கர்தினால் Hollerich கர்தினால் Hollerich  

ஆசிய ஆயர் பேரவைகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நிறைவுக்கு வந்தது

29 ஆசிய நாடுகளின் 80க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற ஆயர்கள் கூட்டத்தில், ஆசிய நாடுகளின் உண்மை நிலைகள், அனுபவங்கள் மற்றும் அக்கறைகள் விவாதிக்கப்பட்டன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வத்திக்கானில் நிறைவுற இருக்கும் ஒருங்கிணைந்து நடத்தல் பற்றிய உலக ஆயர் மாமன்றக் கூட்டத்திற்கு தயாரிப்பாக தாய்லாந்தின் பாங்காக்கில் இடம்பெற்ற மூன்று நாள் ஆசிய ஆயர் பேரவைகளின் ஒருங்கிணைந்த பயணக்கூட்டம் பிப்ரவரி 26, ஞாயிற்றுக்கிழமையன்று நிறைவுக்கு வந்தது.

29 ஆசிய நாடுகளின் 80க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஐந்து முக்கிய தலைப்புகளின்கீழ், ஆசிய நாடுகளின் உண்மை நிலைகள், அனுபவங்கள் மற்றும் அக்கறைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இந்த ஆயர்கள் கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் கராச்சியின் முன்னாள் பேராயர் கர்தினால் Joseph Coutts அவர்கள், ஒருங்கிணைந்து நடத்தலுக்கும் தவக்காலப் பயணத்திற்கும் இருக்கும் நெருங்கியத் தொடர்பு குறித்து எடுத்துரைத்தார்.

பங்கேற்பாளர்கள் கலந்துரையாடலின் போது
பங்கேற்பாளர்கள் கலந்துரையாடலின் போது

இரு பயணங்களிலும் நாம் இறைவழியில் நடக்க அழைக்கப்பட்டு, அவர் குரலுக்குச் செவிமடுப்பவர்களாக, அன்பு மற்றும் இரக்கத்தின் கடவுளை கண்டுகொள்ள எதிர்பார்க்கப்படுகின்றோம் என்றார் கர்தினால் கூட்ஸ்.

ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர் கர்தினால் சார்லஸ் முவாங் போ அவர்கள் வழங்கிய மறையுரையில், ஒருங்கிணந்து நடக்கும் திருஅவை முன்வைக்கும் சவால்கள் குறித்து எடுத்துரைத்தார். ஒருங்கிணைந்து நடக்கும் திருஅவையின் பயணமானது, பாலைவனத்தில் இயேசுவின் பயணம் போன்று நமக்கு தேவையானது மற்றும் சவால் நிறைந்தது என்றார்.

மூன்று நாள் கூட்டத்தின் இறுதி நாளான ஞாயிறன்று நிறைவுத் திருப்பலியை தலைமை தங்கி நடத்திய கர்தினால் போ அவர்கள், தற்போதய தவக்காலப் பயணம் போன்ற நம் திருஅவையின் ஒருங்கிணைந்த பயணம், அனைத்துத் தடைகளையும் கடந்ததாக, பாதையில் கடவுளை கண்டு கொள்வதாக, நல்ல சமாரியர் போல் மற்றவர்களுக்கு உதவுவதாக, நம்மையே புதுப்பிப்பதாக இருக்க வேண்டும் என அழைப்புவிடுத்தார். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 February 2023, 14:32