கீழைத் திருஅவைக்கென்று நீண்ட மற்றும் வளமான வரலாறு உள்ளது
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நம்பிக்கையாளர்களின் தேவைகளுக்கு முதலில் நாம் செவிமடுக்க வேண்டும் என்று வத்திக்கான் செய்திக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கூறினார் சிரியாக் (Syriac Catholic) கத்தோலிக்கப் பேராயர் Youhanna Jihad Battah
பிப்ரவரி 13, இத்திங்களன்று, லெபனோனின் தலைநகர் பெய்ரூத்தில் தொடங்கிய மத்திய கீழை வழிபாட்டு முறை நாடுகளுக்கான கண்டங்களின் Synodal பேரவைக் கூட்டத்தின் இடைவேளையில் வத்திக்கான் செய்திக்கு வழங்கிய குறுகிய நேர்காணலில் இவ்வாறு தெரிவித்த பேராயர் Battah அவர்கள், நமபிக்கையாளர்களின் தேவைகளை அறிந்துவைத்துள்ள நாம் வெறும் உத்தரவுகளை மட்டுமே வழங்க முடியாது என்றும் கூறினார்.
இளையோரையும் பொதுநிலையினரையும் ஆயர் மாமன்றத்தில் பங்கேற்க அழைக்குமாறு, தனது சக ஆயர்களையும் சகோதரர்களையும் கேட்டுக்கொண்டுள்ளதாகக் கூறிய பேராயர் Battah அவர்கள், உலக ஆயர் மாமன்றத்தில் மட்டுமல்ல, கீழை வழிபாட்டுத் தலத்திருஅவைகளின் ஆயர் மன்றங்களைக் கருத்தில்கொண்டும் இவ்வாறு கூறுவதாகத் தெரிவித்தார்.
கீழை கிறிஸ்தவ ஒன்றிணைந்த பயணத்திற்கென்று நீண்ட மற்றும் வளமான வரலாறு உள்ளது என்று கூறிய பேராயர் Battah அவர்கள், மாரோனைட் திருஅவையில் பெண் மன்றத்திற்கென போற்றத்தக்க சிறப்பு உள்ளது, அவ்வாறே சிரியாக் கத்தோலிக்க (Syriac Catholic) திருஅவைக்கென்று தனிப்பட்ட விதத்தில் இளையோர் மன்றம் உள்ளது என்றும் விளக்கியதுடன், இவைகள் இரண்டும் இணைந்து சிரியாவிலுள்ள அனைத்து இளையோரையும் ஒன்றிணைந்து வர முயற்சித்தது என்றும் எடுத்துரைத்தார்.
'ஒன்றிணைந்த பயணம்' என்பது ஆயர்களுக்குத் தேவை என்றும், இது நம்பிக்கையாளர்களின் தேவைகளுக்கு செவிமடுக்க அனுமதிப்பதால், அவர்களின் தேவைகளைப் பற்றி அறியாமல் நாம் உத்தரவுகளை வழங்கவோ ஆணையிடவோ முடியாது என்றும் வலியுறுத்தினார் பேராயர் Battah.
சிரியா மற்றும் லெபனோனில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை மற்றும் பல நாடுகளிலிருந்து இளைஞர்கள் வெளியேறுவது போன்ற நெருக்கடிகளைக் குறிப்பிட்டு பேசிய பேராயர் Battah அவர்கள், நாம் பங்கேற்கும் முன், ஒன்றிணைந்து நடக்கும் முன், நாம் பாதுகாப்பாக இருப்பதை முதலில் உறுதிசெய்ய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்