தீக்கிரையாக்கப்பட்ட விண்ணேற்பு அன்னை ஆலயம் தீக்கிரையாக்கப்பட்ட விண்ணேற்பு அன்னை ஆலயம்  

மியான்மாரில் வரலாற்றுச் சிறப்புமிக்க மரியன்னை ஆலயம் தீக்கிரை!

சான் தார் கிராமத்தில் தீக்கிரையாக்கப்பட்ட புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் 1894-ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி கட்டப்பட்டது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஜனவரி 15, இஞ்ஞாயிறன்று, மியான்மாரின் வடமேற்கு Sagaing-இன் Ye-U நகரப் பகுதியிலுள்ள சான் தார் கிராமத்தின் 129 ஆண்டுகள் பழமையான விண்ணேற்பு அன்னை ஆலயமும், அக்கிராம மக்களின் வீடுகளும் மியான்மாரின் ஜுன்டா படைகளால் தீக்கிரையாக்கப்பட்டதாக யூக்கான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 14, இச்சனிகிழமையன்று மாலை, மோதலால் பாதிக்கப்பட்ட Sagaing-விலுள்ள இக்கிராமத்திற்கு இராணுவம் வந்து பல வீடுகளுக்குத் தீ வைத்ததாகவும், உள்ளூர் கத்தோலிக்கர்கள் வழிபாட்டிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜனவரி 15, இஞ்ஞாயிறன்று அதிகாலையில் ஆலயத்திற்கும் தீ வைத்தனர் என்று, அம்மக்கள் கூறியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வரலாற்றுச் சிறப்புமிக்க எங்கள் அன்னையின் ஆலயம் அழிக்கப்பட்டதால் நாங்கள் மிகவும் துயருறுகிறோம் என்றும்,  இதுதான் எங்களின் இறுதி நம்பிக்கையாக இருந்தது என்றும் பாதுகாப்புக் கருதி பெயர் கூறவிரும்பாத கத்தோலிக்கர் ஒருவர் கூறியதாகவும் அச்செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

மேலும், மரியன்னையின் கெபியும் நற்கருணை ஆராதனை ஆலயமும் காப்பாற்றப்பட்டது. ஆனாலும், பங்குத்தந்தையின் இல்லமும், அருள்சகோதரிகளின் துறவுமடமும் முற்றிலும் தீயில் அழிந்துவிட்டன என்றும், கிராமத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டன என்றும்,  எட்டு மாதங்களில் கிராமத்தின் மீது நடக்கும் நான்காவது தாக்குதல் இது என்றும் அக்கிராம மக்கள் கூறியதாகவும் அச்செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.  

இராணுவ ஆட்சியை எதிருத்துவரும் மக்கள் பாதுகாப்புப் படைகள் இப்பகுதிகளைத் தங்களின் தளமாகக் கொண்டு செயல்படுகிறது என்ற சந்தேகத்தின் அடிப்படையில்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், இப்பகுதிகளில் ஏறக்குறைய 460 பொதுமக்கள் இராணுவத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஆட்சிக்கு எதிரான தேசிய மக்கள் அமைப்புத் தெரிவிக்கிறது (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 January 2023, 13:06