தாவீது அரசர் தாவீது அரசர்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 37-4 ‘கெடுவான் கேடு நினைப்பான்’

பொல்லார் செய்யும் தீச்செயல்களாலேயே அவர்கள் அழிந்துவிடுவர் என்பதை உணர்ந்து ஆண்டவரைத் தேடுவதிலும், அவருக்குகந்த செயல்களைச் செய்வதிலும் நாம் மன உறுதியுடன் இருப்போம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘அமைதியுடன் காத்திருப்போம்!’ என்ற தலைப்பில் 37-வது திருப்பாடலில் 07 முதல் 09 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 10 முதல் 15 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது அவ்வார்த்தைகளை வாசித்து நமது சிந்தனைகளை ஆழப்படுத்துவோம்.  

திருப்பாடல் 37 - 4

இன்னும் சிறிதுகாலம்தான்; பிறகு பொல்லார் இரார்; அவர்கள் இருந்த இடத்தில் நீ அவர்களைத் தேடினால் அவர்கள் அங்கே இரார். எளியோர் நிலத்தை உடைமையாகப் பெறுவர்; அவர்கள் வளமிகு வாழ்க்கையில் இன்பம் காண்பர். பொல்லார் நேர்மையாளருக்குத் தீங்கிழைக்கத் திட்டமிடுகின்றனர்; அவர்களைப் பார்த்துப் பல்லை நெரிக்கின்றனர். என் தலைவர் அவர்களைப் பார்த்து எள்ளி நகைக்கின்றார்; அவர்களது முடிவுகாலம் நெருங்குவதை அவர் காண்கின்றார். எளியோரையும் வறியோரையும் வீழ்த்தவும், நேர்மையான வழியில்  நடப்போரைக் கொல்லவும் பொல்லார் வாளை உருவுகின்றனர்; வில்லை நாணேற்றுகின்றனர். ஆனால், அவர்கள் வாள் அவர்கள் நெஞ்சிலேயே பாயும் (வசனம் 10-15).

‘எனக்குக் கெடுதல் செய்வேண்டுமென நினைத்த என் எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டனர்’ என்று நாம் அடிக்கடி கூறக் கேள்விப்பட்டிருப்போம். ஏறத்தாழ தாவீதின் மனதும் இப்படித்தான் சிந்திக்கின்றது. என்னதான் நமது எதிரிகள் நம்மை ஒழித்துவிட வேண்டுமென திட்டமிட்டு செயல்பட்டாலும், எளியவருக்கு உரியவற்றை ஆண்டவர் எப்போதும் தந்தருள்வார் என்று தாவீது அரசர் ஆண்டவர்மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். இதன் காரணமாகவே, ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்; வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார்; உயர்குடி மக்களிடையே – தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே – அவர்களை அமரச் செய்கின்றார் (திபா 113:7) என்றும், வறியோரின் வலப்பக்கம் அவர் நிற்கின்றார்; தண்டனைத் தீர்ப்பிடுவோரிடமிருந்து அவர்களது உயிரைக் காக்க நிற்கின்றார் (திபா 109:31) என்றும், எளியோரை அவர் துன்ப நிலையினின்று தூக்கிவிட்டார், அவர்கள் குடும்பங்களை மந்தை போல் பெருகச் செய்தார் (திபா 107:41) என்றும் வேறுசில திருப்பாடலிகளிலும் எடுத்துரைப்பதன் வழியாக, எளியோர் தங்களுக்கு உரியவற்றை பெறுவர் என்ற வார்த்தைக்கு வலு சேர்கின்றார் தாவீது அரசர். மேலும், புழுதியினின்று அவர் ஏழைகளை உயர்த்துகின்றார்; குப்பையினின்று வறியவரைத் தூக்கிவிடுகின்றார்; உயர்குடியினரோடு அவர்களை அமர்த்துகின்றார்! மாண்புறு அரியணையை அவர்களுக்கு உரிமையாக்குகின்றார்! (1 சாமு 2:8) என்று சாமுவேல் முதல் நூலில் அன்னா வேண்டுதல் செய்வதை நாம் காண்கின்றோம். கருவுற இயலாத நிலையில் இருந்த அன்னாவுக்கு தன் சொந்த உறவுகளே எதிரிகள் ஆயினர். ஆனாலும் அவர் ஆண்டவராம் கடவுள்மீது கொண்டிருந்த நமபிக்கையை இழக்கவில்லை. அவருடைய இடைவிடாத இறைவேண்டல்களைக் கேட்ட கடவுள் அவருக்கு ஒரு ஆண் மகவைத் தந்தருளினார். அவர்தான் இறைவாக்கினரான சாமுவேல். தாவீதை இஸ்ரயேல் மக்களின் அரசராக அருள்பொழிவு செய்தவர் இவர்தான்.  

