திருத்தந்தை 5ஆம் பயஸ் திருத்தந்தை 5ஆம் பயஸ் 

திருத்தந்தையர் வரலாறு - திருத்தந்தை 5ஆம் பயஸ்

திருத்தந்தை 5ஆம் பயஸ் தேர்ந்தெடுக்கப்பட்டபோது கண்ணீர் விட்டு அழுது அதனை மறுத்தார். ஆனால் மக்களோ, ஒரு புனிதர் கிடைத்துவிட்டார் என மகிழ்ந்தனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

பல திறமை வாய்ந்த கர்தினால்களை திருஅவையில் நியமித்து, உறவினர்களின் தலையீட்டை ஒதுக்கி வைத்து, கட்டிடக்கலைக்கு நல்ல ஊக்கமளித்து, திரிதெந்து பொதுச்சங்கத்தில் ஆர்வம் காட்டி, திருஅவை சீர்திருத்தங்களுக்கு ஊக்கமளித்த திருத்தந்தை 4ஆம் பயஸுக்குப்பின் பொறுப்பேற்றார் திருத்தந்தை 5ஆம் பயஸ். இவர் திருஅவையின் 225வது திருத்தந்தை. இவரின் இயற்பெயர் Antonio Michele Ghislieri. வட இத்தாலியில் லொம்பார்தியின் போஸ்கோ என்னுமிடத்தில் 1504ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி பிறந்த  திருத்தந்தை 5ஆம் பயஸ், தொமினிக்கன் சபையினரின் உதவியுடன் நல்ல கல்வியைப் பெற்றதுடன், பக்தி முயற்சிகளிலும் சிறந்து விளங்கினார். அதே சபையில் சேர்ந்து தன் 24ம் வயதில் அருள்பணியாளராகி 16 ஆண்டுகள் இறையியலும் மெய்யியலும் கற்பித்தார். தொமினிக்கன் துறவுசபையில் நவதுறவு இல்ல அதிபராகவும், பல துறவு இல்லங்களின் அதிபராகவும் பொறுப்புக்களை வகித்தார். இவர் மிகுந்த பக்திமானாக விளங்கினார். செபதபங்களில் தன்னைப் புகுத்தி, தியானத்தில்  இரவு நேரங்களைச் செலவிட்டார். செருப்பின்றி ஆழ்ந்த அமைதியில் நடைப்பயணம் மேற்கொள்வதை இவர் விரும்பினார். தன் துறவு இல்ல அங்கத்தினர்களுடன் மட்டுமே இவர் உரையாடினார், அதுவும், கடவுளைப்பற்றி மட்டுமே பேசுவார். மற்ற நேரங்களில் ஆழ்ந்த அமைதியில் உறைவார். 1556ல் இவரை Sutriயின் ஆயராக அறிவித்தார் திருத்தந்தை 4ஆம் பவுல். 1557ல் கர்தினாலாக உயர்த்தப்பட்டார் இவர். திருத்தந்தை 4ஆம் பயஸ், 13 வயது சிறுவனான Ferdinand de' Mediciயை கர்தினாலாக அறிவிக்க முயன்றபோது எதிர்ப்பு தெரிவித்தவர் 5ம் பயஸே. மேலும், ஜெர்மன் பேரரசர் இரண்டாம் மேக்ஸிமிலியான், அருள்பணியாளர்கள் திருமணம் புரியலாம் என்ற திட்டத்தை அறிவித்து அதனை வெற்றிபெற செய்ய முயன்றபோது, அதனை வன்மையாக எதிர்த்து அத்திட்டத்தை தோல்வியடையச் செய்தவர் கர்தினால் அந்தோனியோ கிஸ்லியேரி அவர்களே(பின்னாள் திருத்தந்தை 5ஆம் பயஸ்). இவர் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது கண்ணீர் விட்டு அழுது அதனை மறுத்தார். ஆனால், இவர் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஒரு புனித பாப்பிறை கிடைத்துவிட்டார் என்பதில் மக்களுக்கு பெருமகிழ்ச்சி. இவர் பாப்பிறைப் பொறுப்பை ஏற்றவுடன் செய்த முதல் காரியமே, ஏழைகளுக்கு பொருளுதவி வழங்க ஆணையிட்டதுதான். இவர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு துறவியாகவும் ஆயராகவுமே செயலாற்றினார்.

இப்புனித திருத்தந்தை ஒவ்வொருநாளும் இரண்டுமுறை திருநற்கருணைமுன் முழந்தாள்படியிட்டு தனியாக தியானம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு திருத்தந்தையாக பெரிய பொறுப்பில் இருந்தும், அடிக்கடி மருத்துவமனைகளுக்குச் சென்று, நோயாளிகளுக்கு அருகே அமர்ந்து ஆறுதல் கூறுபவராக இருந்தார். ஏழைகளின் கால்களைக் கழுவியும், தொழுநோயாளிகளை அரவணைத்தும் தன் தாழ்மைப்பணியை வளர்த்துக்கொண்டார். ஒரு முறை இவர், புண்கள் தாங்கிய ஓர் இரந்துண்பவரின் கால்களை முத்தமிட்டதைக்கண்ட ஆங்கிலேய பிரபு ஒருவர், அப்போதே மனம்மாறி கத்தோலிக்க மதத்தில் இணைந்தார். திருப்பீடத்திற்குள் ஆடம்பரக் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்தார். தன்னுடைய நெருங்கிய நண்பர் புனித சார்ல்ஸ் பொரோமியோவுடன் இணைந்து, ஒழுக்கரீதியான வாழ்வை திருஅவை அதிகாரிகள் பின்பற்ற பெரிதும் பாடுபட்டார். காளைகளை அரங்கினுள் விட்டு சண்டையிடும் கேளிக்கை விளையாட்டை(ஜல்லிக்கட்டை ஒத்தது) உரோம் நகரில் தடை செய்ததும் இப்புனித திருத்தந்தைதான். துருக்கிய ஆக்கிரமிப்பு முயற்சிகளுக்கு எதிராக கிறிஸ்தவ மன்னர்களை ஒன்று திரட்டுவதில் அதிக அக்கறை காட்டினார். ஏழை திருஅவைகளுக்கு நிதியுதவிகள் வழங்கினார். இவர்காலத்தில்தான் துருக்கியர்களுக்கு எதிரான கிறிஸ்தவர்களின் போர் வெற்றியடைந்தது (1571 அக்டோபர் 7, Lepanto போர் வெற்றி). அந்த வீழ்ச்சியிலிருந்து துருக்கி மீண்டும் எழவே முடியவில்லை. இந்த வெற்றியின் நினைவாக அக்டோபர் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று செபமாலையின் திருவிழாவை உருவாக்கினார் இத்திருத்தந்தை. இஸ்லாமிய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக இத்தாலிய நகர்களையும், போலந்து, பிரான்ஸ் மற்றும் ஏனைய கிறிஸ்தவ அரசுகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியின்போது 1572ஆம் ஆண்டு மே மாதம் முதல்தேதி காலமானார் திருத்தந்தை 5ஆம் பயஸ். தான் இறக்கும் தறுவாயில் கூட “கடவுளே என் வேதனைகளையும் பொறுமையையும் அதிகரித்தருளும்” என வேண்டிய திருத்தந்தை 5ம் பயஸ் அவர்கள், 1672ம் ஆண்டு திருத்தந்தை பத்தாம் கிளமெண்டால் அருளாளராகவும், 1712ம் ஆண்டு திருத்தந்தை 11ம் கிளமென்டால் புனிதராகவும் அறிவிக்கப்பட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 January 2023, 14:20