விவிலியத் தேடல்:திருப்பாடல் 36-1 வேண்டும் நமக்கு இறையச்சம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘நற்செயலே நன்மை தரும்’! என்ற தலைப்பில் 35-வது திருப்பாடலில் 23 முதல் 26 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானித்து அதனை நிறைவிற்குக் கொணர்ந்தோம். இப்புத்தாண்டின் முதல் வார விவிலியத்தேடலில் 36-வது திருப்பாடல் குறித்துத் தியானிப்போம். 'மானிடரின் தீய குணம்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இத்திருப்படல் மொத்தம் 12 இறைவசனங்களைக் கொண்டுள்ளது. தாவீது அரசர் இத்திருப்பாடலை எப்போது,எம்மாதிரியான சூழலில் எழுதினார் என்பது தெரியவில்லை என்றும் ஒருவேளை அவர் சவுலால் அல்லது அப்சலோமால் தாக்கப்பட்டபோது இதனை அவர் எழுதியிருக்கலாம் என்றும் விவிலிய அறிஞர்கள் கருதுகின்றனர். இத்திருப்பாடல் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. முதல் பகுதியில் தாவீது அரசர் தனது எதிரிகளின் தீய எண்ணங்களையும், நடவடிக்கைகளையும், சதித்திட்டங்களையும் எடுத்துரைக்கின்றார். இரண்டாவது பகுதியில், கடவுளின் என்றுமுள்ள அன்பு, நீதி, வாக்குப்பிறழாமை, பரிவிரக்கம் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகின்றார். இறுதியாக, தீயவர்களின் வலையில் சிக்கியுள்ள தன்னை காக்குமாறு விண்ணப்பித்து இத்திருப்பாடலை நிறைவு செய்கின்றார். இப்போது 1 முதல் 4 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்த நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம். அதற்கு முன்னதாக, வாழ்வு தரும் அவ்வார்த்தைகளை இப்போது வாசிப்போம்.
பொல்லாரின் உள்ளத்தில் தீமையின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது; அவர்களின் மனக்கண்களில் இறையச்சம் இல்லை. ஏனெனில் அவர்கள், குற்றம் வெளிப்பட்டு வெறுப்புக்கு உள்ளாகப் போவதில்லை என, இறுமாந்து தமக்குத்தாமே பெருமை பாராட்டிக்கொள்கின்றனர். அவர்கள் வாயின் சொற்கள் தீமையும் வஞ்சகமும் நிறைந்தவை; நல்லுணர்வோடு நற்செயல் ஆற்றுவதை அவர்கள் அடியோடு விட்டுவிட்டனர். படுக்கையில் கிடக்கையில் அவர்கள் சதித்திட்டங்களைத் தீட்டுகின்றனர், தகாத வழியை உறுதியாகப் பற்றிக் கொள்கின்றனர்; தீமையைப் புறம்பே தள்ளுவதில்லை (வசனம் 1-4).
மேற்கண்ட இந்த நான்கு இறைவார்த்தைகளிலும் இறையச்சமின்மைதான் அனைத்துத் தீமைகளுக்கும் காரணம் என்பதை தாவீது ஒற்றைவரிச் செய்தியாக நமக்குத் தருகின்றார். இன்றையச் சூழலில் உலக மக்களைப் பெரிதும் கவலைக்குள்ளாகி இருப்பது உக்ரைன்மீது இரஷ்யா நிகழ்த்திவரும் கொடுமையான போர்தான். இப்போருக்குக் காரணமான இரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் தீமையின் மொத்த உருவமாகப் பார்க்கப்படுகிறார். இது ‘மதியற்ற போர்’ என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் பலமுறை கண்டித்துள்ளார். உக்ரைன் மீதான இரஷ்ய தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா நிறுவனம், கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் டிசம்பர் 26-ஆம் தேதி வரை உக்ரைனுக்கு எதிரான இரஷ்யாவின் போரில் குறைந்தது 6,884 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 15 இலட்சத்திற்கும் அதிகமானோர் வெவ்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாட்டு மக்களுக்கு