இறைவனே என்றுமுள்ள ஒளி இறைவனே என்றுமுள்ள ஒளி 

விவிலியத் தேடல்: திருப்பாடல் 36-3 ‘இறைவனே என்றுமுள்ள ஒளி!’

ஒளியாகிய கடவுளிடமிருந்து நாம் ஒளி பெறுவதால், அவ்வொளியை பிறருக்கு ஆற்றும் நற்செயல்கள் வழியாக ஒளிரச் செய்வோம்.
திருப்பாடல் 36-3

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'இறைவனின் பேரின்ப நீரோடை!' என்ற தலைப்பில் 36-வது திருப்பாடலில் 05 முதல் 08 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 09 முதல் 12 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவுக்குக் கொண்டு வருவோம். இப்போது இறையொளியில் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம். ஏனெனில், வாழ்வு தரும் ஊற்று உம்மிடமே உள்ளது; உமது ஒளியால் யாமும் ஒளி பெறுகின்றோம். உம்மை அறிந்தோர்க்கு உமது பேரன்பையும், நேரிய உள்ளத்தோர்க்கு உமது நீதியையும் தொடர்ந்து வழங்கியருளும்! செருக்குற்றோரின் கால் என்னை நசுக்க விடாதேயும்! பொல்லாரின் கை என்னைப் பிடிக்க விடாதேயும்! தீங்கிழைப்போர் அதோ அங்கே குப்புற வீழ்ந்து கிடக்கின்றனர், அவர்கள் நசுக்கப்பட்டனர்; அவர்களால் எழவே இயலாது. (வசனம் 9-12)

ஊரின் ஒதுக்குபுறமாக காட்டை ஒட்டி ஒரு ஆசிரமம் இருந்தது. மக்கள் வசிக்கும் இடத்திலிருந்து சற்றுத் தொலைவிலிருந்த அந்த ஆசிரமத்தில் ஒரே ஒரு குரு மட்டுமே தங்கியிருந்தார். அந்தக் குருவைச் சந்திக்க பகல் நேரத்தில் ஏராளமான மக்கள் வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவரும் தன்னிடம் வரும் மக்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைப்பார். ஒரு நாள் குருவைக் காண்பதற்காக அவரது முன்னாள் சீடர் ஒருவர் வந்தார். அன்று முழுவதும் அவர் குருவின் அருகிலேயே இருந்து, அவரதுப் படிப்பினைகளைக் கேட்டார். இதனால் இருவருக்கும் நேரம் போனதே தெரியவில்லை. மாலை நேரம் முடிந்து இருள் சூழத் தொடங்கிவிட்டது. சீடர் அங்கிருந்து புறப்படத் தயாரானார்.. குரு அவரைத் தடுத்து, “இரவு நேரமாகி விட்டது. நீ இங்கேயே தங்கிவிட்டு, நாளைக் காலையில் புறப்பட்டுச் செல்’ என்றார். ஆனால் சீடரோ  மறுத்து, "இல்லை குருவே! எனக்கு ஒரு முக்கியமான பணி இருக்கிறது. அதனால் நான் இன்று இரவே இங்கிருந்து போயாக வேண்டும்" என்றார். அதற்கு மேல் அவரைத் தடுத்து நிறுத்த விரும்பாத குரு, "நல்லது, பத்திரமாகப் போய் வா’"என்று விடை கொடுத்தார். ஆசிரமத்தின் வாசல் வரை வந்த சீடர் தயங்கியபடி நின்றார். வெளியே இருள் பரவிக் கிடந்தது. ஆசிரமத்தின் வெளிச்சத்தைத் தவிர, வேறு எங்கும் ஒரு துளி கூட வெளிச்சம் இல்லை. அப்போது சீடர்  தடுமாறுவதைக் கவனித்த குரு, உள்ளே போய் ஒரு விளக்கை கொண்டு வந்து சீடரின் கையில் கொடுத்து, "புறப்படு" என்றார். தன்னுடைய மனநிலையை சரியாகக் கணித்துவிட்ட குருவைக் கண்டு பெருமிதம் கொண்ட சீடர், அவருக்கு நன்றி கூறிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றார்.

