வெள்ளை மாளிகையில் உக்ரைன் அரசுத்தலைவர் செலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் உக்ரைன் அரசுத்தலைவர் செலன்ஸ்கி  

கிறிஸ்மஸ் இடைக்கால போர்நிறுத்தத்திற்கு மதத் தலைவர்கள்

1914ஆம் ஆண்டில் முதல் உலகப் போரின்போது கடைப்பிடிக்கப்பட்ட கிறிஸ்மஸ் இடைக்காலப் போர்நிறுத்த உணர்வில் உக்ரைனிலும் அதுபோன்று இடம்பெறவேண்டும் – பல்சமயத் தலைவர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான்

உக்ரைன் அரசுத்தலைவர் Volodymyr Zelenskyy அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இவ்வேளையில், அந்நாட்டின் கத்தோலிக்கர் உட்பட ஏறத்தாழ ஆயிரம் பல்சமயப் பிரதிநிதிகள், உக்ரைனில் கிறிஸ்மஸ் கால போர்நிறுத்தத்திற்கு அழைப்புவிடுக்கும் மனு ஒன்றில் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஒப்புரவு தோழமை அமைப்பு, CODEPINK எனப்படும் தேசிய வயதுமுதிர்ந்தோர் அவை, உக்ரைனில் அமைதிக்காக உழைக்கும் கூட்டமைப்பு ஆகியவற்றின் முன்னெடுப்பால் தயாரிக்கப்பட்ட இம்மனுவில் பல மதங்களின் தலைவர்களும் பிரதிநிதிகளும் கையெழுத்திட்டுள்ளனர்.

அம்மனுவில், உக்ரைனில் இடம்பெறும் போரை முடிவுக்குக் கொணர்வதற்கு, உரையாடல் வழியாக ஒரு தீர்வைக் காணுமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் ஜோ பைடன் அவர்களின் நிர்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளனர், அத்தலைவர்கள். 

அமெரிக்க ஐக்கிய நாட்டில் பல்வேறு மதப் பின்புலங்களைக்கொண்ட தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வெளியிட்டுள்ள இம்மனுவில், இரஷ்யாவால் உக்ரைனில் நடத்தப்பட்டுவரும் போருக்கு இராணுவத்தால் தீர்வு காண முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.

இப்பூமிக்கோளத்தின் வாழ்வு அனைத்தின் புனிதத்துவத்தில் நம்பிக்கை வைத்துள்ள, மதநம்பிக்கை மற்றும், மனச்சான்றின் மக்களாகிய நாங்கள், 1914ஆம் ஆண்டில் முதல் உலகப் போரின்போது கடைப்பிடிக்கப்பட்ட கிறிஸ்மஸ் இடைக்காலப் போர்நிறுத்த உணர்வில் உக்ரைனிலும் அதுபோன்று இடம்பெறவேண்டும் என்று அழைப்புவிடுக்கிறோம் என்று அம்மனுவில் அத்தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், உக்ரைனில் அமைதி நிலவத் தொடர்ந்து அழைப்புவிடுத்துவரும்வேளை, உக்ரைன் போர், அணுஆயுதப் போரின் விளைவுகளைக் கொணர்வதற்குமுன் பேச்சுவார்த்தை வழியாக போர்நிறுத்தத்தைக் கொண்டுவர அமெரிக்க அரசு முயற்சிக்குமாறும் அத்தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.  அணுஆயுதப் போர் மூண்டால், அது உலகின் அனைத்து சூழலியல் அமைப்புகள் மற்றும் கடவுளின் படைப்பனைத்தையும் அழித்துவிடும் எனவும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 21, இப்புதனன்று வெள்ளை மாளிகையில், உக்ரைன் அரசுத்தலைவர் செலன்ஸ்கி அவர்களும், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் பைடன் அவர்களும் இணைந்து செய்தியாளர் சந்திப்பை நடத்தியபோது உக்ரைனில் 300வது நாளாக போர் நடந்துவந்தது குறிப்பிடத்தக்கது (CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 December 2022, 12:44