வேளாங்கண்ணியில் சுனாமி நினைவு நாள் திருப்பலி
2004ஆண்டு டிசம்பர் 26ம் தேதி தமிழக மக்களை பெருந்துயரத்தில் ஆழ்த்திய சுனாமி ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, டிசம்பர் 26, இத்திங்களன்று வேளாங்கண்ணி திருத்தலத்தில் அதன் 18ஆம் ஆண்டு நினைவு சிறப்புத் திருப்பலி, நிறைவேற்றப்பட்டது.
வேளாங்கண்ணி திருத்தல அதிபர் அருள்பணி சி.இருதயராஜ் அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றிய திருப்பலிக்குப்பின், ஏராளமானோர் கடற்கரையிலிருந்து மெழுகுதிரிகளை ஏந்திக்கொண்டு அமைதியாக, அங்குள்ள நினைவுத் தூண்வரை வந்து மும்மதப் பிராத்தனையில் பங்குபெற்றனர். இவ்வழிபாட்டில் திருவிவிவலியம், பகவத் கீதை, திருக்குரான் ஆகிய நூல்களிலிருந்து ஒரு பகுதியை அந்தந்த மதத்தினர் வாசித்தனர்.
மேலும், 18-வது ஆண்டு நினைவு நாளான இத்திங்களன்று குமரி கடற்கரை கிராமங்களில் நிறைவேற்றப்பட்ட நினைவு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்று, அமைதி ஊர்வலமும் நடத்தினர். சுனாமி நினைவுத் தூண்களில் மலர் தூவி அஞ்சலியும் செலுத்தினர்.
கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையில், 14 நாடுகளுக்குமேல் பாதிக்கப்பட்டன. அதில் உலகளவில் 2.50 இலட்சத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோரை காணவில்லை. நாகை மாவட்டத்தில் மட்டும் இறந்த 6065 பேர் உட்பட தமிழகத்தில் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். (Agencies)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்