கோலியாத்தின் முன் துணிவுடன் நிற்கும் தாவீது கோலியாத்தின் முன் துணிவுடன் நிற்கும் தாவீது 

தடம் தந்த தகைமை – கடவுள் மீது நம்பிக்கை கொண்ட தாவீது

என்னைச் சிங்கத்தின் கைக்கும், கரடியின் கைக்கும் தப்புவித்த ஆண்டவர் இந்தப் பெலிஸ்தியனின் கைக்கும் தப்புவிப்பார் என்றார் தாவீது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

பெலிஸ்தியருக்கு எதிராகப் போரிட முகாமிட்டிருந்த இஸ்ரயேல் வீரர்களூடன் தாவீதின் சகோதர்களும் தங்கியிருந்தனர். அவர்களுக்கு உணவு வழங்க, தாவீது முகாமிற்குச் சென்றார். பெலிஸ்தியரின் ஆணவப் பேச்சையும் அதைக்குறித்த இஸ்ரயேலரின் அச்சத்தையும் கண்டார். “இஸ்ரயேலை இழிவுபடுத்தவே கோலியாத் வந்துள்ளான். இவனைக் கொல்பவனுக்கு அரசர் அதிக செல்வத்தைப் பரிசாக வழங்கித் தம் மகளையும் திருமணம் செய்து கொடுப்பார். அத்துடன் அவன் தந்தை வீட்டாருக்கு வரிவிலக்குச் செய்வார்” என்று இஸ்ரயேலர் தங்களுக்குள் பேசிக் கொண்டதையும் தாவீது கேட்டார். தாவீதைப் பார்த்த அவருடைய மூத்த சகோதரன் எலியாபு, கோபத்துடன்  “நீ ஏன் இங்கு வந்தாய்? சின்னப்பையன் நீ போரை வேடிக்கைப் பார்க்கவா  வந்தாய் என்றான்.

தாவீது மறுமொழியாக யாரும் கோலியாத்தைப் பார்த்துப் பயப்பட வேண்டாம். கடவுள் மேல் ஆழ்ந்த நம்பிக்கை வைத்து நானே அவனோடு போர் செய்யப் போகிறேன் என்றார். “அங்கிருந்தவர்கள், இந்தக் கொடியவனை எதிர்த்துப் போரிட உன்னால் முடியாது. நீயோ இளைஞன். ஆனால், அவனோ தன் இளம் வயது முதல் போரில் பயிற்சியுள்ளவன்” என்றனர். தாவீது அவர்களிடம் “நான் என் தந்தையின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது, சிங்கமோ அல்லது கரடியோ மந்தையில் புகுந்து ஆட்டைக் கவ்விக் கொண்டு ஓடினால், பின் தொடர்ந்து ஓடி, அதை அடித்து, அதன் வாயினின்று ஆட்டை விடுவிப்பேன். அது என் மீது பாய்ந்தால் அதன் தாடியைப் பிடித்து நன்றாக அடித்துக் கொல்வேன். நான் சிங்கங்களையும் கரடிகளையும் இவ்வாறு கொன்றிருக்கிறேன். வாழும் கடவுளை இழிவுபடுத்தியுள்ள இப்பெலிஸ்தியனும் எனக்கு அத்தகைய மிருகங்களுள் ஒன்றைப் போல் தான் என்றார். மேலும் என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த ஆண்டவர் இந்தப் பெலிஸ்தியனின் கைக்கும் தப்புவிப்பார்” என்றார். வயதில் சிறியவராக இருந்த போதே கடவுள் மேல் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டவராக, அதைத் தன் செயல்களிலும் வார்த்தைகளிலும் வெளிப்படுத்துபவராக தாவீது விளங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 January 2023, 13:35