தடம் தந்த தகைமை - சோதோமின் தீச்செயல்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
மாலை வேளையில் ஆண்டவரின் தூதர் இருவர் சோதோம் என்னும் நகருக்கு வந்தனர். அப்பொழுது நகரின் நுழைவாயிலில் லோத்து உட்கார்ந்திருந்தார். அவர் அவர்களைக் கண்டவுடன் எழுந்து சந்திக்கச் சென்று தரைமட்டும் தாழ்ந்து அவர்களை வணங்கினார். அவரின் வீட்டுக்கு அவர்களை வரவேற்று உணவளித்து உறங்கச் செல்லும்போது, சோதோம் நகரின் மக்களுள் இளைஞர் முதல் கிழவர் வரை எல்லா ஆண்களும் அவ்வீட்டைச் சூழ்ந்து கொண்டனர். பிறகு, லோத்தைக் கூப்பிட்டு, “இன்று இரவு உன்னிடம் வந்த ஆடவர் எங்கே? நாங்கள் அவர்களோடு உறவு கொள்ளுமாறு அவர்களை எங்களிடம் கொண்டு வா” என்றனர். பிறகு, லோத்தைக் கடுமையாய்த் தாக்கிக் கதவை உடைக்க நெருங்கிச் சென்றனர். அவ்வேளையில் அந்த ஆடவர் தம் கைகளை நீட்டி லோத்தைப் பிடித்து வீட்டுக்குள் இழுத்துக் கதவைப் பூட்டிக் கொண்டனர். கதவருகே நின்று கொண்டிருந்த சிறியோர், பெரியோர்களாகிய அம்மனிதர்களை அவர்கள் குருடராக்கினர். அவர்களால் கதவைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலும், அந்த மனிதர்கள் லோத்தை நோக்கி, இங்கே உன்னைச் சார்ந்த வேறு யாரேனும் இந்நகரில் இருந்தால், அவர்களை இவ்விடத்திலிருந்து உன்னுடன் அழைத்துக் கொண்டு போய்விடு. இந்த இடத்தின் மக்களுக்கு எதிராகப் பெருங்கண்டனக்குரல் ஆண்டவர் திருமுன் எழுந்துள்ளதால், நாங்கள் இந்த இடத்தை அழிக்கும்படி எங்களை அவர் அனுப்பியுள்ளார் என்றனர். உடனே லோத்து வெளியே போய்த் தம் புதல்வியருக்கு மண ஒப்பந்தமாகியிருந்த மருமக்களோடு பேசி, நீங்கள் எழுந்து இவ்விடத்தை விட்டுப் புறப்படுங்கள். ஏனெனில், ஆண்டவர் இந்நகரை அழிக்கப் போகிறார் என்றார். அவருடைய மருமக்களுக்கு இது நகைப்புக்குரியதாய்த் தோன்றியது.
அந்த மனிதர்கள் லோத்தின் கையையும், அவர் மனைவியின் கையையும், இரு புதல்வியர் கையையும் பிடித்துக் கொண்டுபோய் நகருக்கு வெளியே விட்டார்கள். ஆண்டவர் வானத்திலிருந்து சோதோம், கொமோரா நகர்களின்மேல் கந்தகமும் நெருப்பும் பொழியச் செய்தார். அந்நகரங்களையும் அவற்றைச் சுற்றியிருந்த சமவெளி முழுவதையும் அழித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்