வழங்கிய புத்தாண்டுச் செய்தியில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அவர்கள், “இரஷ்யா சாத்தானை பின் தொடர்கிறது. புதின், நீங்கள் நடத்தும் போர் உக்ரைன் நேட்டோவுடன் இணைவதற்கு எதிரானது அல்ல. நீங்கள் பொய் கூறுகிறீர்கள். இது ஏதோ வரலாற்றுக்காக அல்ல. ஒரு நபர் (புதின்) தனது வாழ்நாளின் இறுதி வரை அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் போர் நடத்தப்படுகிறது. இரஷ்யாவின் குடிமக்களைப் பற்றி புதினுக்குக் கவலை இல்லை. இரஷ்ய அதிபர் படைகளுக்குப் பின்னாலும், ஏவுகணைகளுக்குப் பின்னாலும், மாளிகைகளுக்குப் பின்னாலும் மக்களுக்குப் பின்னாலும் ஒளிந்து கொண்டிருக்கிறார். இரஷ்ய மக்களே அவர் உங்கள் பின்னால் ஒளிந்துகொண்டு உங்கள் நாட்டையும் உங்கள் எதிர்காலத்தையும் எரித்து நாசப்படுத்துகிறார். இந்தப் பயங்கரவாதத்தை யாரும் எப்போதும் மன்னிக்க மாட்டார்கள்” என்று கூறியுள்ளார். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இணைய உக்ரைன் முடிவெடுத்தது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளுடன் உக்ரைன் நெருக்கம் காட்டியது. இந்த நடவடிக்கைகளால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி உக்ரைன் மீது இரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஓர் மதியற்ற போரைத் தொடங்கி நடத்தி வருகிறது என்பதை நாம் அறிவோம்.
நாம் தியானிக்கும் இத்திருப்பாடலின் முதல் 4 இறைவசனங்களில் தனது எதிரிகளின் மனநிலையைப் படம்பிடித்துக்காட்டுகிறார் தாவீது அரசர். மேலும் அவர்கள் வாயில் உண்மை இல்லை; அவர்கள் உள்ளம் அழிவை உண்டாக்கும்; அவர்கள் தொண்டை திறந்த பிணக்குழி; அவர்கள் நா வஞ்சகம் பேசும். கடவுளே, அவர்களின் குற்றங்களுக்குரிய தண்டனையை அவர்களுக்கு அளியும்; அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளாலேயே வீழ்ச்சியுறட்டும்; அவர்களுடைய ஏராளமான தீச்செயல்களை முன்னிட்டு, அவர்களைப் புறம்பே தள்ளிவிடும். ஏனெனில், அவர்கள் உம்மை எதிர்த்துள்ளார்கள் (திபா 5:9-10) என்றும் வேறுசில திருப்பாடல்களிலும் தாவீது அரசர் ஆண்டவரிடம் முறையிடுகின்றார்.
மேலும், பொல்லாரின் உள்ளத்தில் தீமையின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது; அவர்களின் மனக்கண்களில் இறையச்சம் இல்லை என்று தாவீது அரசர் கூறும் வார்த்தைகள் நமது சிந்தனையைத் தூண்டுகின்றன. காரணம், இன்றைய உலகில் கட்டவிழ்த்துவிடப்படும் அனைத்துத் தீமையான செயல்களுக்கும் அடிப்படைக் காரணம் இறையச்சம் இல்லாமல் இருப்பதே. அதனால்தான், கிராமப்புறங்களில் பெரும் தவறுகள் செய்துவிட்டு குற்றவுணர்வின்றி நிற்போரைப் பார்த்து, "ஏண்டா, உனக்கெல்லாம் கொஞ்சம்கூட தெய்வ பயமே கிடையாதா?” என்று பெரியவர்கள் கேட்பதுண்டு. இன்றும்கூட நம்மைச் சுற்றி நிகழும் பல்வேறு கொடுஞ்செயல்களைப் பார்க்கும்போது, “இதைச் செய்வதற்கு இவர்களுக்கு எப்படி மனது வருகின்றது. இவர்களுக்கெல்லாம் கொஞ்சமும் மனசாட்சியே இல்லையா” என்றும் கூறுகின்றோம். ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்; ஞானத்தையும் நற்பயிற்சியையும் மூடரே அவமதிப்பர் (நீமொ 1:7) என்கிறது நீதி மொழிகள் நூல். மேலும் இதயமே அனைத்திலும் வஞ்சகம் மிக்கது; அதனை நலமாக்க முடியாது. அதனை யார்தான் புரிந்துகொள்வர்? (எரே19:9) என்கிறார் ஆண்டவர். இன்று பெரும்பாலானோர், மனசாட்சியைத் தொலைத்துவிட்டு மனிதத்தன்மையற்ற நிலையில் மாபாதகச் செயல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
