்பக் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் (Eparchy) ஆயர் Kenneth Nowakowski) அவர்கள் கூறியுள்ளார்.

நவம்பர் 30, இப்புதனன்று, உக்ரைனின் அரசுத் தலைவரின் மனைவி ஒலேனா ஜெலென்ஸ்கி மற்றும் மன்னர் சார்லஸ் இருவரையும் இலண்டனிலுள்ள உக்ரேனிய கத்தோலிக்கப் பேராலயத்தில் வரவேற்றபோது இவ்வாறு கூறிய ஆயர் Kenneth அவர்கள், இவ்விருவரின் வருகை, பிரித்தானிய ஐக்கிய அரசு மற்றும் உக்ரைனிலுள்ள தங்கள் சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு இடையே வலிமையான ஒற்றுமையின் அடையாளமாக அமைகிறது என்றும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

போர் நடைபெற்று வரும் இந்தப் பயங்கரமான நாள்களில், உக்ரைனின் அரசுத் தலைவர், அதன் பாதுகாப்பு படைவீரர்கள், மற்றும் உக்ரேனிய மக்கள் அனைவருக்காகவும் ஒவ்வொரு நாளும் இறைவேண்டல்கள் எழுப்பப்படுகின்றன என்று திருமதி ஜெலென்ஸ்காவிடம் உறுதியளித்துள்ளார் ஆயர் Kenneth.

அதனைத் தொடர்ந்து, உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்க வழிபாட்டுமுறையின் தலைவர் பேராயர் Sviatoslav Shevchuk அவர்களின் அன்பு பரிசாக நினைவு சின்னம் ஒன்று மன்னர் சார்லஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்விற்குப் பிறகு, உக்ரேனிய வரவேற்பு இல்லத்திற்குச் சென்ற மன்னர் சார்லஸ் அவர்களுக்கு ரொட்டி மற்றும் உப்பு ஆகியவற்றின் பாரம்பரிய உக்ரேனிய வரவேற்பு வழங்கப்பட்டது. பின்னர்  அவ்வில்லத்தின் ஊழியர்கள், தன்னார்வலர்கள், பயனாளிகள், தற்காலிகமாக இடம்பெயர்ந்த உக்ரேனியர்கள் மற்றும் அவர்களின் பிரித்தானிய ஆதரவாளர்களைச் சந்தித்தார். (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 December 2022, 14:41