கர்தினால் George Pell இறுதிச்சடங்கில் பங்கேற்ற திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் அருள்பணியாளர்கள் கர்தினால் George Pell இறுதிச்சடங்கில் பங்கேற்ற திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் அருள்பணியாளர்கள்   (ANSA)

கடவுள் மற்றும் திருஅவையின் மனிதர் கர்தினால் Georg Pell

உறுதியான மற்றும் தெளிவான தலைமைத்துவத்துடனும் ஆயர் பணிகளில் அயராத அர்ப்பணிப்புடன் மக்களை வழிநடத்தியவர் கர்தினால் Georg Pell

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மறைந்த கர்தினால் Georg Pell கடவுள் மற்றும் திருஅவையின் மனிதராகவும், ஆழ்ந்த இறைநம்பிக்கை கொண்டவராகவும் விளங்கியதுடன், அநீதியான முறையில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனைகளை மாண்போடும் உள்ளமைதியோடும் ஏற்றுக்கொண்டவர் எனவும் எடுத்துரைத்தார் கர்தினால்  Giovanni Battista Re

சனவரி 14, சனிக்கிழமையன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற மறைந்த கர்தினால் Georg Pell அவர்களின் இறுதிச்சடங்குத் திருப்பலியை நிறைவேற்றி மறையுரையாற்றிய போது இவ்வாறு கூறினார் கர்தினால் Re.

கடவுளின் மனிதராகவும் திருஅவையின் மனிதராகவும் திகழ்ந்த கர்தினால் Georg Pell அவர்கள், கிறிஸ்துவுக்கு உண்மையாக இருப்பதில் அக்கறை கொண்டவர் என்றும், தயக்கமின்றி துணிவுடன் அதைப் பாதுகாத்தவர் என்றும் குறிப்பிட்டார் கர்தினால் Re

மேற்கத்திய உலகில் பலவீனமடைந்து வரும் நம்பிக்கை மற்றும் குடும்ப நெருக்கடிகள் பற்றி அதிகம் வருந்திய கர்தினால் Georg Pell அவர்கள், வாழ்க்கையின் கடினமான நேரங்களில் நம்பிக்கையும் செபமும் எவ்வளவு உதவுகின்றன என்பதையும், அநீதியான முறையில் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆதரவாக, நீண்ட நாள்கள் சிறையில் இருந்த தனது அனுபவத்தை நாள்குறிப்பாகவும் எழுதி வெளியிட்டவர் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் Re

1966-ஆம் ஆண்டு அருள்பணியாளராக அருள்பொழிவு செய்யப்பட்ட கர்தினால் பெல் அவர்கள், உர்பானியானா பல்கலைக்கழகத்தில் இறையியல் படிப்பை முடித்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவயியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.

இறுதிச் சடங்கில் திருத்தந்தை
இறுதிச் சடங்கில் திருத்தந்தை

ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிய அவர், சில ஆண்டுகள் பல்கலைக்கழகப் பேராசிரியராகவும், 1987-ஆம் ஆண்டு மெல்பேர்னின் துணை ஆயராகவும், 2001-ஆம் ஆண்டு சிட்னி பேராயராகவும் பணியாற்றியவர்.

கர்தினால் பெல் உறுதியான மற்றும் தெளிவான தலைமைத்துவத்துடனும் ஆயர் பணிகளில் அயராத அர்ப்பணிப்புடனும் மக்களை வழிநடத்தியவர் என்றும், இதன் வழியாகத் தனது அறிவாற்றல் மற்றும் இதயத்தின் மகத்துவத்தை பிறருக்கு வெளிப்படுத்தியவர் என்றும் கூறினார் கர்தினால் Re

2008-ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த உலக இளைஞர் நாளை, மறைந்த திருத்தந்தை 16- ஆம் பெனடிக்ட் நிறைவு செய்தபோது கர்தினால் பெல் அவர்கள் காட்டிய அளவற்ற ஆர்வமும் இளைஞர்களிடம் உரையாற்றிய திறனும் இன்றும் பலரால் நினைவு கூரப்படுகின்றது என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் Re

கர்தினால் Giovanni Battista Re அவர்கள் தலைமையேற்று வழிநடத்திய இவ்விவிறுதிச் சடங்குத் திருப்பலியின் முடிவில் நடைபெற்ற திருச்சடங்கு நிகழ்வுகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பங்கேற்று சிறப்புச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 January 2023, 13:54