அவர்  சிறிது தூரம் சென்றதுமே, "நில்!" என்றார் குரு. சீடர் நின்றதும், அவரருகே வந்த குரு, அவர் கையில் இருந்த விளக்கின் தீபத்தை வாயால் ஊதி அணைத்துவிட்டு, “இப்போது புறப்படு” என்றார். சீடர் திகைத்துப் போய் குருவைப் பார்த்தார். அவரதுப் பார்வையில் இருந்த கேள்வியைப் புரிந்து கொண்ட குரு அவரிடம், “எப்போதும் இரவல் வெளிச்சம் உனக்கு நெடுந்தூரம் துணைக்கு வராது. உன் விளக்கு உனக்குள்ளேயே இருக்கிறது. அது எரியாதவரை, இந்த விளக்கால் எந்தப் பயனும் இல்லை” என்று விளக்கினார். அதாவது, உன் உள்ளத்திலுள்ள கடவுள் என்னும் ஒளியை நீ உணரும்போது உனக்கு வெளியே வெளிச்சம் தேவைப்படாது. உன் கையில் விளக்குத் தேவை என்றால், உன்னில் உறைந்துள்ள கடவுளை நீ அறியவில்லை என்று பொருள். வாழ்க்கை முழுதும் இதே இருள், இதே பாதை இருக்கத்தான் செய்யும். ஆனால் உன்னிலுள்ள கடவுள் என்னும் ஓளியின் துணைகொண்டு மட்டுமே உன் பயணத்தைத் தொடர முடியும்" என்றார். சீடர் இப்போது மன உறுதியுடன் அங்கிருந்து நடக்கத் தொடங்கினார். கடவுளைத் துணையாகக் கொண்டவர்கள் எப்போதும் எந்த விளக்கையும் எதிர்பார்ப்பதில்லை. விளக்குடன் முன்னேறியவர்களை விட, உள்ளத்தில் கடவுள் என்ற ஒளியின் துணைகொண்டு முன்னேறியவர்கள்தாம் அதிகமான அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள். ஒவ்வொருவருக்குள்ளும் இறைவனே என்றுமுள்ள ஒளியாக இருக்கின்றார். இறைவன் உறைந்துள்ள அந்த அகமே நமது விளக்கு. அதுதான் நமக்கு இறுதிவரை ஒளி தந்து வழி காட்டும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

நாம் தியானிக்கும் இந்த இறைவார்த்தைகளில், ‘உமது ஒளியால் யாமும் ஒளி பெறுகின்றோம்’ என்று தாவீது கூறும் வார்த்தை நமது சிந்தனைக்கு விருந்தாக அமைகின்றது. தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது “ஒளி தோன்றுக!” என்று கூறியதிலிருந்து ஒளி எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றது. என்பதை நாம்  அறிந்திருக்கின்றோம். இருளை அகற்றும் ஒளியாக இறைவன் நம் வாழ்வில் நம்மோடு பயணிக்கிறார் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது. "இருளின் போர்வையின் மேல் சிறு சிறு ஒளியாய் எண்ணிலடங்கா விண்மீன்களைப் போல, என் வாழ்வின் இருளைப் போக்கும் சிறு சிறு இன்பம் நீ. ஒளி சிந்தும் வெண்ணிலவைப் போல் ஒருநாள் நான் வாழ்வேன்” என்கின்றான் ஒரு கவிஞன். நானிலமெங்கும் நாளும் நற்செயல்கள் செய்பவர்கள் அனைவரின் வாழ்விலும் இறைவன் என்றும் ஒளியாகத் திகழ்கின்றார். இதன் காரணமாகவே தாவீது இறைவனை நோக்கி ‘உமது ஒளியால் யாமும் ஒளி பெறுகின்றோம்’ என்று கூறுகின்றார். மேலும், “ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு  அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்?” (திபா 27:1) என்றும், “என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே!” (திபா 119:105) என்றும், வேறு சில திருப்பாடல்களிலும் எடுத்துரைக்கின்றார். நமதாண்டவர் இயேசுவும், “உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்”  (யோவா 8:12) என்று எடுத்துக்காட்டுவதுடன், நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே, உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். (மத் 5:14-16) என்று கூறி, தாவீதின் வழியில் நம்மையும் ஒளியின் மக்களாக வாழ்வதற்கு அழைப்பு விடுகின்றார். தாவீது அரசர் தனது எதிரிகளால் இருளின் பிடியில் தள்ளப்படுவதற்கான எண்ணற்றச் சூழல்கள் உருவாக்கப்பட்டபோதிலும் என்றுமுள்ள ஒளியான இறைவனின் துணையை விட்டு அவர் விலகிப்போய்விடவில்லை. அனைத்து இருளான சூழல்களையும் அவர் வென்று காட்டினார்.

