போலந்து நாட்டின் கிறிஸ்மஸ் பெருவிழா கொண்டாட்டத்தில் உக்ரேனியர்கள்  போலந்து நாட்டின் கிறிஸ்மஸ் பெருவிழா கொண்டாட்டத்தில் உக்ரேனியர்கள்   (AFP or licensors)

போரை விட வலிமையான அமைதியை விரும்புகிறோம் – பேராயர் Michal Janoch

மூன்று ஞானியர் அணிவகுப்பின் போது போலந்து மொழியில் மட்டுமல்லாது உக்ரேனிய மொழியிலும் கிறிஸ்மஸ் பாடல்கள் பாடப்பட்டது புதுமையை ஏற்படுத்தியுள்ளது - பேராயர் Michał Janocha.

மெரினா ராஜ் -வத்திக்கான்

உக்ரைன் மக்களுக்கும் அவர்கள் நாட்டிற்கும் போரை விட வலிமையான அமைதி மற்றும்  மரணத்தை விட வலிமையான நம்பிக்கை கிடைக்கப்பெற விரும்புகிறோம் என்று பேராயர் Michał Janocha. அவர்கள் தெரிவித்துள்ளார்.

சனவரி 06, வெள்ளியன்று, மூன்று ஞானியரின் வருகையைக் குறிக்கும் திருக்காட்சிப் பெருவிழாவன்று, போலந்து நாட்டின் வர்சா உயர்மறைமாவட்டத்தில் நடந்தப்பட்ட மூன்று ஞானியர் அணிவகுப்பின்போது இவ்வாறு கூறியுள்ளார் அவ்வுயர்மறைமாவட்டத்தின் துணைப்பேராயர் Janocha.

போலந்து நாட்டினரோடு ஏராளமான உக்ரேனிய அன்னையர்கள் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்ற இந்நிகழ்வில், உக்ரேனிய மக்களுக்கும் அவர்களது நாட்டிற்கும் போரை விட வலிமையான அமைதியும், மரணத்தை விட வலிமையான நம்பிக்கையும் கிடைக்க விரும்புகின்றோம் என்று கூறியுள்ளார் துணைப்பேராயர் Janocha

வழக்கமாக இவ்வணிவகுப்பில் பாடப்படும் கிறிஸ்மஸ் பாடல்கள் இவ்வாண்டு போலந்து மொழியில் மட்டுமல்லாது உக்ரேனிய மொழியிலும் பாடப்பட்டது புதுமையை ஏற்படுத்தியுள்ளது எனவும், விண்மீன்களைப் பின் தொடர்வோம் என்ற கருப்பொருளில் நடைபெறும் இவ்வணிவகுப்பு கிறிஸ்துவை சுட்டிக்காட்டும் நல்வழிகாட்டிகள் நம் ஒவ்வொருவருக்கும் தேவை என்பதை வலியுறுத்துவதாகவும் எடுத்துரைத்துள்ளார் துணைப்பேராயர் Janocha.  

திருக்காட்சிப் பெருவிழாவை முன்னிட்டு போலந்து நாட்டின் பல இடங்களில் நடைபெற்ற மூன்று ஞானியர் அணிவகுப்பில் பதினைந்தாம் ஆண்டாகிய இவ்வாண்டு (2023) ஏறக்குறைய 15 இலட்சம் மக்கள் பங்கேற்று வரலாறு படைத்துள்ளனர் என்று கூறியுள்ள துணைப்பேராயர் Janocha, இவ்வணிவகுப்பு மிகச்சிறப்பாக நடைபெற உதவிய போலந்தின் 800 காவல்துறையினருக்குத் தன் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

போலந்தில் 753 மூன்று ஞானியர் அணிவகுப்புகள், மற்றும் 12-க்கும் மேற்பட்ட ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், கேமரூன், ருவாண்டா மற்றும் ஜாம்பியா அணிவகுப்புகள் நடைபெற்றன. என்றும், ஏறக்குறைய 20 இலட்சம் மக்கள் ஒன்றிணைந்து,  நகரங்களிலும் வீடுகளிலுள்ள தொலைக்காட்சிகளிலும் இவ்வணிவகுப்பைக் கண்டு மகிழ்ந்தனர் என்றும் தெரிவித்துள்ளார் மூன்று ஞானியர் அணிவகுப்பு அறக்கட்டளையின் தலைவர் Piotr Giertych.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 January 2023, 15:28