ஒரு குளத்தில் நி​றைய மீன்கள் இருந்தன. அதில் ஒரு நண்டும் இருந்தது. நண்டும் மீன்களும் நல்ல நண்பர்களாக இருந்தனர். ஒருநாள் அந்தக் குளத்துக்கு ஒரு ​பெரிய ​கொக்கு ஒன்று வந்தது. அது அங்கிருக்கும் சிறு சிறு பூச்சிகளையும் ​​பெரண்​டைக் குஞ்சுக​ளையும் இரையாக்கிக் கொண்டிருந்தது. ஒருநாள் எப்படியாவது இந்தக் குளத்தில் இருக்கிற மீன்களைப் பிடித்துத் தின்று விட வேண்டுமென்கிற ஆசை அதற்கு வந்தது. ஆனால், அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. காரணம், அதன் ஆசைக்கு ​நண்டுதான் தடையாய் இருந்தது. அதனால், அந்த நண்​டையும் ஏமாற்றிக் கொன்று தின்று விடவேண்டுமென்று நினைத்த கொக்கு, அதற்காகத் தனித் திட்டம் ஒன்றையும் தீட்டியது. ஒரு நாள் கொக்கு நண்டைப் பார்த்து, “இந்தக் குளத்தில் இருக்கிற மீன்களைப் பிடிக்கப் ​போவதாக இந்த ஊரில் இருப்பவர்கள் பேசிக் கொள்கிறார்கள். பாவம் இந்த மீன்க​ளெல்லாம் இந்த ஊர்க்காரர்களின் உணவாகப் ​போகிறது” என்று ​சொன்னது. இதைக் ​கேட்டதும் நண்டும் மீன்களும் மிகவும் பயந்து​நடுங்கின. அப்போது அந்த நண்டு, “நீ உண்​மையைத்தான் ​சொல்கிறாயா… இல்லை, இந்த மீன்களைக் ​கொல்வதற்கான வழியைத் ​தேடுகிறாயா...?” என்று கேட்டது. அதற்கு அந்தக் ​கொக்கு அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு, “சத்தியமாக உண்மையைத்தான் ​சொல்கி​றேன்... இந்த ஊர்க்காரர்கள் நேற்று பேசிக் கொண்டிருந்ததை என் காதால் ​கேட்​டேன்... அதனால்தான் உன்னிடம் அந்தத் தகவலைச் சொல்லி, மீன்களை எச்சரிக்கலாமென்று நினைத்தேன்” என்று சொல்லிவிட்டுப் பறந்து போய் விட்டது. நண்டுக்கும் கொக்கு சொன்னது உண்மையாக இருக்கும் என்பது போல் தோன்றியது. மறுநாள், அங்கு வந்த ​கொக்கு நண்டைப் பார்த்து, “இந்த மீன்களைக் காப்பாற்ற நீ என்ன முடிவு செய்திருக்கிறாய்?” என்று கேட்டது. அதற்கு நண்டு, “எனக்கு ஒரு வழியும் தோன்றவில்லை. நீயே நல்லதொரு யோசனையைச் சொல்” என்று கொக்கிடமே கேட்டது.

