தடம் தந்த தகைமை – கருப்பையிலேயே மோதிக்கொண்ட சகோதரர்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
ஆபிரகாமின் மகன் ஈசாக்கின் மனைவி ரெபேக்கா கருத்தரித்தார். ஆனால், அவருடைய கருப்பையில் இருந்த இரு புதல்வர்கள் தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டனர். அவருக்குப் பேறுகாலம் நிறைவுற்றபோது, முதலாவது வெளிவந்த பிள்ளை செந்நிறமாகவும் அவன் உடல் முழுவதும் முடிமயமாகவும் இருந்தது. எனவே, அவனுக்கு ‘ஏசா’ என்று பெயர் இட்டனர். இரண்டாவது பிள்ளை தன் சகோதரன் ஏசாவின் குதிங்காலைக் கையால் பற்றிக் கொண்டு வெளிவந்தான். எனவே, அவனுக்கு ‘யாக்கோபு’ என்று பெயரிடப்பட்டது.
இருவரும் வளர்ந்து இளைஞரானபோது, அவர்களுள் ஏசா வேட்டையில் வல்லவனாய், திறந்தவெளி மனிதனாய் வாழ்ந்துவந்தான். ஆனால், யாக்கோபு பண்புடையவனாய், கூடாரத்தில் உறைபவனாய் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் யாக்கோபு சுவையான கூழ் சமைத்துக் கொண்டிருந்தபொழுது, ஏசா களைத்துப்போய் திறந்தவெளியிலிருந்து வந்தான். அவன் யாக்கோபிடம், “நான் களைப்பாய் இருக்கிறேன். இந்த செந்நிறச் சுவையான கூழில் எனக்குக் கொஞ்சம் கொடு,” என்றான். யாக்கோபு அவனை நோக்கி, “உனது தலைமகனுரிமையை இப்போதே எனக்கு விற்றுவிடு” என்றான். அவன், “நானோ சாகப்போகிறேன். தலைமகனுரிமையால் எனக்கு என்ன பயன்?” என்றான். யாக்கோபு, “இப்போதே எனக்கு ஆணையிட்டுக் கொடு” என்றான். எனவே, ஏசா ஆணையிட்டுத் தலைமகனுரிமையை யாக்கோபுக்கு விற்றுவிட்டான். யாக்கோபு, ஏசாவுக்குக் கொஞ்சம் அப்பமும், சுவையான பயிற்றங்கூழும் கொடுக்க, அவனும் தன் வழியே சென்றான். இவ்வாறு, ஏசா தன் தலைமகனுரிமையை அவமதித்தான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்