ஆபிரகாமை சந்திக்க வந்த மூவர் ஆபிரகாமை சந்திக்க வந்த மூவர் 

தடம் தந்த தகைமை – இறைவாக்குறுதியை நம்பாமல் சிரித்தவர்

கடவுளால் ஆகாதது உண்டா? பின் ஏன் சாரா சந்தேகப்பட்டு சிரிக்கிறாள், என்று கடவுள் ஆபிரகாமிடம் கேட்டார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மம்ரே என்னுமிடத்தில் தேவதாரு மரங்களின் அருகே கூடாரம் அமைத்து அதன் வாசலருகே ஆபிரகாம் அமர்ந்திருக்கையில், திடீரென மூன்று மனிதர்கள் அவருக்கு முன்னால் சற்று தொலைவில் வந்து நின்றார்கள். விருந்தோம்பலில் சிறந்தவரான ஆபிரகாம் அவர்களைக் கண்டவுடன் ஓடோடிச் சென்று அவர்களுடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கி அவர்களை உபசரித்தார். அவர்கள் யார் என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

ஆபிரகாம் கூடாரத்தினுள் சென்று தன் மனைவி சாராவிடம் அப்பங்கள் தயாராக்கச் சொல்லிவிட்டு, மந்தைக்குச் சென்று கொழுத்த கன்று ஒன்றை அடித்து சமைத்து அவர்களுக்குப் பரிமாறினார்.

ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, ‘உன் மனைவி சாரா எங்கே?’ என்று கேட்டுவிட்டு, ‘நான் மீண்டும் உன்னைச் சந்திக்க இளவேனிற்காலத்தில் வருவேன் அப்போது அவளுக்கு ஒரு மகன் இருப்பான்’ என்றார்.

கூடாரத்துக்குள் இருந்த சாராவின் காதுகளில் இந்த வார்த்தைகள் விழுந்ததும்,  

‘இது நல்ல கதையாக இருக்கிறதே ! நான் சாவை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு கிழவி, ஆபிரகாம் உடல் தளர்ந்து போன ஒரு கிழவர். எங்களுக்கா குழந்தை? எங்கள் உடல் அந்த நிலையை எல்லாம் எப்போதோ கடந்து விட்டதே’ என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டுச் சிரித்தார்.

கடவுள் ஆபிரகாமிடம், ’சாரா கடவுளின் வார்த்தைகளை நம்பாமல் கூடாரத்தில் சிரித்துக் கொண்டிருக்கிறாள். கடவுளால் ஆகாதது உண்டா? பின் ஏன் சாரா சந்தேகப்பட்டு சிரிக்கிறாள்’ என்று கேட்டார்.

அதைக் கேட்ட சாரா நடுங்கினார். பயம் வந்து அவரைப் பிடித்துக் கொண்டது. ‘ஐயோ… நான் சிரிக்கவே இல்லை… ‘ என்று மறுத்தார். “இல்லை, நீ சிரித்தாய்” என்று கடவுள் சொல்ல சாரா மெளனமானார்.

கடவுள் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றினார். சாரா கருத்தரித்து ஒரு மகனைப் பெற்றெடுக்க, அவனுக்கு ஈசாக் என்று பெயரிட்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 January 2023, 17:57