அந்தக் ​கொக்கு நயவஞ்சகமாக, நமக்கு நல்ல உணவு கி​டைக்கப் ​போகிறது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, “இங்கிருந்து சென்றால் சிறிது தூரத்தில் நீர்நிரம்பிய ஒரு குளமிருக்கிறது. அங்கு மீன்கள் அதிகமில்லை. நான் வேண்டுமானால், ஒவ்வொரு மீனாக இங்கிருந்து தூக்கிக் கொண்டு போய் அந்தக் குளத்தில் விட்டுவிட்டு வருகிறேன். நீ விருப்பப்பட்டால் உன்னைக் கூட முதலில் அங்கு கொண்டு போய் விடுகிறேன்” என்றது. நண்டுக்கும் அது சரி என்று பட்டது. நண்டு தனது மீன்களிடம் கொக்குவின் யோசனையைத் தெரிவித்தபோது. மீன்களும் அந்த யோசனையை ஏற்றுக் கொண்டன. பின்னர் கொக்கு ஒவ்வொரு மீனாகத் தூக்கிக் கொண்டு போய் ஆசை தீர சாப்பிட்டது. தன்னுடைய பசி தீரவும் மீதமிருந்த மீன்களை அடுத்த நாள்களில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தபடி அங்கிருந்த பாறை ஒன்றில் காயப் போட்டு வைத்தது. இறுதியாக நண்டு மட்டும்தான் மிஞ்சியிருந்தது. கொக்கு மனதிற்குள் இந்த நண்டையும் கொன்று தின்று விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டது. கொக்கு அந்த நண்டைத் தூக்கிக் கொண்டு பறந்து சென்றுகொண்டிருந்தபோது கீழே பா​றையில் தன்னுடைய நண்பர்களான மீன்களைக் கொன்று காயப் போட்டிருந்ததைப் பார்த்தது. இந்தக் கொக்குத் தன்னை நன்கு ஏமாற்றிவிட்டது என்பதைத் தெரிந்து கொண்டது. தன்னையும், தன் நண்பர்களையும் ஏமாற்றிய கொக்கைப் பலி வாங்கும் நோக்கத்துடன் நண்டு கொக்கிடம் பேசியபடி அதன் கழுத்தைத் தன் கால்கள் இறுக்கி நெறிக்கத் தொடங்கியது. கொக்கு நண்டுவின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாமல் இறந்து கிழே விழுந்தது.

இவ்வுலகில் எதிரிகள் தங்களின் கொடியத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு எல்லா வகையான காரியங்களையும் செய்வார்கள். அதாவது, தங்களது ஏமாற்று வித்தைகளை காட்டுவார்கள், பொய்யுரைப்பார்கள், போலியாகப் பேசுவார்கள். ஆனாலும், இவர்களின் மாய வலைகளில் சிக்கிக்கொள்ளும் அபலை மக்களை ஆண்டவர் இறுதியில் விடுவிப்பார் என்பதைத்தான் தாவீது அரசர் நமக்கு எடுத்துக்காட்டுகின்றார். நாம் மேற்காணும் இந்த இறைவார்த்தைகளில் மன்னர் சவுல் தனக்கிழைத்த கொடுஞ்செயல்களை மனதில் கொண்டே தாவீது அரசர் இந்த வார்த்தைகளை எழுதியிருக்கின்றார் என்பதை நம்மால் அறிய முடிகிறது. மன்னர் சவுல் தாவீதை பழிதீர்க்கும் பொருட்டு எப்படியெல்லாம் அவரை ஏமாற்ற முனைந்தார் என்பதையும் அவரது வாழ்விலிருந்து நாம் அறிந்துகொள்கின்றோம். பொல்லார் வழியில் தாவீதின் உயிரைப் பறிக்கத் தேடிய சவுல் இறுதியில் பேரழிவினை சந்தித்தார். அதாவது, பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்கு எதிராகப் போரிட்டபோது, அப்போரில் தோல்வியுற்ற மன்னர் சவுல், எதிரிகளின் கையில் தான் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதற்காக அவர் தம் வாளை எடுத்து, தாமே அதன்மீது வீழ்ந்து மடிந்தார் (காண்க 1 சாமு 31:3-4). இதன் காரணமாகவே, எளியோரையும் வறியோரையும் வீழ்த்தவும், நேர்மையான வழியில்  நடப்போரைக் கொல்லவும் பொல்லார் வாளை உருவுகின்றனர்; வில்லை நாணேற்றுகின்றனர். ஆனால், அவர்கள் வாள் அவர்கள் நெஞ்சிலேயே பாயும் என்று எடுத்துரைக்கின்றார் தாவீது அரசர்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு. (குறள் 204) என்ற திருக்குறளில், மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே. அப்படி எண்ணினால் எண்ணியவனுக்கு அந்த அறமே தீமையை விளைவிக்கும் என்கின்றார் வள்ளுவர். ஆகவே, பொல்லார் செய்யும் தீச் செயல்களாலேயே அவர்கள் மடிந்து அழிந்துவிடுவர் என்பதை மனதில் கொண்டவர்களாய், ஆண்டவரைத் தேடுவதிலும், அவருக்குகந்த செயல்களைச் செய்வதிலும் நாம் மன உறுதியுடன் இருப்போம். அதற்கான அருள்வரங்களுக்காக ஆண்டவரிடத்தில் இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 February 2023, 14:50