சைகை மொழி நாளுக்கான படம்  சைகை மொழி நாளுக்கான படம்  

சைகை மொழியில் நற்செய்தி அறிவிக்கும் கொரிய ஆயர் பேரவை

செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள் சமூகத்தின் முழு உறுப்பினர்கள், கடவுளால் அன்பு செய்யப்படும் குழந்தைகள் என்பதை உணர வைக்க வேண்டும்.

 

மெரினா ராஜ் – வத்திக்கான்

செவித்திறன் குறைபாடு உள்ள சிறார் மற்றும் பெரியவர்களுக்கு கடவுளின் வார்த்தையை மறைக்கல்வி வழியாக அறிவிக்க, சைகை மொழிக் காணொளிக் காட்சிகள் என்னும் புதிய ஊடக கருவிகளைக் கொரிய கத்தோலிக்க மேய்ப்புப்பணி ஆராய்ச்சி நிறுவனத்தின் வழியாக செயல்படுத்துகின்றது கொரிய ஆயர் பேரவை.

சனவரி 22 ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்ட இறைவார்த்தை ஞாயிறானது கொரிய கத்தோலிக்க மேய்ப்புப்பணி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்முயற்சியால் சைகை மொழியில் மறைக்கல்வி பாடங்கள் காணொளிக் காட்சிகளாக செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கென்று வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டது.  

சைகைமொழி பணியை ஆதரிக்க விரும்பிய கொரியாவின் ஆயர் பேரவை, சமூக எதார்த்தங்களைச் சந்திப்பதற்கான போதுமான வழிகள் இல்லாததால் செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள் பெரும்பாலும் ஒதுக்கப்பட்ட நிலையில் இருக்கின்றனர் என்றும், கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படை உள்ளடக்கங்களை வழங்குவதன் வழியாக கடவுளுடைய வார்த்தையைக் கேட்கவும், அதைப் பிரதிபலிக்கவும் அவர்களுக்கு வாய்ப்பளிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

கொரிய கத்தோலிக்க மேய்ப்புப்பணி ஆராய்ச்சி நிறுவனம்

கொரிய கத்தோலிக்க மேய்ப்புப்பணி ஆராய்ச்சி நிறுவனம், என்பது கொரியாவின் ஆயர் பேரவையின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனமாகும். அருள்பணி Cho Jo-hee தலைமையிலான "பூசன் கத்தோலிக்க செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள் மறைப்பணி" வீடியோக்களை சைகை மொழியில் மொழிபெயர்த்து தயாரித்து அளித்துள்ள நிலையில், ஏராளமான செவித்திறன் குறைபாடு உள்ளவர்களும், தன்னார்வலர்களும் சைகை மொழி காணொளிக்காட்சி விளக்கத்தில் பங்கேற்றனர்,

Catholic Video Doctrine என்னும் கத்தோலிக்க காணொளிக் காட்சிக் கோட்பாட்டின் 47 இயல்கள் ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள அனைத்து மறைமாவட்டங்களிலும் நற்செய்தி அறிவிப்பு மற்றும் மறைக்கல்வியில் துணைப்பாடப் புத்தகமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், தகவல் தொடர்பில் சிரமங்களை எதிர்நோக்கும், செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள் கவனத்தை ஈர்த்து, சமூகத்தின் முழு உறுப்பினர்களாக அவர்களை உணர வைக்கவும், அவர்கள் தாங்கள் கடவுளால் அன்பு செய்யப்படும் குழந்தைகள் என்பதை உணர வைக்கவும், இது உருவாக்கப்பட்டுள்ளது.

கொரிய கத்தோலிக்க தலத்திருஅவை ஆசியாவின் முதல் செவித்திறன் குறைபாடு உள்ள அருள்பணியாளரைக் கொண்டுள்ளது.

அருள்பணி Min Seo Park, 2007ஆம் ஆண்டு சியோலில் அருள்பணியாளராக நியமிக்கப்பட்டு, 14 வருட பணிக்குப் பிறகு,  செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள் மத்தியில் பணியாற்றி, தற்போது அமெரிக்காவில் உள்ள Maryland பகுதியில் மறைப்பணியாளராக, செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுடன் இணைந்து நற்செய்தியை அறிவிக்கும் பணியைத் தொடர்ந்து செய்து வருகின்றார். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 January 2023, 13:57