திருத்தந்தை 5ம் சிக்ஸ்டஸ் திருத்தந்தை 5ம் சிக்ஸ்டஸ்  

திருத்தந்தையர் வரலாறு – திருத்தந்தை 5ம் சிக்ஸ்டஸ்

கொள்ளையர்களை அடக்கி, திருத்தந்தையின் ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளை ஐரோப்பாவிலேயே பாதுகாப்பான இடமாக மாற்றியவர் திருத்தந்தை 5ம் சிக்ஸ்டஸ்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அன்புள்ளங்களே! கடந்தவாரம் திருத்தந்தை 13ஆம் கிரகரி குறித்து நோக்கினோம். 13 ஆண்டு காலம் திருஅவையை வழிநடத்திய திருத்தந்தை 13ஆம் கிரகரி, 1585ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ந்தேதி உரோம் நகரில் காலமானபோது, கர்தினால் அவையால் தேர்ந்தெடுக்கப்பட்டார் திருத்தந்தை 5ம் சிக்ஸ்டஸ். Felice Peretti என்ற இயற்பெயர் கொண்ட இவர் 1521ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ந்தேதி இத்தாலியின் Grottamare எனுமிடத்தில் பிறந்தார். Montaltoவின் Minorite துறவுமடத்தில் தன் 12ஆம் வயதிலேயே நவத்துறவியாக இணைந்த இவர், 1547ல் இத்தாலியின் சியென்னா நகரில் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார். நல்ல ஒரு மறையுரையாளராக புகழ்பெற்றிருந்த இவர், 1552ல் உரோம் நகரில் தவக்கால மறையுறைகளை வழங்கியபோது மேலும் புகழ்பெற்றார். கர்தினால்களின் ஆதரவும் கிட்டியது. புனிதர்கள் பிலிப் நேரியும் இஞ்ஞாசியாரும் கூட இவரின் மறையுரைகளால் கவரப்பட்டனர். 1560ல் திருப்பீட ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அது மட்டுமல்ல, புகழ்பெற்ற Sapienza பல்கலைக்கழக பேராசிரியராகவும், தான் சார்ந்திருக்கும் துறவுசபை பொருளாளராகவும் பதவி வகித்தார். 1566ல் இவரை ஆயராக நியமித்த திருத்தந்தை 5ஆம் பயஸ், பின்னர் தன் ஆன்மீக குருவாகவும் நியமித்தார். அதே திருத்தந்தை 1570, மே மாதம் 17ஆம் தேதி இவரை கர்தினாலாகவும் உயர்த்தினார். 1585ல் திருத்தந்தை 13ஆம் கிரகரி இறந்தவுடன் கூடிய கர்தினால்கள் அவை, 4 நாட்களில் இவரைத் தேர்ந்தெடுக்க, இவரும் 5ஆம் சிக்ஸ்டஸ் என்ற பெயரைத் தேர்ந்துகொண்டார். இவரின் முதல்பணி, இத்தாலியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதாக இருந்தது.

 திருத்தந்தை 5ம் சிக்ஸ்டஸ் பொறுப்பேற்ற  காலத்தில் கொள்ளையர்களின் ஆதிக்கம் மிக அதிகமாக இருந்தது. வரலாற்று ஆசிரியர்களின் கணக்குப்படி, அந்த காலக்கட்டத்தில் 12 முதல் 27 ஆயிரம் கொள்ளையர்கள் இத்தாலியை நடுங்க வைத்துக் கொண்டிருந்ததாக தெரியவருகிறது. இவர்களை எல்லாம் அடக்கினார் திருத்தந்தை. ஐரோப்பாவிலேயே பாதுகாப்பான இடம், திருத்தந்தையின் ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளே என்று கூறும் அளவிற்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டினார். அதேவேளை, திருப்பீடத்திற்கான நிதி ஆதாரங்களிலும் கவனம் செலுத்தினார். நிறைய கட்டிடங்களைக் கட்டியதுடன், சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு நிறைய பணம் செலவழித்தபோதிலும், திருப்பீடக் கருவூலம் இவர் காலத்தில் நிரம்பியே இருந்தது. புனித பேதுரு பேராலயத்தின் உச்சியில் அரைவட்ட வடிவிலான பெரிய கோபுரம் இவர் காலத்தில்தான் நிறைவுற்றது. உரோமை நகரின் முக்கியப் பேராலயங்கள் முன் உயர்ந்த நினைவு கல்தூண்களை நாட்டியவரும் இவரே. பல பெரிய சாலைகளை அமைத்தார். மேலும், 20 மைல்களுக்கு அப்பாலிருந்து உரோம் நகருக்கு தண்ணீர் கொணர்ந்தவரும் இத்திருத்தந்தையே. கர்தினால்களின் எண்ணிக்கை 70ஐ தாண்டக்கூடாது என சட்டம் கொண்டுவந்ததுடன், 15 திருப்பேராலயங்களையும் உருவாக்கினார் திருத்தந்தை 5ம் சிக்ஸ்டஸ். இவர் 1590ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ந்தேதி இறைபதம் சேர்ந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 January 2023, 11:25