காரைக்குடியை சேர்ந்த 73 வயது நிரம்பிய பொருளாதார பட்டதாரியான செல்வராஜ் என்பவர், கடந்த 47 ஆண்டுகளாகவே, ஏழை சிறுவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார். கடந்த 2006-ஆம் ஆண்டிற்குப் பின் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்படவே, எந்த வேலையும் செய்ய முடியாததால் பிச்சை எடுத்து அதன் வழியாக வரும் பணத்தில் குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். போலியோ நோயால் பாதிக்கப்பட்டு நடக்கவே சிரமப்படும் செல்வராஜ், தான் குடியிருக்கும் கருணாநிதி நகர் பகுதியில் வாழும் ஏழை எளிய குழந்தைகள் 26 பேருக்குத் தற்போது கல்வி கற்பதற்கு உதவி செய்து வருகிறார். குடும்ப சூழ்நிலை காரணமாகக் குழந்தைகள் கல்வி கற்க வாய்ப்பில்லாமல் போவதைப் பார்த்த செல்வராஜ், ஒரு பொருளாதார பட்டதாரியாகக் கல்வியின் அவசியத்தை உணர்ந்த நிலையில் இந்நற்செயலைச் செய்து வருகிறார். 1968-ஆம் ஆண்டிலிருந்தே கல்விக்காகப் பல்வேறு உதவிகளைச் செய்து வரும் இவர், பேருந்துகளில் தினமும் ஏறி இறங்கி பிச்சை எடுக்கிறார். பேருந்துக்குள் ஏறவே சிரமப்படும் இவர், அங்கு இருக்கும் பயணிகளிடம், தான் எதற்காகசப் பிச்சை எடுக்கிறேன் என்பதை விளக்கிய பின்னரே, பிச்சை கேட்கிறார். இதனால், மனமிறங்கி சில பயணிகள் உதவி செய்வதால் ஒரு நாளைக்கு நானூறு ரூபாய் வரை சமப்பதிக்கும் இவர், அதில் தன் செலவு போக மீதமிருக்கும் பணம் முழுவதையும், வசதியில்லாதக் குழந்தைகள் எழுதுப் பொருள்கள் மற்றும் புத்தகங்கள் வாங்க செலவு செய்து வருகிறார்.

இருள்படர்ந்துள்ள மனிதர் வாழ்வில் ஒளியேற்றுவது என்பது பெரிய அளவில் காரியங்களைச் செய்யவேண்டும் என்பது பொருளல்ல, மாறாக, சிறிய அளவில் உதவுவதும் ஒளியேற்றுவதுதான் என்பதை நமது மனத்தில் நிறுத்துவோம். துயருறும் மனிதர் வாழ்வில் நாமும் வழிகாட்டும் ஒளிச்சுடர்களாய் ஒளிர்ந்திடுவோம். ஒளியாகிய கடவுளிடமிருந்து நாம் ஒளி பெறுவதால், அவ்வொளியை பிறருக்கு ஆற்றும் நற்செயல்கள் வழியாக ஒளிரச் செய்வோம். அதற்கான அருள்வரங்களை இந்நாளில் இறைவனிடம் இறைஞ்சுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 January 2023, 13:39