டெல்லியில் சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இப்புத்தாண்டின் முதல் நாளான இஞ்ஞாயிறன்று, அதிகாலை 3 மணியளவில் ஸ்கூட்டியில் சென்ற அஞ்சலி சிங் என்ற 20 வயது நிரம்பிய இளம்பெண் மீது கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதுபற்றி அதிகாலை 3.24 மணியளவில் கஞ்சவாலா காவல் நிலையத்திற்கு அவசர தொலைபேசி அழைப்பு சென்றுள்ளது. அதன்பின்னர், அதிகாலை 4.11 மணியளவில் இளம்பெண்ணின் உடல் நிர்வாண கோலத்தில் சாலையில் கிடக்கிறது என மற்றொரு அவசர தொலைபேசி அழைப்பு சென்றுள்ளது. இதனையடுத்து, ரோகிணி மாவட்ட காவல்துறையின் குற்ற பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று, உடலை கைப்பற்றி மங்கோல்புரியில் உள்ள எஸ்.ஜி.எம். மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். உடலை சோதித்த மருத்துவர்கள் இளம்பெண் உயிரிழந்துவிட்டார் என தெரிவித்தனர். இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட ஐந்து பெரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்ற இவர்கள், குடிபோதையில் காரில் சென்றபோது ஸ்கூட்டியில் சென்ற அவ்விளம்பெண் மீது மோதி சில கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவத்திற்குப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், மத்திய உள்துறை அமைச்சகமும் இச்சம்பவம் பற்றி விரிவான அறிக்கையை அளிக்கும்படி டெல்லி காவல் துறை ஆணையரிடம் கேட்டுக்கொண்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லியில் நிகழ்ந்த நிர்பயா கொலை நாட்டையே உலுக்கிய நிலையில் மேலும் அதே தலைநகரில் இப்படிப்பட்ட கொடூரம் நடந்துள்ளது தீமையின் அகோரத்தை உலகிற்குக் காட்டியுள்ளது.
வாயினுள் செல்வது அனைத்தும் வயிற்றினூடே சென்று கழிப்பிடத்தில் வெளியேற்றப்படும் எனத் தெரியாதா? வாயினின்று வெளிவருபவை உள்ளத்திலிருந்து வருகின்றன. அவையே மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன. ஏனெனில் கொலை, விபசாரம், பரத்தைமை, களவு, பொய்ச்சான்று பழிப்புரை ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் உள்ளத்திலிருந்து வெளிவருகின்றன. இவையே மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன (மத் 15:17-20) என்று இயேசு கூறும் வார்த்தைகளில், மனிதரின் உள்ளத்திலிருந்து வெளியே வரும் தீய எண்ணங்கள்தாம் உலகத்தில் எழும் ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்கும் காரணங்களாக அமைகின்றன என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. ஆகவே, கடவுளின் உருவிலும் சாயலிலும் உருவாக்கப்பட்டுள்ள நாம், தீயவற்றை விலக்கி நல்லவற்றைப் பற்றிக்கொள்ள வேண்டுமெனில் நாம் இறையச்சம் கொண்டிருக்கவேண்டும் என்பதை உணர்வோம். தாவீது அரசரிடம் விளங்கிய இறையச்சமே அவரின் அத்துணை நற்குணங்களுக்கும் காரணமாக அமைந்ததுடன், இறைவனின் துணையில் அனைத்துத் தீமைகளையும் வெல்லவும் உதவியது. எனவே, இறையச்சம் கொண்டு இறைவனின் துணையில் இன்னல்கள் அகற்றி இன்பமுடன் வாழ்வோம். அதற்கான அருள்வரங்களை இந்நாளில் இறைவனிடம் இறைஞ்சுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்